காலையில் களஞ்சியம் மாலையில் அஞ்சலி சுட சுட ஒரு அறிக்கை யுத்தம்!
ஒரு நடிகை தான் நடித்துக் கொண்டிருந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு போகலாமா? அப்படி போயிருந்தால், அந்த படத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகைக்கு யார் பொறுப்பு? இப்படியெல்லாம் பல கேள்விகள் அஞ்சலியை சுற்றி சுற்றி வந்தாலும், அவரை கற்பூரம் போல காக்கும் கரங்கள் இதே சினிமாவிலிருப்பதால், பணம் போட்ட மு.களஞ்சியம் காத்திருக்கிறார் அஞ்சலிக்காக. அவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் போதும், சட்டப்படி புகுந்து தர்மப்படி தனது நியாயத்தை அடைய வேண்டும் என்பதாக இருக்கிறது அவரது அறிக்கைகளும் வாதங்களும்.
அஞ்சலி தமிழில் நடிக்காமல் போனாலும், வேறு மொழிகளில் நடிக்கிறாரல்லவா? அந்த படங்களுக்கு பூட்டு போடும் வேலையில் இறங்கவிருப்பதாக மு.களஞ்சியம் கொடுத்த பேட்டியொன்று கடுமையாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. காலையில் இந்த பேட்டி மீடியாக்களில் வெளியிடப்பட, பிற்பகலுக்குள் பதில் வந்தது அஞ்சலியிடமிருந்து. இந்த துரித அஞ்ச(ல்)லி துறை தந்த விளக்கம், மு.களஞ்சியத்திற்கு மேலும் எரிச்சல் ஏற்படுத்துவதை போலவே அமைந்திருக்கிறது.
நான் என்னுடைய பிரச்சனைகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். தெலுங்கு படத்தில் நடித்து வந்த நான் படப்பிடிப்பை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முடித்துவிட்டேன். தற்போது புனித் ராஜ்குமாருடன் கன்னட படத்தில் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை யாரும் தடுக்க முடியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் எனக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். இனி என்னை வைத்து படம் எடுக்க விரும்பும் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்பு இருந்ததைப்போல் எப்போதும் சிறப்பாக நடித்துக் கொடுப்பேன். இவ்வாறு அஞ்சலி கூறியிருக்கிறார்.
பொதுவாக தமிழ் படவுலகத்தில் தன்னை பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை கண்டு கொள்ளாமலிருந்தவர், இப்போது சுட சுட பதிலடி கொடுப்பது எதை காட்டுகிறது? மீண்டும் தமிழில் நடிப்பேன். முடிஞ்சா தடுங்க பார்க்கலாம் என்பதைதானே?
பார்க்கலாம், வெற்றி களஞ்சியத்திற்கா? கலை களஞ்சியமான அஞ்சலிக்கா? என்று!