என்னடா இது கவுண்டருக்கு வந்த சோதனை?
வந்தா வா… வராட்டி போ… என்பதை போலவே சமீபத்திய சினிமா வாய்ப்புகளை டீல் பண்ணி வந்த கவுண்டர், தனது அடங்காத வாய்க்கு அவல் போட்ட மாதிரி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 49 ஓ படத்தையும் கையாள்கிறாராம். பல வசனங்கள் இயக்குனர் சொல்லிக் கொடுத்தது என்றால், கவுண்டருக்கேயுரிய பல வசனங்கள் அடிஷனலாக செருகப்பட்டு ஆடியன்சை அதிர வைக்கும் என்கிறார்கள்.
அதுவும் 49 ஓ என்று பெயர் வைத்துவிட்டு அரசியல் பேசாமல் இருக்க முடியுமா? முன்னாள் இந்நாள்களையெல்லாம் தொங்க விட்டிருக்கிறாராம் கவுண்டர். முன்பு இந்த வசனங்களை சொல்லி சொல்லி சிரித்து வந்த படக்குழு, ஆஃப்டர் த எலக்ஷன் ரிசல்ட்? ஐய்யோ குய்யோவாகி கிடக்கிறார்களாம். அண்ணன் பேசுற வசனத்தையெல்லாம் அப்படியே சினிமாவுல வச்சோம்னா, வீடு தேடி ஆட்டோ வரும். அது கூட பரவால்ல… அள்ளிக் கொட்டுன பணத்துக்கெல்லாம் ஆயுசுக்கும் ரிட்டர்ன் கிடைக்காது என்றெல்லாம் மிரள ஆரம்பித்திருக்கிறார்களாம். அண்ணே… பேசுங்கண்ணே பேசுங்க என்று முன்பு என்கரேஜ் பண்ணிய அத்தனை பேரும் இப்போது கத்திரி கோலோடு திரிகிறார்களாம்.
சென்சார்ல சேதப்படுத்துறதுக்குள்ள, நம்மளே தேவைக்கு அதிகமானதை தீர்த்து கட்டிடலாமே என்பதுதான் இந்த கத்திரிக்கோல் பாய்ச்சலுக்கு காரணம். கவுண்டர் டப்பிங் பேசியதையெல்லாம் மீண்டும் அந்த லிப் மூவ்மென்டுக்கு ஏற்ப வேறு வசனங்களை போட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறார்களாம்.
சில பேர் சரவெடிய கொளுத்தினாலே சைலண்ட்டா கேட்டுக்குற ஊர்ல, கவுண்டருக்கு மட்டும்தான் ஒத்த வெடியை கொளுத்தினாலே ஊரே அல்லோலப்படுது.