டிமான்ட்டி காலனி – விமர்சனம்

அக் மார்க் திகிலில் செய்யப்பட்ட ஆவிக்கதைதான் இதுவும். ஆனால் ஒன்று… மற்ற படங்களில் வருவது போல அஞ்சு நிமிஷம் சிரிச்சு, அஞ்சு நிமிஷம் பயந்து ஆற அமர திகிலடைய வைக்கிற படமல்ல இது! ‘வந்தீங்களா? பயந்தீங்களா? நிக்காம ஓடிகிட்டேயிருக்கணும்’ என்று ரெட் பல்பை எரிய விடுகிறார் அறிமுக இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து. நல்லவேளை…. இந்த படத்தில் வருவது நாம் பார்த்து பார்த்து சலித்த உள் நாட்டு பேயல்ல, உத்திரத்தை தொடுகிற உயரத்திலிருக்கும் ஆங்கிலேயப் பேய்! (யம்மாடியோவ்… அந்த கேரக்டரில் நடித்திருக்கும் அந்தாளுக்கு மேக்கப்பே தேவையில்லை, சும்மா வந்து நின்றால் போதும்)

சுமார் 100 வருஷத்துக்கு முன் டிமான்ட்டிக் காலனியை ஆதிக்கம் செய்யும் வெள்ளக்கார துரை, தனது மனைவிக்கு ஆசை ஆசையாக ஒரு தங்க சங்கிலி செய்து போடுகிறார். மனைவி மீது கொள்ளை பிரியத்தோடு இருக்கும் அவர் வெளியூர் போய்விட்டு திரும்பி வந்தால், தனது சித்தப்பிரமை மனைவியை யாரோ கர்ப்பமாக்கியிருக்கிறார்கள். யாராக இருக்கும்? யோசித்து யோசித்து கடைசியில் துப்பாக்கியை எடுத்து வேலைக்காரர்களை நச் நச்சென்று சுட்டுத்தள்ளுகிறார். அப்பாவி வேலைக்கார்கள் எல்லாரும் சேர்த்து வெள்ளக்கார தொரையை வீட்டுக்குள்ளேயே போட்டு எரிக்கிறார்கள். இந்த பிளாஷ்பேக் துரை, பல வருடங்களுக்கு பின் ஆவியாக வந்து நான்கு இளைஞர்களை லைவ்வாக போட்டுத்தள்ளுவதுதான் டிமான்ட்டிக் காலனி.

ஏன் அவர்களை இவர் போட்டுத்தள்ள வேண்டும்? உயிர் பிழைக்க போராடும் இளைஞர்களின் துடிப்பு என்ன? நடிப்பு என்ன? இதெல்லாம்தான் திகில் கிளப்பும் செகன்ட் ஹாஃப்! அப்படின்னா ஃபர்ஸ்ட் ஹாஃப்? வேலையிருந்தா ரெண்டு ரீல் ஓடுன பிறகு கூட தியேட்டருக்கு போகலாம். குடியோ நல்ல நல்ல சீன்களோ மூழ்கிப்போகாது.

முன் பாதி முடிந்து இன்டர்வெல் நேரத்தில் கூட, இந்த படத்தில் பேயிருக்குன்னு சொன்னாங்களே… என்ற டவுட்டோடுதான் கலைகிறது கூட்டம். அதற்கப்புறம்தானய்யா சங்கு! எங்கும் சிரிப்பு மூட்டாமல் ஃபுல் மூடில் திகில் கிளப்புகிறார்கள். அதுவும் அருள்நிதி, ரமேஷ்திலக், ஷனத் மூவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எதிரிலிருக்கிற டி.வியில் இவர்களின் சற்று முன்பான உரையாடல் வருவதும், அதை தொடர்ந்த திகில் காட்சியும் தூக்கி வாரிப் போடுகிறது. சிக்கிட்டோம்… தப்பிச்சரணும் என்று அவர்கள் மூவரும் துடிக்க, ரொம்ப நேரமாகவே ஒரு நண்பன் அறையின் மூலையில் உறங்கிக் கொண்டிருக்கிறான். அப்புறம்தான் தெரிகிறது. அவன் செத்து ஒரு நாளாச்சு என்று. நடுவே ஒருமுறை அவனே எழுந்து வந்து கூலாக தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அதே பொசிஷனில் படுத்துக் கொள்ள, ஈரக்குலையில் இஞ்ச் பை இஞ்ச்சாக சுருக் சுருக்…!

தான் ஒரு ஹீரோ என்பதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் மற்ற மூவருடன் சரிக்கு சரியான ரோலில் நடித்திருக்கிறார் அருள்நிதி. படம் முழுக்க ஃபுல் சீரியஸ் தோற்றம்தான் இவருக்கு. நல்லவேளையாக இவருடன் என்னவோ ஒரு மாதிரி பழகி தியேட்டருக்குள் குளிரூட்டுகிறார் நம்ம ஜாங்கிரி மதுமிதா. அருள்நிதியின் அந்த கடைசி முடிவு, நிச்சயமாக ட்விஸ்ட்தான்!

அரை பனை மர உயரத்திலிருக்கிறார் அந்த இங்கிலீஷ் மேன். பெயர் ஆன்ட்டிஜாஸ்கெலனன். இவர் வருகிற காட்சியில் திகிலாவதை விட, வெறும் இடி மின்னல் மழையும் அந்த நேரத்து அமானுஷ்யங்களும் முதுகு தண்டில் ஜிலீர் தருவதை மறுக்க முடியாது.

ஒரு பேய் படத்திற்கு ரீ ரெக்கார்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை அணு அணுவாக உணர்ந்து மணி மணியாக இசையமைத்திருக்கிறார் கேபா ஜெர்மியா. புவன் சீனிவாசனின் எடிட்டிங் குழப்பம் வரவழைக்கும் காட்சிகளை கூட எளிமையாக தருகிறது, ஒரு கோனார் தமிழ் உரையைப்போல!

அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு விசேஷமானதுதான். அந்த அரையிருட்டும், கதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காலனியும், வெளியே பெய்யும் மழையும், விட்டுவிட்டு ஒளிரும் மின்னலுமாக ஒரு திகில் படத்திற்கு சலங்கை கட்டி ஆட விட்டிருக்கிறது அரவிந்தனின் ஒளிப்பதிவு.

குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தியேட்டருக்கு போனால், அந்த வெள்ளிக்கிழமைக்கு லோக்கல் பூசாரிகளை தேடி அலையத் தேவையில்லை! ஏன்னா… படம் அவ்வளவு டெரருப்பா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாஃபியா கேங் லீடராக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள்....

Close