ஐ ஸாங் ஷுட்டிங்! பாதியில் ஓடிய எமி… சங்கடத்தில் ஷங்கர்?
ஷங்கரின் ஐ படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், இன்னும் ஒரு பாடல் காட்சி மீதமிருக்கிறதாம். இதற்காக சென்னை பிரசாத் லேபில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வந்தது. விக்ரம், எமி இருவருக்குமான காதல் பாடல் அது. வெளிநாட்டிலிருந்த எமியிடம் விசேஷ கால்ஷீட் வாங்கி வரவழைத்திருந்தார் ஷங்கர். ஆசை ஆசையாக வந்த எமி மூன்றாம் நாளே படப்பிடிப்புக்கு அல்வா கொடுத்துவிட்டு எடுத்திருக்கிறார் ஒட்டம். எல்லாம் காசு செய்த கலவரம் என்கிறது தகவல் கசியும் உரிமை வட்டம்!
பொதுவாகவே ஷங்கரின் படங்கள் என்றால், யானைகள் சிறப்பு முகாம் போல தீனியை போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவும் லட்சங்களில் அல்ல, கோடிகளில். அதற்கான வரவு வட்டியும் முதலும் குட்டி போட்டு திரும்ப வரும் என்றாலும், ஆரம்பத்தில் போட வேண்டுமே? போட்டு போட்டு களைத்துவிட்டாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். இந்த ஒரு யானைகள் முகாம் போதாதென நடுவில் இன்னொரு யானைகள் முகாமுக்கு நிகரான விஸ்வரூபம் பார்ட் 2 யும் வாங்கி விட்டார் அவர். போதாதா? காசு கரைந்து, கையிருப்பும் குறைந்து, கலகலப்பும் மறைந்து போனதாம் அவருக்கு.
எமிக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செட்டில் செய்துவிடுவதாக கூறிதான் அவரை வரவழைத்திருந்தாராம் ஷங்கர். வந்த இடத்தில் பேமென்ட் தருவதில் சற்றே தாமதம் ஏற்பட, நாலாம் நாள் ஆளையே காணோம் எமியை. ‘பாக்கியை எடுத்து வச்சுட்டு ஃபிளைட் டிக்கெட் போடுங்க. திரும்பி வர்றேன்’ என்று கூறியிருக்கிறாராம் ஷங்கரிடம். காலம் காத்திருக்கலாம். அழகான செட் காத்திருக்குமோ? அடிச்சு பிடிச்சு ஓடியாங்க எமி!

