வாத்தியார் ஆனார் பாலா பிரமிப்பிலிருந்து மீளாத ஸ்டூடன்ட்ஸ்
எவ்வளவு விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், பாலா என்றால் பளீரென்று முட்டைக்கண் ஆகிவிடுகிறார்கள் திரையுலக விஐபிகளே கூட! அப்படியொரு ஆளுமை இருக்கிறது அவரிடம். பாலாவின் படங்கள் வசூல் ரீதியாக எப்படியிருந்தாலும், படைப்பு ரீதியாக ஆஹா ஓஹோதான் எங்கேயும் எப்போதும்!
தனிப்பட்ட பாலாவின் திமிரையும் அப்படியே உள்வாங்கி அசராமல் அசை போட்டு ரசிக்கிறான் ரசிகன். பேட்டிகளில் கூட நான் என்கிற தன்னம்பிக்கையோடு அவர் பதில் சொல்லும் அழகை படித்து வியந்தவர்களும் ‘அவரு அப்படிதாண்டா…’ என்று கொண்டாடாமல் இருந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு ரிங் மாஸ்டரையே, ‘வாங்க வந்து ஒரே ஒரு கிளாஸ் எடுத்துட்டு போங்க’ என்று அழைத்து தனது போஃப்டா என்கிற திரைப்படக்கல்லூரியில் பாடம் எடுக்க வைத்துவிட்டார் UTV தனஞ்செயன்.
இந்த போஃப்டா இன்ஸ்டியூட்டில் திரையுலகத்தின் அத்தனை ஜாம்பவான்களும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள். முக்கியமாக இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நாசர் போன்ற பெரும் நடிகர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இங்கு பாடம் எடுப்பது பெரிய விஷயம். உதிரிப்பூக்கள் மகேந்திரன் போன்ற அற்புதமான இயக்குனர்களும் இங்கு வந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.
ஏற்கனவே போஃப்டா மீதான பிரமிப்பிலிருந்து விடுபடாத மாணவர்கள் பாலாவின் வருகையை கொண்டாடி தீர்த்துவிட்டார்களாம்.