என்னமோ ஏதோ / விமர்சனம்
ரீமேக் கிங் ஜெயம் ராஜா வாழும் திசை நோக்கி வணங்கி விட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்கணும். காப்பியடிக்கறதுக்கும் கொஞ்சம் ரசனை வேணும் பிரதர்…!
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அல மொதலாயிந்தி’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் ரவி தியாகராஜன் என்ற அறிமுக இயக்குனர். இன்னும் ஏழெட்டு படம் பண்ணினாலும் இவர் அறிமுக இயக்குனராகவேதான் இருப்பார் போலிருக்கிறது. (கத்தின்னா கத்தி. அப்படியொரு கத்தி)
காதலில் தோல்வியடைந்த ஒருவனுக்கு மற்றொரு காதல் மலர்கிறது. அந்த காதலை சொல்ல போகும் நேரத்தில்தான் தெரிகிறது. அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் நிச்சயமாகியிருக்கிற விஷயம். சரி, நமக்கு வாய்ச்சது அவ்வளவுதான் என்று மனதை தேற்றிக் கொண்டு யதார்த்த வாழ்க்கைக்கு திரும்பும்போது இன்னொரு லவ் வருகிறது. கொடுமை என்னவென்றால் இதுவும் நிறைவேறாமல் போக…. அந்த நேரத்தில் அந்த ரெண்டாவது காதலிக்கு கல்யாணம் ‘கட்’ ஆகி இவனை தேடி வருகிறாள். வந்த இடத்தில் இவனுடைய மூன்றாவது காதலியை இவன் வீட்டில் பார்த்துவிட்டு அப்படியே ரிவர்ஸ் ஆகிவிட, விஷயம் தெரிந்த காதலன் அவளைத் தேடி போனால் அங்கே அவளுக்கு கல்யாணம். அது நடந்ததா? இவனும் அவளும் இணைந்தார்களா என்பது படம். (குழப்பத்தை குழப்பாம சொல்றதுக்குள்ள எவ்வளவு குழப்பம்?)
படத்தின் ‘நடையே’ கொஞ்சம் சிக்கலாகதான் இருக்கிறது. அந்த முடிச்சுகளை மெல்ல மெல்ல அவிழ்க்கிற வேலை சாதாரணமானதல்ல. நல்லவேளையாக கௌதம் கார்த்திக்கின் துள்ளல் நடிப்பும், ராகுல் ப்ரீத்தின் அழகும், படம் முடிகிற நேரத்தில் தியேட்டரையே கதி கலக்குகிற அந்த குடிகாரரும் காப்பாற்றி விடுகிறார்கள் நம்மை.
இன்னும் மீசை அரும்புகிற வயசில்தான் இருக்கிறார் கௌதம். அது சற்று பட்டையான மீசையாகிற வரைக்கும் தட்டையான கதைகளைதான் தேர்ந்தெடுப்பார் போலிருக்கிறது. ஆனால் அவரது அப்பாவுக்கு அசால்ட்டாக வருகிற காமெடி விளையாட்டு கௌதமுக்கும் சரமாரியாக வருவதால், தப்பித்தோம்! அதிலும் மருத்துவமனையில் கிடக்கும் இவர், தன் கண்ணெதிரிலேயே காதலியை டாக்டர் கரெக்ட் பண்ணுவதை கண்டு அதிர்ச்சியாகிற போது, தியேட்டரே கலகலவாகிறது. ஒரு காட்சியில் இவரை ‘கே’ (gay) என்று ராகுல் ப்ரீத் அப்பாவிடம் அறிமுகம் செய்து வைக்க, அது புரியாமல் இவர் ‘ஙே’ என்று விழிப்பதை நினைத்து நினைத்து சிரிக்கலாம். அவ்வளவு ஃப்ரண்ட்லியான அம்மாவை பொசுக்கென்று இழந்துவிட்டு கௌதம் தவிக்கிறாரே… அந்த அழுகை அப்படியே கார்த்திக் பாணி. தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக இவர் பரிணாம வளர்ச்சி அடைவதற்குள் எத்தனை ஸ்பீட் பிரேக்குகளை தாண்டி வேண்டியிருக்குமோ?
படத்தில் நிகிதா படேல், ராகுல் ப்ரீத் என்று இரண்டு ஹீரோயின்கள். இருவரில் ராகுல் மட்டும் செம கூல். முதல் காட்சியிலேயே செமத்தியாக மட்டையடித்துவிட்டு சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்த சிரிப்புக்காகவே மதுரையில் நாலு தெருவிலும், மணப்பாறையில் நாலு தெருவிலும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம். நிகிதா மாட்டு டாக்டராக நடித்திருக்கிறார். அவரது அறிமுகக் காட்சி, உவ்வேய்ய்ய்… ஒரு குத்துப்பாடலுக்கு பயன்பட்டிருக்கிற அளவுக்கு இவரது பங்கு படத்தில் அவ்வளவு பெரிசாக இல்லை.
பெரிய தாதாவாக நடித்திருக்கிறார் பிரபு. ஆனால் கையில் துப்பாக்கி வைத்திருக்கிறாரே ஒழிய மனிதர் அவ்வளவு சீரியஸ் இல்லை. இவர் இல்லாமலே கூட கதையை நகர்த்தியிருக்கலாம். ஆனால் இவர்தான் கதையையே நகர்த்திச் செல்வதாக காட்டுகிறார்கள். ‘அடேய் கள்ளப்பயலே’ என்று இவர் கௌதம் கார்த்தியை கொஞ்சுவது, வலிய திணிக்கப்பட்ட கம்யூனிட்டி கரைச்சல்! அவசியமான்னு யோசிங்க பிரபு.
பணக்கார சொசைட்டிக்கேயுரிய ஸ்டைலிஷ் அம்மாவாக அனுபமா குமார். இவர்தான் கௌதமின் அம்மா. இவருடைய காதலை இவர் வர்ணிக்கிற காட்சி அழகு.
படத்தில் க்ளைமாக்சில் வந்தாலும் யார்றா இந்த குடிகாரன் என்று நிமிர வைக்கிறார் ‘குடிகாரன்’ ரமேஷ். எதுக்கு வெட்டிப் பேச்சு. ரவுண்டு கட்டி அடிங்க என்பதை ஒருவித கட்டளை தொணியில் ஆந்திர தெலுங்கும், கொச்சை தமிழுமாக அவர் உச்சரிக்கும்போது சிரிக்காத நபர்கள் இருந்தால், தேடிப்பிடிக்கலாம்.
நம்ம நாட்ல ரசனை இப்படிதான் இருக்கு என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு ட்யூன் போட்டிருக்கிறார் டி.இமான். ‘ஷட் அப் யுவர் மவுத்…’ ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா…’ போன்ற பாடல்கள் ஈசல் போல பறந்து இமானின் புகழை சில மாதங்களுக்கு வாழ வைக்கும். சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் நிச்சயம் பாராட்டப்படுவார். அவ்வளவு மேட்சிங்கான ஸ்டெப்ஸ் ஒவ்வொன்றும். வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ஒலிக்கும் அந்த பாடல் கம்பீரம் ப்ளஸ் கண்ணீர்… கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு அழகை வாரி இறைக்கிறது.
‘என்னமோ ஏதோ’ என்று வந்திருக்க வேண்டிய படம். கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத், குடிகார ரமேஷ், டி. இமான்களால் தப்பித்திருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்