யாருடணும் போட்டோ எடுத்துக்கிற ஆசை இல்ல… ஆனால் இவங்களோட எடுத்துக்கணும்!

அது வழக்கமான சினிமா மேடை அல்ல! ‘அதையும் தாண்டி புனிதமான…’ என்று நெகிழ்வோடு நினைக்க வைத்தார் அர்ஜுன். ஜெய்ஹிந்த் பார்ட் 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குதான் இப்படியொரு முகம் தந்தார் ஆக்ஷன் கிங்.

சமீபத்தில் இந்தியாவுக்காக போரிட்டு உயிர் நீத்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை வரவழைத்திருந்தார் அங்கு. மேஜரின் குழந்தைகள் அர்ஜுனின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நெகிழ்வோடு அமர்ந்திருந்த அவரது குடும்பத்தினரை மேலும் நெகிழ வைத்தது முகுந்த் பற்றிய குறும்படம் ஒன்று. தயாரித்திருந்தவர் அர்ஜுனேதான்.

விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் பாலா இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். எப்பவும் நறுக் சுறுக்கென பேசிவிட்டு அமர்ந்துவிடும் பாலா இன்று நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதுதான் முதல் ஆச்சர்யம். ‘இந்த விழாவுக்கு வரச்சொல்லி நேற்று அர்ஜுன் கூப்பிட்டப்போ நான் வேறு ஏதாவது காரணத்தை சொல்லிட்டு தவிர்த்திடலாம்னுதான் நினைச்சேன். ஆனால் இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பம் கலந்து கொள்வதாக அவர் சொன்னதும் உடனே நான் வர்றதா சொல்லிட்டேன்’.

‘அர்ஜுன் நல்ல மனிதர் என்பதற்கு இந்த மேடைதான் உதாரணம். அவரோட தேசப்பற்றுக்கு உதாரணமா மேஜர் முகுந்த் குடும்பத்தை வரவழைச்சிருக்கார். தன்னை முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் குடும்பத்தாரை வரவழைச்சிருக்கார். அவர் எப்போதும் தன்னோட மூத்த அண்ணனா நினைக்கும் தயாரிப்பாளர் தாணுவை வரவழைச்சிருக்கார். அவர் ராணுவத்தில் சேர முயற்சி செஞ்சதாகவும் அவரது அம்மாவும் அப்பாவும் தடுத்துட்டதாக அர்ஜுன் சொன்னார். அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய அளவுக்கு பெரிய ராணுவ வீரரா இருந்திருப்பார்’.

‘பொதுவா நான் யாரோடும் போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டதேயில்ல. இப்ப நான் ஆசைப்படுறேன். மேஜர் முகுந்த் குடும்பத்துடன் இந்த மேடையில் ஒரு போட்டோ எடுத்துக்கணும்’ என்றார் பாலா.

உடனடியாக அவரது ஆசையும் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லிங்குசாமி விருப்பம்… அஜீத்தின் முடிவென்ன?

எத்தனை அர்னால்டுகள் வந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை உள்ளூர் அர்னால்டுகளுக்குதான் மவுசு...! ஐ எப்போ என்று கேள்வி கேட்கிற ரசிகர்கள் அடுத்து கேட்பது அஜீத் படம் எப்போ? என்றுதான்....

Close