சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குனருடன் இணைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!
உலக புகழ் பெற்ற திரைப்படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997 ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை பிரபல ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் இயக்கியிருந்தார். ஒற்றை ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உலகத்தையே கலங்கடித்திருந்தார். உலக பட விழாக்களில் இப்போதும் மரியாதையோடு வைக்கப்பட்டிருக்கும் அந்த பட இயக்குனரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் எப்படியிருக்கும்? அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மஜீத் இயக்கி வரும் அந்த ஈரானிய படத்தின் இசையமைப்பு பணிகளுக்காக அங்கேயே தங்கிவிட்டாராம் இசைப்புயல்.
இந்த புதிய படத்திற்காக ரஹ்மான் போட்டிருக்கும் பாடல்களும் பின்னணி இசையும் உலகத்தின் கவனத்தை திருப்பும் என்பதில் சந்தேகமில்லை. தான் இசையமைத்த படங்கள் எதுவாயினும் அதற்காக முழு அர்ப்பணிப்பை செலுத்திவிடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அதற்கப்புறம் அந்த டென்ஷனை தலையில் ஏற்றிக் கொள்வதில்லை என்பார்கள். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்துவிட்டு வந்ததிலிருந்தே மிகவும் ஆத்ம திருப்தியோடு காணப்படுகிறாராம் அவர்.
அது மட்டுமல்ல, அந்த படத்தின் வெளியீட்டையும் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்!