‘ ஐயே… இப்படியொரு குரலா? அதுவும் எருமை மாட்டுக்கு இருமல் வந்த மாதிரி ’
‘அண்ணேயண்ணே… சிப்பாயண்ணே… நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சண்ணே…’ என்று ஒரு காலத்தில் இளையராஜா இசையில் வந்த பாடல் ஒன்றை கேட்ட விமர்சகர்கள், ‘ஐயே… இப்படியொரு குரலா? அதுவும் எருமை மாட்டுக்கு இருமல் வந்த மாதிரி’ என்று கவலைப்பட்டார்கள். ஆனால் அந்த பாடல் ஒலிக்காத மேடையில்லை, உச்சரிக்காத உதடுகள் இல்லை என்றாக்கினார்கள் ரசிகர்கள். ஒரு காலத்தில் பாட்டுலகத்தின் புரட்சியாகவே கருதப்பட்டது அந்த குரல். டி.எம்.எஸ். எஸ்.பி.பி. மலேசியா வாசுதேவன் போன்றவர்கள் தங்கள் காந்த குரலால் மக்களை வசிகரித்த காலத்தில் இந்த குரலையும் ஏற்றுக் கொண்ட ரசிகர்களின் காது, விமர்சகர்களை பொறுத்தவரை கேக்‘காது’
காலம் இப்போது எல்லாரையும் பாட வைத்துவிட்டது. எல்லாவற்றையும் ரசிக்கவும் வைத்துவிட்டது. தனுஷ் பாடினார் சரி. செல்வராகவன் ஏன் பாடினார் என்று யாராவது கேட்க வேண்டுமே? ரசித்தார்கள். தனுஷின் குரலில் வொய் திஸ் கொலவெறியின் ரேஞ்ச் என்ன என்பதை நாம் சொல்லி அறிய வேண்டியதில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் புரட்டி எடுத்திருக்கிறார் அனிருத்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் எல்லா பாடல்களையும் தனுஷ்தான் பாடியிருக்கிறாராம். போனால் போகிறதென்று ஒரு பாடலை ஜானகியம்மாவுக்கு கொடுத்திருக்கிறார். தமிழ்சினிமாவில் தனுஷ் செய்யாத ஒன்று… டைரக்ஷன்தான். அதையும் ஒரு கை பார்த்துவிட்டால், சர்கிள் முழுமையடையும். அது முட்டையா? வட்டமா? பவுர்ணமியா என்பதை ரசிகர்கள் முடிவு செய்து கொள்வார்கள்!