கோடம்பாக்கத்தின் அம்பானியாகிறார் சேரன்!
சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல… கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால் கேட்கும் போது நன்றாகதான் இருக்கிறது.
விநியோகஸ்தர்களின் அராஜகத்தை தாங்க முடியாமல் ஞானவேல்ராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கம்பெனியை உருவாக்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள் உதவியே இல்லாமல் நேரடியாக படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வோம் என்பது அவர்களின் சூளுரை.
விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களின் அராஜகம் தாங்க முடியாமல் டைரக்டர் சேரனும் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல படங்களுக்கும் சின்ன படங்களுக்கும் அங்கீகாரம் கொடுக்காத இவர்களை சுளுக்கெடுப்பது என்பதை தவிர ஒவ்வொரு சிறு தயாரிப்பாளரும் வாழ வேண்டும் என்கிற அக்கறை அதில் நிறையவே இருக்கிறது. இந்த திட்டத்தை உருவாக்க சுமார் எட்டு மாதங்கள் இதே ஆராய்ச்சியில் இருந்து உருவாக்கினாராம் சேரன். தமிழகம் முழுக்க சுமார் எட்டாயிரம் முகவர்களை நியமித்திருக்கிறார்கள். இவர்களின் பணி, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீட்டிலும் அதிகாரபூர்வமான பட சிடிகளை விற்பனை செய்வதுதான்.
திருட்டு வி.சி.டி வாங்குற பணத்துக்கு குவாலிட்டியான அதே நேரத்தில் அனுமதி பெற்ற சிடியில் படம் பார்க்கலாமே? இதனால் மக்களுக்கும் பயன். தயாரிப்பாளருக்கும் பயன். திருட்டு வி.சி.டி காரர்கள் நாசமாய் போவார்கள் என்பது இன்னொரு முக்கியமான மேட்டர். இந்த திட்டத்தில் அஜீத் விஜய் விக்ரம் சூர்யா தனுஷ் உள்ளிட்ட டாப் டென் ஹீரோக்களின் படங்கள் இடம் பெறுமா என்றால், ‘அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்பினால் தாராளமாக…’ என்கிறார் சேரன்.
இவரது திட்டத்திற்கு பேராதரவு குவிந்து கொண்டேயிருக்கிறது திரையுலகத்திலிருந்து. தமிழகம் முழுவதுமிருக்கிற கேபிள் டி.வி ஆபரேட்டர்களும், நியாயமான சிடி யை விற்க நினைப்பவர்களும் அன்றாடம் தொடர்பு கொள்கிறார்களாம் சேரனை. இந்த திட்டத்தில் நேரடியாக படத்தை டிடிஎச் -ல் ஒளிபரப்புவது, கேபிளில் ஒளிபரப்புவது, இன்டர்நெட்டில் திரையிடுவது என்று பல்வேறு துணை விற்பனைக்கும் தயாராகிவிட்டார் சேரன். இப்பவே சிறு பட தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை எடுத்துக் கொண்டு சேரனின் வாயிலிருந்து வரும் நல்ல சொல்லுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த திட்டம் வெற்றிபெறும் என்பதற்கு என்ன சாத்தியம்? ஓரளவுக்கு அறியப்பட்ட ஹீரோக்களின் படம் என்றால் கூட குறைந்தது இரண்டு லட்சம் திருட்டு சிடிகள் தயாராகிறதாம். (பெரிய ஹீரோக்கள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்காக இவர்கள் இன்வெஸ்ட் செய்யும் தொகையே ஒவ்வொரு படத்திற்கும் சுமார் ஒரு கோடி என்கிறது காதில் விழும் செய்திகள்) பர்மா பஜார் வியாபாரிகளுக்கு தமிழகம் முழுக்க சுமார் 7500 கடைக்காரர்கள் தொடர்பில் இருக்கிறார்களாம். அவர்கள் மூலம்தான் இந்த திருட்டு விசிடிகள் விற்பனை ஆகின்றன. அப்படி பார்த்தால், சேரனின் திட்டத்தில் நாடு முழுக்க சுமார் 7000 முகவர்கள். அவர்களின் கீழே இயங்கும் கடைகளின் எண்ணிக்கை, டெலிவரி பாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், தயாரிப்பாளர்களின் வேர்வைக்கான விலை பல மடங்கு திரும்பி வரும் என்பது சாத்தியமே.
அது மட்டுமல்ல, இந்த முகவர்களிடம் ஒரு சி.டி யை நாற்பது ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருக்கிறார் சேரன். (அவர் ஒரு சிடிக்கு பத்தோ, பதினைந்தோ லாபம் வைத்து விற்றுக் கொள்ளலாம்) ஒரு முகவர் குறைந்தது 500 சிடி வாங்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த 500 சிடிக்கும் அவர் முன்பே பணம் தந்துவிட வேண்டும். ஒருவேளை டி.வி.டிகள் விற்காவிட்டால் எத்தனை விற்பனையாகவில்லையோ, அதை திருப்பி தந்துவிட்டு மீதி தொகையை பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறதாம்.
இனிமேல் பால் பாக்கெட்டோடு புதுப்பட சிடிகளும் வந்து விழலாம். செய்தி தாள்களுடன் புதுப்பட சிடிகள் கொத்து கொத்தாக வாசலில் கிடக்கலாம். இந்த வியத்தகு மாற்றத்தை திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் சேரன் செய்ய வேண்டியது என்ன? வசூலாகும் தொகையை தயாரிப்பாளர்களுக்கு நியாயமாக கொடுப்பதுதான். அப்படி முறையாக கொடுத்து முறையாக இந்த தொழிலை அவர் செய்வாராயின், கோடம்பாக்கத்தின் அம்பானியாகவும் மாறலாம். திருட்டு விசிடிக்காரர்களின் அராஜகத்தை ஒழித்த கொம்பானியாகவும் முடி சூட்டிக் கொள்ளலாம்.
-ஆர்.எஸ்.அந்தணன்