படத்தை முடக்க பாபி சிம்ஹா சதி! சொன்னபடி நாளை வெளியாகுமா சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது?

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் தொடர்பான பிரச்சனைகள் தினந்தோறும் பூதாகரமாக வளர்ந்து கடைசி கட்டத்தில் நிற்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை சீண்டவே ஆள் இல்லாத நிலையில் மருதுபாண்டியன் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் நடித்தார் பாபிசிம்ஹா அந்த படம்தான் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த படம் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த நிருபர்கள், அற்புதமான படமாக வந்திருக்கிறதே என்று பாராட்டியதுடன் பாபி சிம்ஹாவின் நடிப்பையும் வியந்தபடியே கலைந்தனர்.

அதிலும் தனது அறைக்குள் போக முடியாமல் ஈர சட்டையுடன் மாடிப்படி அருகிலேயே அமர்ந்தபடி அவர் உறங்குவதும், திடுக்கிட்டு விழிப்பதுமான அந்த காட்சியில் கண்கலங்காமல் இருக்கவே முடியாது. ஏழை பேச்சுலர்களின் சென்னை வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்த பாபி சிம்ஹாவுக்கு இந்த படம் பெருமை சேர்க்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. அப்படியிருந்தும் அவர் ஏன் இந்த படத்தை வர விடாமல் தடுக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது நிருபர்கள் மத்தியில்.

படத்தை நிருபர்களுக்கு போட்டுவிட்டு கையை பிசைந்தபடியே வெளியே காத்திருந்தார் இயக்குனர் மருதுபாண்டியனும் தயாரிப்பாளர் மதுராஜும். ஏன்? இந்த படத்திற்கு எதிராக டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் பாபி கொடுத்திருக்கும் புகார் ஒன்றுதான் காரணம். தனக்கு பதிலாக வேறொரு டப்பிங் கலைஞரை வைத்து படத்தை முடித்துவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார் பாபி. கிளியரன்ஸ் கடிதம் இல்லாமல் இந்த படத்தை திரையிடவே முடியாத சூழல்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஊரில் இல்லை. சங்கத்தின் செயலாளரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான ராதாரவி மலேசியா சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் பேசினாலொழிய டப்பிங் கலைஞர்கள் க்ளியரன்ஸ் கடிதம் கொடுக்கப் போவதில்லை. இவர்கள் கடிதம் கொடுக்காவிட்டால், க்யூப் என்று சொல்லப்படும் சேட்டிலைட் மூலம் படத்தை ஒளிபரப்பும் நிறுவனம் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு செல்லாது. இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம், பாபி சிம்ஹா இந்த படத்திற்கு எதிராக வைக்கும் அழுத்தமான சிவப்பு மார்க்குதான்.

வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கும் சிம்ஹாவை, தமிழ் திரையுலகில் நீடிக்க விடுமா சாபம்?

தயாரிப்பாளர் தாணு, மற்றும் சிவசக்தி பாண்டியன் தலைமையில் மிக மிக உறுதியாக இயங்கிவரும் தயாரிப்பாளர் சங்கம் இன்றிரவுக்குள் பிரச்சனையை முடித்து வைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ குழு. பார்க்கலாம்!

Read previous post:
பக்கிரிசாமி பேசியாச்சு… உத்தம வில்லன் ஹேப்பி அண்ணாச்சி!

‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு...’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ்...

Close