அருண் விஜய்யை அம்போவென்று விட்ட கவுதம்மேனன்!
நெற்றி வரைக்கும் வந்த வெற்றி, திலகம் வைக்காமல் திரும்பிப்போனால்…? அந்த சோகத்தின் வேகத்தை நன்றாகவே அனுபவித்தவர் அருண்விஜய். சினிமா குடும்பத்தில் பிறந்து சினிமாவை பற்றி இஞ்ச் பை இஞ்ச் அறிந்து வைத்திருந்தாலும் அடுக்கடுக்கடுக்கான தோல்விதான் பரிசாக கிடைத்தது அவருக்கு. பல வருடங்களுக்குப் பின் வலது கால் வைத்தது வெற்றி. அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படமும் அவருக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்க… காஸ்ட்லி இயக்குனர் கவுதம் மேனன் அருண்விஜய்யை தனி ஹீரோவாக்க முடிவெடுத்தார்.
குற்றம் 23 படத்தின் மெகா வெற்றி, அந்த எண்ணத்தை இன்னும் வலுவாக்க… புதிய தயாரிப்பாளர் ஒருவர் கவுதம்- அருண் காம்பினேஷனுக்கு சில கோடிகளை கொட்ட முன் வந்தார். வந்தவரை ஒரே அமுக்காக அமுக்கிய கவுதம், இரண்டே நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டார். ஆனால் அந்தப்படத்திற்காக வாங்கிய பணத்தை, தனது தயாரிப்பில் உருவான வேறு வேறு படங்களில் செலவாக்கிவிட்டார்.
நொந்து போன அருண்விஜய் கவுதம் அழைப்பார் என்று காத்திருந்து காத்திருந்து காலங்களை போக்கியதுதான் மிச்சம். அருண் விஜய்யின் வெற்றியை பார்த்து பணத்தை கொட்டிய தயாரிப்பாளர், ‘மீண்டும் எப்போங்க படம் துவங்கும்?’ என்று கவுதம் பின்னால் அலைந்து கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் குபீர் புலம்பல்!
இப்படிதான் ராஜஸ்தான் வெயிலில் ரசகுல்லாக்கள் காய்கின்றன!