முழங்கறது தமிழுக்காக! புழங்கறது சமஸ்கிருதம்!! கண்ணை கட்டுதே கமல் பாலிஸி?
தன் ரசிகர்களுக்காக நடத்தி வந்த ‘மய்யம்’ இதழில் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார் கமல்! தலைவர் என்னமோ சொல்ல வர்றாரு. தமிழ் வாத்தியாருங்களுக்காவது புரியுதா பார்க்கலாம் என்று மய்யம் புத்தகத்தோடு தமிழ் வாத்தியார்களை தேடி வீடு வீடாக நடை தேய்ந்த கமல் ரசிகர்கள், அதற்கப்புறம் ஆறு மாசம் கூட மய்யத்தை ஆதரிக்கவில்லை. ஒரு வழியாக மூடப்பட்டது இதழ். இருந்தாலும் சமயங்களில் விழித்துக் கொண்டு ‘கவுத’ பொழிவார் கமல். வழக்கம் போலவே புரிந்தும் புரியாமலும் புல்டோசர் கொண்டு ஏறாமலும் இருக்கும் அது.
ஆனாலும் தமிழ் மொழி குறித்தும், அதன் வளம் குறித்தும் கமல் பேசும்போதெல்லாம் ஏதோ ஒண்ணு அதுக்குள்ள இருந்து நம்மை சொக்க வைப்பது மட்டும் நிஜம். இந்த மேலோட்டமான பிம்பங்கள், கமல் பெரிய தமிழ் பித்தனாக இருப்பாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும். அவ்வளவும் சில தினங்களுக்கு முன் பொடிப் பொடியானது.
கமலிடம் 8 ஆண்டுகளாக உதவி இயக்குநராக இருந்தவர் ராஜேஷ் எம். செல்வா. கமல் நடித்த ‘தூங்காவனம்’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆசி வேண்டி தன் குருநாதரை சந்தித்த ராஜேஷ், எம் புள்ளைக்கு ஒரு பேரு வைங்க என்று கேட்க, கமல் தன் மூளையை பலவாறாக குடைந்து ஒரு பெயரை சூட்டியிருக்கிறார். அது எந்த மொழிப் பெயர் என்பது குறித்து அதிகம் யோசிக்க வேண்டாம். ஒன்று மட்டும் புரிகிறது. அது தமிழ் வகையறாவை சேர்ந்ததல்ல.
‘ஹோசிகா ம்ருணாளினி’ ! இதுதான் அந்த குழந்தைக்கு கமல் சூட்டிய பெயர். பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். கமல் எந்த பெயரை வைத்தாலும் அவர்களுக்கு அது சந்தோஷம்தான். ஆனால் கேட்கிற நமக்குதான், “கமல் சார்… ஏன் இப்படி பண்ணிட்டீங்க?” என்று அலறத் தோன்றுகிறது. எது எப்படியோ? குழந்தை ஷேமமா இருக்கணும்.