பிரபுதேவாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி! தேவிக்கு தியேட்டர் இல்லை
எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி வரும் பிரபுதேவா, மீண்டும் தமிழுக்கு வந்தது எதற்காகவோ? ஆனால் பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷின் பணத்தில், வொர்க்கிங் பார்ட்னராக தன்னை இணைத்துக் கொண்ட விதத்தில், ஆள் பலே கெட்டிதான்!
வந்ததுதான் வந்தார். இங்கு மார்க்கெட்டில் ‘மடி‘ப் பசுவாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனையும், விஜய் சேதுபதியையும் எதிர்த்தா படம் ஓட்டுவது? தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ‘தேவி’ படத்தை தமிழில் ‘பேட்ச் அப்’ செய்து நேரடி தமிழ் படம் போல வெளியிடுகிறார்கள் அல்லவா? அதில் இவர்தான் ஹீரோ. இந்தப்படத்தை வருகிற 7 ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார் பிரபுதேவா.
அதே நாளில் சிவகார்த்திகேயனின் ரெமோவும், விஜய் சேதுபதியின் றெக்கையும் திரைக்கு வருகிறது. இருக்கிற தொள்ளாயிரத்து சொச்சம் நல்ல தியேட்டர்களை இவ்விருவருமே பிரித்துக் கொள்ள, கையை பிசைந்து கொண்டு நிற்கிறது தேவி. தியேட்டர்காரர்கள் இப்படத்திற்கு இடம் கொடுக்க தயாராக இல்லாத காரணத்ததால், இந்த 7 ந் தேதி ரிலீஸ் திட்டத்தை தள்ளிப் போடலாமா என்று நினைத்திருக்கிறார்களாம் இப்போது!
“தியேட்டர் அட்வான்ஸ் எதுவும் வேணாம். தியேட்டர் கொடுங்க” என்று இறுதியாய் ஒரு முறை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் பிரபுதேவாவின் பிசினஸ் சொந்தங்கள்!
To listen audio click below :-