கெட்ட வார்த்தை போட்ருக்கோம்! வீராப்பு காட்டும் வீரா டைரக்டர்!
‘புதுப்பேட்டைக்கு பிறகு வரப்போகும் அழுத்தமான கேங் ஸ்டர் படம் வீரா’ என்றுதான் தனது வீரா படம் பற்றியே பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர் ராஜாராமன். கிருஷ்ணா, கருணாகரன், தம்பிராமய்யா, மொட்டை ராஜேந்திரன் என்று இதுபோன்ற கதைகளுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட முகங்களாக பொறுக்கிப் போட்டிருக்கிறார் ராஜாராமன்.
‘யாமிருக்க பயமேன் டீம் வழங்கும்..’ என்றுதான் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அது எந்தளவுக்கு நிஜம்? இந்த கேள்வியை கேட்டால், ஒரு புன்னகையை தவழ விடுகிறார் டைரக்டர். ‘நான் அந்தப்படத்தில் அசோசியேட் டைரக்டரா வொர்க் பண்ணினேன். ஒரு பேய் படத்தில் அந்தளவுக்கு ஹ்யூமர் இருக்கும்னு யாரும் நினைச்சுருக்க மாட்டாங்க. இந்தப்படத்திலேயும் நீங்க நினைக்காத சர்ப்பிரைஸ் இருக்கு’ என்றார்.
அடிமட்ட நிலையிலிருக்கும் சிலர் எப்படி மேலேறி வருகிறார்கள் என்பதை ஏராளமான கெட்ட வார்த்தைகளுடன் படமாக்கியிருக்கிறார்களாம். சென்சார் எப்படி அனுமதித்தது என்றால், ‘அவ்வளவும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள்தான்’ என்கிறார் ராஜாராமன். (அதற்காக?)
சரி போகட்டும்… நிகழ்கால அரசியலையும் அதன் போக்கையும் சும்மா புட்டு புட்டு வைத்திருக்கிறார்களாம். வீரா என்கிற ரஜினி படத் தலைப்பு வேண்டுமென்றே வைக்கப்பட்டது அல்லவாம். கதைக்கும் அதற்கும் ஒரு தொடர்பு இருக்கு என்கிறார் இவர்.
என்னவோ போங்கப்பா…