விதார்த்தின் பெரிய மனசு!
இன்று திரைக்கு வந்திருக்கிறது ‘காடு’ திரைப்படம். விதார்த், சமுத்திரக்கனி இருவரும் மெயின் ரோலில் நடித்திருக்கிறார்கள். தன் கேரக்டரை மிக மிக உன்னிப்பாக கவனித்தே படங்களை ஒப்புக் கொள்வார் சமுத்திரக்கனி. காடும் அப்படிப்பட்ட படம்தான். சமுத்திரக்கனிக்கு சல்யூட் என்கிற அளவுக்கு மேல மேல மேல உயர்ந்து நிற்கிறது அவரது கேரக்டர். தான் வழக்கமாக வாங்குகிற சம்பளத்தை விடவும் 80 சதவீதம் குறைத்தே இந்த படத்திற்காக வாங்கியிருக்கிறார் அவர். அந்தளவுக்கு சமூகம் சார்ந்த இந்த கதை மீது அக்கறை காட்டியிருக்கிறார் அவர். ஆனால் அவரையும் தன் குணத்தால் மிஞ்சியிருக்கிறார் விதார்த். எப்படி?
இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கும் போதே படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இருவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்தாராம். பட விளம்பரம் தொடர்பான வேண்டுகோள்தான் அது. ‘ஓ…. என் போட்டாவ நல்லா பெருசா போடுங்கன்னு கேட்ருப்பாரு? அப்புட்டுதானே?’ என்று எடுத்தோம் கவிழ்த்தோம் சிந்தனை வேண்டாம் நண்பர்களே…. விதார்த்தின் வேண்டுகோள்தான், வளரும் கலைஞர்களுக்கு உந்துகோலாக இருக்க வேண்டிய நல்ல விஷயம்.
இருவரையும் அழைத்த விதார்த், ‘சார்… இப்ப என் மார்க்கெட் கொஞ்சம் கீழேதான் இருக்கு. அதை நான் நல்லா உணர்றேன். போஸ்டரிலோ, பத்திரிகை விளம்பரங்களிலோ நீங்க என் போட்டோவை போடுறதை விட, கனியண்ணன் (சமுத்திரக்கனி) போட்டோவை போட்டீங்கன்னா ரசிகர்கள் ஒரு எதிர்பார்ப்போட உள்ள வருவாங்க. என் படத்தை போடலேன்னு நான் வருத்தப்படவே மாட்டேன்’ என்றாராம்.
காட்டு மரம் போல் உயர்ந்து நிற்கும் விதார்த்துக்கு கம்பீரமான ஒரு அந்தஸ்தை தர வேண்டும் ரசிகர்கள்!