படிப்பறிவு இல்லாத ஆறு கோடி மக்களை குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்! புகையை கிளப்பிய இயக்குனர் பேச்சு!
ஒரே தொடர்தான். வட்டியும் முதலுமாக தமிழ் நெஞ்சங்களை அறுவடை செய்துவிட்டார் எழுத்தாளர் ராஜு முருகன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘வட்டியும் முதலும்’ தொடருக்கு பின் அல்ல, அதற்கு முன்பிருந்தே அவர் லிங்குசாமியின் அசிஸ்டென்ட்! அதற்கப்புறம் அவர் இயக்கிய படம்தான் குக்கூ! கண்ணில்லா மனிதர்களின் காதல் பற்றி பேசிய படம் அது. அந்த ஒரு படத்திலேயே நல்ல பட இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்ட ராஜுமுருகனுக்கு, இரண்டாவது சவால்தான் ஜோக்கர். (வரிவிலக்குக்காக பின்னாடி சோக்கர், சிரிப்பாளி, வெள்ளைப்பல் விலக்கி என்றெல்லாம் மாற்றுவார்களோ என்னவோ?)
பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால் ஒருவித எரிச்சல் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற மக்கள் மீது இன்னும் கொஞ்சம் மிளகாய் பொடியை தடவ வந்திருக்கும் படம் என்று வேண்டுமானால் ஜோக்கர் குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்கள் வெற்றிமாறனும் டைரக்டர் பாலாவும். நான்தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்துச்சு. இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபு முந்திகிட்டார் என்றார் பாலா. ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த சோமசுந்தரம்தான் இந்த படத்தின் ஹீரோமார்க்கெட்டில் ஓரளவுக்கு அறியப்பட்ட தெரியப்பட்ட ஹீரோவை கூட தேடாமல், இவர்தான் பொருத்தம் என்று நம்பிய முதல் நம்பிக்கையே ராஜுமுருகனின் தன்னம்பிக்கைக்கு எ.கா!
இந்த விழாவில்தான் ராஜுமுருகனின் பேச்சு, சலசலப்புக்கு பஞ்சமில்லாததாக இருந்தது. தமிழகத்தில் இருக்கும் 10கோடி மக்களில் படிப்பறிவு இல்லாத 6 கோடி மக்களைக் குறி வைத்துத்தான் சமூகத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகள், பெரு வர்த்தக முதலாளிகள், சூப்பர் ஸ்டார்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களிடம் இந்த ஆறு கோடி மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதைதான் ஜோக்கர் சொல்ல வருகிறது. கருத்து சுதந்திரத்தின் எல்லை என்று ஒன்று இருக்குமல்லவா? அதை தாண்டியும் இந்த படம் செல்லும் என்று நம்புகிறேன் என்றார்.
விழாவில் பேசிய அத்தனை பேரும் ராஜுமுருகன் துணிச்சலா இந்த படத்தை எடுத்திருக்கார் என்று அடிக்கடி ரிப்பீட் பண்ணிக் கொண்டேயிருந்தார்கள்.
இவங்கள்லாம் கொடுக்கிற பில்டப்பை பார்த்தா, சென்சார்ல கத்திரிக்கோலை சாணை புடிச்சு வச்சுட்டு காத்திருப்பாய்ங்க போலிருக்கே?