ஃபேன் விமர்சனம்

பாலிவுட் கிங் எஸ்.ஆர்.கே.வின் ஹீரோ கம் வில்லன் ஆட்டம் தான், ஃபேன். ஆனால், இந்த முறை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதை, அவரோடு நேரடியாக சம்பந்தப்பட்டது, என்பதாலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு. கன்னடம், மராத்தி.. இப்படி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் வெளியான, “ரசிகன் கீதம்” (Fan Anthem) பட்டி தொட்டி பட்டணங்களில் எங்கும் பட்டைய கிளப்பியது. ரசிகனின் கீதத்தில் ஷாருக்கானின் தோற்றம் தான், படத்திற்கான வரவேற்பின் வாசலை இன்னும் அகலமாக திறந்து வைத்தது.

கதை ஒரே ஒரு வரி தான், ஒரு பெரிய சினிமா நடிகனுக்கும், அவனுடைய ரசிகனுக்கும் இடையிலான உறவும் இடைவெளியும் தான் கதை. ஒரு மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின் ரசிகன், தன்னுடைய அபிமான நடிகன் மீது கொண்டிருக்கும் காதல் மனநிலைக்கும் ரசிகன் மீது அந்த அபிமான நடிகன் கொண்டிருக்கும் மனநிலைக்கும் இடைப்பட்ட உளவியல் விளையாட்டும் அந்த விளையாட்டு வினையானால்… என்பதுமான தேடலும் நீளலும் தான் ஃபேன்.

ஷாருக், தன்னுடைய வழக்கமான ஆடலுடன் பாடல்கள் கூடிய அதிரடி மசாலாவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கிறார். 2 மணி நேரம் 20 நிமிடங்கள் சொச்சம் நீளம் கொண்ட படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பாடல்கள் இல்லை என்பதை ஒரு குறையாக நீங்கள் படம் பார்க்கும்போது உணர வாய்ப்பில்லை. படத்தின் தலைப்பாக உள்ள ரசிகன் தான் படத்தின் ஹீரோ, ஜூனியர் கௌரவ் சந்னா. அவனுடைய தலைவன் சீனியர், ரசிகன் ஜூனியர். டெல்லியில் ஒரு நெட் கபே நடத்திக்கொண்டிருக்கும் சாதாரண வாலிபனாக மிக மெல்லிய தோற்ற மாற்றத்தோடும், மென்மையான உணர்வுகளோடும் திரையை ஆக்ரமிக்கிற ஜூனியரான ரசிகன் ஷாருக் ஆஹா. ஆஹா. ஜூனியரின் சேட்டைகளை கவனிப்பதிலும் ரசிப்பதிலும் அவரின் உணர்வுகளின் பின் தொடர்வதுமாய் முதல் பாதியில் தொலைந்து போகிறோம் நாம்.

தன்னுடைய தலைவனைப்போல ஓரளவுக்கு தோற்ற ஒற்றுமை உள்ள ரசிகன். தலைவனின் ஒரிஜினில் வீடியோக்கள் பின்னால் திரையில் ஓட, தலைவனின் நடிப்பை, நடனத்தை அப்படியே காப்பி அடித்து மக்களின் முன்னால் நிகழ்த்தும் மேடை சாகசம், அற்புதம்…. ஹேய் என கூச்சல் போட்டே ஆகவேண்டிய காட்சி அது. அந்த ஒற்றைக்காட்சியில் இயக்குநரும் ஷாருக்கானும் நிகழ்த்தியிருப்பது, ஒரு மரண மாஸ் சினிமாக்காட்சி என்றாலும்…. அந்தக்காட்சியின் உள்கூறுகளை உற்றுநோக்கினால்… ப்பா… என தோன்றுகிறது.

திரையில் முன்னாள் இந்நாள் ஷாருக்கான் படங்களில் இருந்து காட்சிகள், நடனங்கள். அதை அப்படியே காப்பி அடிக்கும் இந்நாள் ஷாருக்கான்…தன் முன்னாள் நடிப்பை, தன் முன்னாள் நடனங்களை தானே காப்பி அடித்து…. அசத்தும் ஷாருக்கானின் நடிப்பைக் கொண்டாடிக் கும்மாளமடிக்கும் இரண்டு கண்களும் அகலத்திறந்து “ஹைய்யோ” என்று அதிசயிக்கிறது. ஆனால்… கதையோடு… திரைக்கதையோடு இணைந்து பயணிக்கும் மனம்… ரசிகனின் பின்னால் நிற்கிறது. ரசிகனின் உணர்வின் முன்னே நின்று ஆச்சர்யப்படுகிறது. சினிமா நடிகர்கள் மீது அவர்களின் ரசிகர்கள் கொண்டுள்ள அபிமானத்தின், ஆசையின், காதலின், வெறியின்…. ஒரு சாம்பிளாக மாஸ்டர் பீஸாக ஷாருக்கான் தன்னையே முன் நிறுத்தி இருப்பது தான் ஃபேன் படத்தின் முதலும் கடைசியுமான சிறப்பு.

எனக்கான ஒரு 5 நிமஷம் தரமாட்டியா? என தன் தலைவனிடம் கேட்கிற, ரசிகனிடம், “இது என்னோட வாழ்க்கை, என்னோட நேரம்… இதுல 5 செகண்ட் கூடி யாருக்காகவும் தரமாட்டேன்” என்று தலைவன் சொல்கிறான். தன் தலைவன் மீதுள்ள அபிமானத்தைப்பற்றி மற்றவர்கள் கேட்கும்போது, “உங்களுக்கு அது புரியாது” என ரசிகன், அதே பதிலை தன் தலைவனிடமே சொல்லும்போது…. நீயே மறுத்தாலும் நீயே எதிர்த்தாலும் நீயே வேண்டாம் என்றாலும்… என் ரசிக மனம் மாறாது…. உன்னைக் கொண்டாடுவதில் இருந்தும் உன்னை ரசிப்பதில் இருந்தும் அவ்வளவு எளிதில் என் மனம் விடுபடாது… என்று சொல்லாமல் சொல்கிறது திரைக்கதை.

ஆம், தன் தலைவனின் விருப்பத்திற்காக தலைவர்களைக் கொண்டாடுவதில்லை எந்த ரசிகனும்… அது அவன் சுய விருப்பம்….. காதலி தன்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளைக் காதலியாகவே கொண்டாடும் காதல் மனநிலை. தலைவனுக்கும் ரசிகனுக்கும் இடையிலான கடைசி சந்திப்பிலும், ரசிகன், தன் தலைவனிடம்… “நான் உன்மீது கொண்ட நேசம் உனக்குப் புரியாது” என்று சொல்லியே விடை பெறுகிறான்.

உன் வாழ்க்கையைப்பாரு, உங்க அப்பா, அம்மாவைப் பாரு.. இப்படி எல்லாம் ரசிகன்னு சொல்லி உன்னோட வாழ்க்கையை வீணடிக்காத….. என்னோட வாழ்க்கையில உனக்கு எந்த சம்பந்தமுமில்ல… போ போ… என சீனியர் ஜூனியருக்கு அட்வைசுகிறார்.

அதற்கு ஜூனியர், சீனியரின் பழைய இன்டர்வியூ வசனம் ஒன்றை, அவரைப்போலவே பேசிக்காட்டுகிறார். “நான், இன்று நிற்கும் இடம் என்பது என் ரசிகர்களாகிய நீங்கள் தந்தது, நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை” என மிக சாதாரணமாக சொல்லி, மேடைக்காக தன் ரசிகன் தான் உயிர் என்று நடிக்கிற ஹீரோக்களின் நடுமண்டையில் கடப்பாறையால் அடிக்கிறார். ஷாருக்கான்… ஷாருக்கான்… ஷாருக்கான்… என்கிற ஒன்மேன் நடத்தியிருக்கும் த்ரீ மேன் ஷோ தான் ஃபேன். ஷாருக்கான் என்கிற ஒரு பெரிய நடிகர், தன் கதாபாத்திரத்திலும் தனக்கு ரசிகராக வரும் கதாபாத்திரத்திலும் ஆக… த்ரீ மேன் ஷோ…

நீங்கள் படத்தின் ஹீரோவான ஷாருக்கானை ரசித்தாலும், கதையில் வரும் ஹீரோ ஷாருக்கான் ஆர்யனை ரசித்தாலும்… படத்தில் வரும் கதையின் ஹீரோ, ரசிகன் ஷாருக்கானை ரசித்தாலும்… நீங்கள் ரசிப்பது ஷாருக்கானையே…..

உண்மையான தன்னையே படத்தின் நெகட்டிவ் கதாபாத்திரம் போல சித்தரிக்கும் கதை ஒன்றில் ஒப்புக்கொண்டு நடித்திருப்பதற்கும் ஷாருக்கானின் துணிச்சலுக்கு ஒரு பாராட்டு. ரசிகன் ஷாருக்கானாக திறமை காட்டுவதற்கு ஷாருக்கானுக்கு இன்னொரு பாராட்டு. முன்பாதியில் மிக யதார்த்தமாக உள்ளிழுக்கும் திரைக்கதை பின்பாதியில் அச்சு அசலான சினிமாத்தனமாக மாறுகிறது. நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ பறந்து பறந்து ஃபைட் பண்ணுவார் என்பதெல்லாம்…. சினிமா சினிமா.

கொஞ்சம் நழுவினாலும் ஹீரோக்களையோ, அல்லது ரசிகர்களையோ,,, ஒரு சாராரை குத்திக்காயப்படுத்தி பதம் பார்த்துவிடும் கதை. ஆனால், இருவரையும் இருவரின் உணர்வுகளையும் சமப்படுத்தி இருப்பதில் இயக்குநர் ஜெயிக்கிறார். அதே சமயம் இருவர் பக்கமும் நியாயப்படுத்துவதே படத்தின் பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. யார் சரி, யார் தவறு? யார் ஹீரோ, யார் வில்லன்? யார் பக்கம் நிற்பது என்று குழம்பவேண்டியதாகி விடுகிறது.

ஆனாலும், ஒன் மேனாக, ஷாருக்கான் ஆடியிருக்கும் இந்த த்ரி மேன் ஷோவை… ஷாருக்கின் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் பார்க்கலாம். ரசிக்கலாம்.

ஃபேன்… ஒரு ரசிகனின் காதல்!.

– முருகன் மந்திரம்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?

தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும்...

Close