இந்தா பணம் புடி… நடி! மகனோடு மல்லுக்கு நின்ற நடிகர்!
சும்மா சொல்லக் கூடாது. வாரிசுகள் அப்பாக்களையே தூக்கி சாப்பிடுகிறார்கள். தமிழில் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நாலாபுறத்திலும் இப்படியொரு நல்லப் பெயரை யூத்துகள் சம்பாதித்துக் கொண்டிருக்க, “நானும் இருக்கேன்ல” என்று என்ட்ரியாகியிருக்கிறார் மஹா. இவர் தமிழ் சினிமாவின் யதார்த்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷின் மகன்! ‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார் இந்த மஹா.
“என் பிள்ளை படிக்கணும்னுதான் என் ஆசை. அவனுக்கு நடிக்கணும்னு ஆசை. என் ஆசையை அவன் நிறைவேற்றி வச்சுட்டான். லண்டன் வரைக்கும் போய் படிச்சுட்டு வந்துட்டான். அப்புறம் அவன் ஆசையை நான் நிறைவேற்றி வைக்கலேன்னா எப்படி? என் பையன் நடிக்க ஆர்வமா இருக்கான்னு தெரிஞ்சதும் நிறைய பேர் வந்து கதை சொன்னாங்க. அதில் ஒரு கதையை என் பையனே தேர்ந்தெடுத்தான். அந்த கதையை சொன்னவர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனரா வேலை பார்த்த கிருஷ்ணகுமார். நானும் கதை கேட்டேன். யூகிக்க முடியாத திருப்பங்களோட புது கதையா இருந்திச்சு”.
“தயாரிப்பாளர் தேடி அலையறதை விட, நம்மகிட்ட அங்கேயிங்க இருக்கிறதை போட்டு சொந்தப்படமா எடுத்துடலாம்னு நினைச்சேன். எல்லாரும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. டெல்லி கணேஷ் படம் தயாரிக்கிறார்னு தெரிஞ்சதும், ‘அப்படின்னா இன்னும் சம்பளத்தை குறைச்சுக்குறோம்’ என்று குறைச்சுகிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க” என்று படம் உருவான கதையை சொல்லிக் கொண்டிருந்தார் டெல்லி கணேஷ்.
ட்ரெய்லரும், பாடல்களும் ஹெல்த்தியாகவே இருக்க, லப்பை சப்பை வரவாக இருக்கப் போவதில்லை மஹா என்பது மட்டும் சட்டென்று புரிந்தது.
படத்தில் இவருக்கு ஜோடியாக மரீனா என்ற கேரள வரவு நடித்திருக்கிறார். அங்கு இவர் சமீபத்தில் நடித்த படம் ஒன்று பெரிய ஹிட்டாம். அப்படியிருந்தும் டெல்லி கணேஷ் வீட்டு மாடியில்தான் இவரும் இவரது அம்மாவும் தங்கினார்களாம். அவர்களுக்கென்று தனி சமையல்காரர் நியமித்து ருசியாக சாப்பாட்டுக்கும் எற்பாடு செய்திருக்கிறார் டெல்லி கணேஷ். நல்ல பொண்ணு… போகும்போது என்னையும் என் மனைவியையும் நிக்க வச்சு கால்ல விழுந்துச்சு என்று மெய்யாகவே நெகிழ்ந்தார் டெல்லி.
அப்படியே பையனை வச்சு அடிச்சுருங்க கில்லி!