அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி… அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அவர். அதில் அவர் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான விஷயம், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதுதான். அதனால் அவர் தரக்குறைவாக திட்டியிருக்கிறார். அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறியிருக்கிறார் அசோக்குமார்.

செய்தியை கேள்விப்பட்ட அடுத்த நிமிஷம் பதறிப்போனது கோடம்பாக்கம். சசிகுமாரின் சுற்றமும் நட்பும் ஓடோடி வந்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த கடிதத்தின் அடிப்படையில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது இ.பி.கோ 306 ன் பிரிவின் படி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புச்செழியன் தலைமறைவு… என்பதுதான் கடைசி தகவல்.

நிஜத்தில் அசோக்குமாரை கொன்றது அன்புச்செழியனா? அல்லது டைரக்டர் பாலாவா? இந்த கேள்வியை இப்போது எழுப்ப வேண்டியது மிக மிக அவசியம் ஆகிறது. ஏனென்றால், கிட்டதட்ட 35 கோடி ரூபாய் அன்புச் செழியனுக்கு தர வேண்டியிருக்கிறதாம் சசி. அதில் ‘தாரை தப்பட்டை’ படத்தின் நஷ்டத் தொகையான 27 கோடியும் அடக்கம். பாலா, அமீர் போன்ற இயக்குனர்கள் படத்தை ஆரம்பிக்கிற தேதியை மட்டும்தான் முடிவு செய்வார்கள். ஆனால் அது முடிகிற தேதி அவர்கள் கையில் இல்லை. அப்படிதான் ‘தாரை தப்பட்டை’ படத்தை கந்தல் துணியாக்கி கிழித்துக் கொடுத்திருந்தார் பாலா. ரிலீசின் போதே அந்தப்படம் பெரும் நஷ்டம் என்ற முடிவோடுதான் ரிலீஸ் செய்யப்பட்டது.

இன்று எல்லாருமாக சேர்ந்து பாலாவை மறந்துவிட்டார்கள். அன்புச்செழியனுடன் சேர்ந்து பாலாவையும் குற்றம் சாட்டுவதுதான் முறை. சினிமாவில் அன்புச்செழியனின் பாணி எல்லாரும் அறிந்ததுதான். அப்படியிருந்தும் அவரிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்?

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சுமார் 45 கோடி ரூபாய், தயாரிப்பாளர் சி.வி.குமார் 11 கோடி ரூபாய், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலே கிட்டதட்ட 30 கோடி என்கிற அளவுக்கு அவரிடம் கடன் பெற்றிருக்கிறார்களாம். இன்று சினிமா எடுக்க கடன் தரும் பைனான்சியர்கள் குறைந்த பட்சம் ஐந்து பைசா, அல்லது ஆறு பைசா வட்டிக்கு விடுகிற போது மூன்று பைசா வட்டிக்கு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அன்புச்செழியன். குறைந்த வட்டியாச்சே என்பதாலும், கேட்டவுடன் எவ்வித இழுபறியும் இல்லாமல் பணம் வந்து சேர்வதாலும் அன்பு செழியனை நாடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

 

 

குறித்த நாளில் படத்தை திரும்ப கொடுக்க முடியாமல் செய்துவிடுவது படம் வெளியான பின்பு ஏற்படுகிற நஷ்டம் அல்ல. என்ன எடுக்கிறோம், ஏன் எடுக்கிறோம், எதை எடுக்கிறோம் என்பதை அறியாத புத்திசாலி இயக்குனர்களின் இழுபறியால்தான். பல படங்கள் எந்த வருடம் வெளியாகும் என்பதே தெரியாத நிலைமை. இவர்கள் செய்யும் அலட்சியம், அதனால் ஏற்படும் தாமதம், அதன் காரணமாக வட்டி குட்டி போட்டு, அந்த குட்டியும் வட்டி போடுகிறது. முதலில் படம் எடுக்க வரும் இயக்குனர்களிடம் சரியான திட்டம் இல்லாமல் போவதுதான் இத்தகைய கொடூர மரணங்களுக்கு முதல் காரணம்.

இரண்டாவது காரணம், ஹீரோக்கள் வாங்குகிற தாறுமாறு சம்பளம். இவ்விரண்டையும் சரி செய்ய முன் வராமல், சினிமாவை உருப்பட வைக்கவே முடியாது. தற்கொலைகளுக்கு காரணம் அன்புச்செழியனின் அதிரடியான வசூல் முறைதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் தங்களை தாங்களே சரி செய்து கொள்ள வேண்டிய அதி முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்கள் தமிழ்சினிமா படைப்பாளிகள்.

இன்றைய தேதியில் படம் எடுக்கிற எல்லாருமே அன்புச்செழியனிடம் கையேந்திதான் நிற்கிறார்கள். அவரவர்களின் கட்டாயத்தின் காரணமாக அசோக் குமாரின் உடல் தகனம் செய்யப்பட்ட மறுநாளே இந்த சம்பவத்தை மறந்துவிடுவார்கள். இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறது சினிமாவுலகம்.

ஏனென்றால் இன்று தமிழ்சினிமாவை உருள விட்டுக் கொண்டிருக்கிற முக்கியமான சக்கரமே ‘நரகாசுரன்’ என்று விமர்சிக்கப்படுகிற அன்புச்செழியன்தான்.

அன்புச் செழியன் கதவை அடைத்துவிட்டால் தற்கொலைகள் நிற்கும். அப்படியே தமிழ்சினிமாவும் தடுமாறி நிற்கும். இதுதான் சினிமாவுலகம் எள்ளி நகையாட வேண்டிய கேவலமான உண்மை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
Are You Crazy To Marriage Wth Arya? Watch This Video Before it!

https://www.youtube.com/watch?v=kN81dN3mgHE&t=1s

Close