ஆர்யாவை ஓட விட்ட திருட்டுப்பயலே பார்ட் 2
தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஆர்யாவின் இமேஜ், எஸ்.ஜே.சூர்யாவின் இமேஜூக்கும் மேலே… வெண்ணிறாடை மூர்த்தியின் இமேஜூக்கும் கீழே! இத்தனைக்கும் தான் நடிக்கும் படங்களில் ஆபாச டயலாக்கோ, ஆபாச மூவ்மென்ட்டோ தருபவரல்ல அவர். பட் ஏன்? ஏன்? எல்லாம் கள்ள பூட்டும் கண்ட இடத்து சாவியுமாக திரிவதால் வந்த வினைதான். ஆஃப் லைன் சினிமாவில் ஆண் ஆதிக்கத்தின் அல்வா துண்டாக அடையாளம் காணப்படும் ஆர்யாவையே ஒரு படம் ஐயோ சாமீய், ஆளை விடு என்று ஓட வைத்தால் அந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் புயலென நுழைந்து பிரமிப்பான வெற்றிகளை தந்தவர் சுசிகணேசன். விரும்புகிறேன் படத்தின் மூலம் சினேகாவை அறிமுகப்படுத்தியவரும் கூட. அதற்கப்புறம் அவர் இயக்கிய திருட்டுப்பயலே படத்தின் மூலமாகதான் சினிமாவுக்குள்ளேயே என்ட்ரி ஆனது ஏஜிஎஸ் என்ற பிரமாண்ட பட நிறுவனம். அதற்கப்புறம் கந்தசாமி என்ற படத்தை இயக்கிய சுசி, அந்த படத்தின் வெற்றியை கூட நம்பாமல் மும்பைக்கு ஷிப்ட் ஆனார். ஒரே லட்சியம் இந்திப்பட இயக்குனவராவது… அப்படி போனவருக்கு மும்பை ஒரு சின்ன துண்டளவுக்கு பீட்சாவை கூட வெட்டவில்லை.
மீண்டும் தமிழுக்கு திரும்பிய சுசிக்கு, தன்னை முழுமையாக நம்பி ஆதரவளித்த ஏஜிஎஸ் நிறுவனமே ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை இருக்காதா என்ன? நினைத்தமாதிரியே எல்லாம் அமைந்தது. திருட்டுப்பயலே படத்தையே பார்ட் 2 வாக எடுக்கலாம் என்று முடிவு செய்தார்களாம். அதில் நடிக்கக் கேட்டு ஆர்யாவை அணுகியிருக்கிறார் சுசி. அந்த படத்தின் கதையை கேட்ட ஆர்யா, ஏஜிஎஸ் பெரிய கம்பெனிதான். நினைச்ச சம்பளத்தை கொடுப்பாங்க. ஆனால் இந்த கதையில் நான் நடிச்சா என் இமேஜ் என்னாவறது என்று எடுத்தாராம் ஓட்டம்.
ஆர்யாவையே அந்தல சிந்தலயாக்குகிற அளவுக்கு படத்தில் அவ்ளோ சமாச்சாரம் இருந்தால், ஒலகம் ஓரங்குலம் திகிலாவதை யார்தான் தடுக்க முடியும்?