அட்வான்ஸ் அம்போ! அர்ஜுனிடம் கமிட் ஆன ஒரு அப்பாவியின் ஸ்டோரி?
சுயநலம் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு திரையில் வெடிக்கும் நட்சத்திரங்கள் நிஜ வாழ்வில் எப்படியிருக்கிறார்கள் பாருங்கள்? சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல போயிருந்தார் ஒரு இயக்குனர். அது காக்கி யூனிபார்ம் போட்ட கம்பீர போலீஸ் கதை. டைரக்டரை கதை சொல்ல அனுப்பியவர் இந்த விபரத்தை முன்னாடியே சொல்லிவிட்டாராம். அதுக்கென்ன? லம்ப்பா ஒரு அட்வான்ஸ் கொடுத்துட சொல்லுங்க. மிச்சத்தை ஷுட்டிங் நடக்க நடக்க வாங்கிக்கிறேன் என்று கூறிவிட்டு டைரக்டரையும் வரவழைத்துவிட்டார் அர்ஜுன்.
அவர் கதை சொல்ல ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே, ‘இந்த கொழுக்கட்டை ஏற்கனவே நம்ம இட்லி பானையில் வெந்துகிட்டு இருக்கே’ என்ற உண்மை புரிந்துவிட்டதாம் அர்ஜுனுக்கு. இருந்தாலும், ‘இதே போலொரு கதையில் நான் நடிச்சுகிட்டு இருக்கேன்’ என்று சொன்னால், வந்த ஆளு வழுக்கிட மாட்டாரா? பொறுமையாக கதையை கேட்டவர், “கதை நல்லாயிருக்கு. நாளைக்கு வந்து இவ்ளோ அட்வான்ஸ் கொடுத்துருங்க. அதுக்கப்புறம் தேதிகள் சொல்றேன்” என்று அனுப்பி விட்டார். எல்லாம் அவர் நினைத்தபடியே நடந்தது. சில நாட்கள் கழித்து டைரக்டரை அழைத்த அர்ஜுன், “இந்தாங்க” என்றொரு வீடியோ சிடியை கொடுத்தாராம்.
“நீங்க இந்த படத்துலேர்ந்துதானே கதையை சுட்டீங்க? இதே கதையை சுட்டு இன்னொருத்தர் என்னை வச்சு படம் எடுத்து முடிச்சுட்டாரு. ஆடியோ ரிலீஸ் வர்ற மாசம் நடக்கப் போவுது. அதனால் வேற டி.வி.டி ஒண்ணு கிடைச்சா பார்த்துட்டு கதையை ரெடி பண்ணிட்டு வாங்க. கேட்கிறேன். படம் எடுப்போம்” என்று கூற, பேரதிர்ச்சியாகிவிட்டாராம் புது டைரக்டர்.
அதற்கப்புறம் அர்ஜுன் சொன்னதுதான் வியப்பின் உச்சம். “ப்ரோ… உங்க தயாரிப்பாளர்ட்ட இருந்து வாங்கிய பணம் செலவாயிருச்சு. அட்வான்சை திருப்பிக் கொடுங்கன்னு மட்டும் வந்துராதீங்க. வேற டி.விடிய பார்த்து கதையோட வாங்க” என்றாராம்.
கொடி காத்த குமரனுங்கள்லாம் இப்படியிருந்தா, கோடம்பாக்கம் எப்படி உருப்படும்?