ஊரடங்கிய நேரத்தில் உள்ளே வந்த அனிருத்! போலீஸ் முன்பு ஆஜரானார்
ஒருவேளை பகலில் வந்திருந்தால் அழுகிய முட்டையோ, அல்லது சூடான ஆம்லெட்டோ… அனிருத்துக்கு அபிஷேகம் பண்ணியிருப்பார்கள் மாதர் சங்கத்தினர். யாருக்கும் அறிவிக்காமல் தெரிவிக்காமல், அவ்வளவு ஏன்? போலீசுக்கே அனிருத் விளக்கமளிக்க வருகிற விஷயம் அவர் வந்தபின்புதான் தெரியுமாம். அவ்வளவு சீக்ரெட்டாக கோவை போலீஸ் முன் ஆஜராகிவிட்டு, தன் மேலிருந்த அழுக்கை தற்போதைக்கு கர்சீப் வைத்து துடைத்திருக்கிறார் அனிருத்.
கனடாவிலிருந்து கிளம்பிய அனிருத், நேரடியாக சென்னைக்கு வராமல் வழியிலேயே பெங்களூரில் இறங்கி கார் மார்க்கமாக கோவை சென்றடைந்ததாகவும் கூறப்படுகிறது. எப்படி வந்தார் போனார் என்பதல்ல விஷயம். மிகத் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு அவர் போலீஸ் முன் ஆஜரான விஷயத்தை மீடியா கூட மோப்பம் பிடிக்கவில்லையே என்கிற கவலைதானாம் தொலைக்காட்சி வட்டாரங்களுக்கு.
ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாய்தா மேல் வாய்தா கேட்டு வருகிற சிம்பு மீது கடும் கோபத்திலிருக்கிறது நீதிமன்றம். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்றொரு சலுகையை சிம்புவுக்கு வழங்கியிருந்தார் நீதிபதி. ஆனால் அதிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிம்பு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்ததுதான் தப்பாகிவிட்டது. ஏற்கனவே சென்னையிலிருக்கும் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து விளக்கம் கொடுத்தால் போதும் என்று கூறியிருந்தேன் அல்லவா? அதில் ஒரு திருத்தம். அவர் வரும் 29 ந் தேதிக்குள் கோவை போலீஸ் முன்பும் ஆஜராக வேண்டும் என்று கூறிவிட்டார் நீதியரசர்.
இதில் சிம்பு அப்செட். ஆனால் ஏற்கனவே இறகு போலிருந்த அனிருத், பொறுப்பாக போலீஸ் முன் தோன்றி, ‘அது நானில்லைங்க’ என்று கூறிவிட்டதால், இன்னும் லேசாகி இறகு போலாகியிருக்கிறாராம்.
இனிமேலாவது கவனமா இருங்க பிரதர். ஜனங்க பறக்க விட்ற போறாங்க…