அவரும் ஒரு டைரக்டர்தானே? அப்படி செய்யலாமா? கவலைப்படுகிறார் பாபி சிம்ஹா பட இயக்குனர்

வாள் வாங்கிய அரசியல்வாதிகள் எல்லாம் ‘வாள்வாங்கு வாழ்வார்கள்’ என்பதை கண்கூடாக நிரூபித்து வருகிறது அரசியல் களம்! கலைஞருக்கு வீர வாள், வைகோவுக்கு வீர வாள், மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் என்று பொதுமேடைகளை கலக்கிக் கொண்டிருக்கிற வழக்கம், இப்போது சினிமா மேடைகளிலும் வந்திருப்பது சாபமா? வரமா? எதிர்வரும் காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் அப்படியொரு வீர வாளை கொடுத்து வில்லங்கத்தை விதைத்த சினிமா நிகழ்ச்சி, வேறு யாருடையதும் அல்ல. பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் ‘உறுமீன்’ என்ற படத்தினுடையது.

தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் மேடையில் கேக் வரவழைத்து அதை பாபி கையால் வெட்ட வைத்தார்கள். அதற்குதான் அம்மாம் பெரிய வீரவாள்! தோளில் கிடக்கிற துண்டை, இடுப்பில் கட்ட வைக்காமல் விடாது உலகம் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் அவர் ஒரு போஸ் கொடுக்கும் நோக்கத்தில் கூட, வாளை உயர்த்தி பந்தா காட்டவில்லை. சைலண்ட்டாக அந்த கேக்கை வெட்டி, ஊட்ட வேண்டியவர்களுக்கெல்லாம் ஊட்டினார்.

‘இந்த படத்தின் தலைப்பான உறுமீன் என்பது ஔவையார் எழுதிய பாடலின் வரிகளில் வரும் ஒரு வார்த்தை என்பது உங்களுக்கு தெரியாததல்ல’ என்று பேச ஆரம்பித்தார் படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு’ என்பதிலிருந்து பெறப்பட்ட அந்த உறுமீன் யாரோ தெரியாது. கதையை பொருத்தவரை கொக்கு அவர்தான் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. பாடல்கள் எதையும் காட்டாமல் படத்தின் ட்ரெய்லரை மட்டும் திரையிட்டார்கள். வழக்கம் போல, நடிப்புல நம்மள அடிச்சுக்க முடியாதுரா… என்று நிரூபித்தார் பாபி சிம்ஹா.

அதற்கப்புறம் கேள்விபதில் பகுதி. இங்குதான் தலைவிரித்தாடியது விதி. ஆரம்பத்தில் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அழைக்கப்பட்டாராம் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் கடவுள் மறுப்பாளர் என்பதை உலகம் நன்கு அறியும். படப்பிடிப்புக்கு கிளம்பி வந்தவர், என்ன காரணத்தாலோ இந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது என்று கிளம்பிவிட்டார். அதற்கப்புறம் கடைசி நேரத்தில் அரக்க பறக்க அவதிப்பட்ட இயக்குனர், சார்லியை வரவழைத்து நிலைமையை சமாளித்தார். தான் கோபித்துக் கொண்டு கிளம்பி வந்ததை அப்படியே முகப்புத்தகத்தில் அவர் எழுத, அதையே கேள்வியாக திருப்பிப் போட்டார் நிருபர் ஒருவர்.

‘சார்… அன்னைக்கு அவரு செஞ்ச வேலையால எங்களுக்கு ஒரு நாள் ஷுட்டிங் பாதிக்கப்பட்டிருக்கும். பயங்கர மன உளைச்சல் வேறு. எப்படியோ… சார்லி சார் வந்தார். தப்பிச்சோம். இல்லேன்னா? அவரும் ஒரு டைரக்டர்தானே? ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நடிக்க மாட்டேன்னு போனா எப்படி?’ என்றார் சக்திவேல் பெருமாள்சாமி.

டைரக்டர் எதிர்பார்த்தது வெற்றி என்கிற வேறொரு உறுமீன். எல்லாரும் சர்ச்சைங்கிற சங்கட உறுமீனை பார்சேல் பண்ணி அனுப்பிராதீங்க மீடியாஸ்… !

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்தாயிரம் போஸ்டர் அடிச்சு தர்றேன் நெகிழ வைத்த கானா பாலா!

எத்தனையோ தமிழ் படங்கள்... எல்லாமே என்னென்னவோ காரணங்களால் உருவாகியிருக்கலாம். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அந்த படத்தின் ‘மூலக்கதையும்’...

Close