உலக நகைச்சுவை தினம்…உருவாக்கினார் ஜி.வி.பிரகாஷ்

‘உலக நகைச்சுவை தினம்’ எப்போது என்பது பலருக்கும் தெரியாது. அது எப்போதாக இருந்தால் என்ன? அந்த தினத்தை ஜுன் 13 என்று கெஸட்டில் மாற்றிவிட வேண்டியதுதான். ஏனென்றால் நேற்றுதான் ‘அகில உலக ஜி.வி.பிரகாஷ் நற்பணி மன்றம்’ துவங்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் தலைகாட்டிவிட்டால் போதும். அடுத்த எம்ஜிஆர் நாம்தான் என்று முடிவு கட்டிக் கொள்ளும் பலருக்கும் காலம் ஒரு பை நிறைய அமிர்தாஞ்சன் டப்பாக்களை வழங்கிவிடும். சமீபத்திய உதாரணம் வடிவேலுவின் தெனாலிராமன்! கடந்த கால உதாரணம் எஸ்.ஜே.சூர்யா. (எம்.ஜி.ஆர் போலவே குழந்தைகளை அணைத்துக் கொண்டு இவர் ஆடிய ஆட்டம் இப்போதும் காமெடி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது) இருந்தாலும் இந்த அமிர்தாஞ்சன் டப்பிக்காக அலையும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

விஜய் ஆன்ட்டனிக்காக அவரது பிஆர்ஓ சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி குறிப்பு வந்தது. சலீம் படப்பிடிப்பு கமலா தியேட்டரில் நடந்ததாம். படப்பிடிப்பில் கலந்து கொள்ள தியேட்டர் வாசலுக்கு வந்திறங்கினாராம் விஜய் ஆன்ட்டனி. அப்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிவிட்டார்களாம். எப்படியோ கமலா தியேட்டர் வாசலில் இருந்து அவர் உள்ளே செல்வதற்குள் பல மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்கள். இப்படி ஒரே ஒரு சாத்துக்குடியை வைத்துக் கொண்டு ஒரு லாரி நிறைய ஜுஸ் பிழிந்து தருகிற கூட்டம் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. அதற்கு உதாரணம்தான் இந்த ஜி.வி.பிரகாஷ் நற்பணி மன்ற செய்தி.

விழுப்புரத்தை தாண்டிப் போய் ஜி.வி.பிரகாஷை விட்டால், ஐயய்யோ… யாரு பெத்த புள்ளையோ? தம்பி வழி தெரியாம வந்திருச்சே! என்று கையில் குச்சி மிட்டாயும் வாங்கி கொடுத்து பஸ் ஏற்றி விடுவார்கள் மக்கள். அந்தளவுக்குதான் நாடறிந்த ஹீரோவாக இருக்கிறார் இவர். அதற்குள் தன்னை நம்பி ஒரு கூட்டம் இருப்பதாகவும், அதையெல்லாம் நான் ஒருங்கிணைக்க போகிறேன் என்றும் ஜி.வி.பிரகாஷ் சொல்வதுதான் உலக மஹா காமெடி.

மொதல்ல ஆர்மோனியத்தை பிடிச்சு நல்ல மெட்டா நாலு போட்டு டி.இமானை ஜெயிக்க முடியுதா பாருங்க. அப்புறம் பார்க்கலாம் இந்த அநாவசிய அலட்டல்களையெல்லாம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயனை திடுக்கிட வைத்த இயக்குனர் கம் தயாரிப்பாளர்!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வந்து திருத்தப்படாத தீர்ப்பை கூட திருத்தி எழுதிவிட்டது. படம் மொக்கையாக இருந்தாலும், பிடித்த ஹீரோ நடித்திருந்தால் ஷியூர் ஹிட் என்பதுதான் அந்த...

Close