ஐ விமர்சனம்

‘அத்தனை எதிர்பார்ப்பையும் தூக்கி, ஐ தலையில வை’ என்று கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களை எதிர் நோக்க வைத்த படம்! கதை அதுவா இருக்குமோ? இதுவா இருக்குமோ? என்று ரிலீஸ் தினத்தன்று காலை வரைக்கும் கூட படம் குறித்த யூகங்கள் றெக்கை கட்டி பறக்க, பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக தியேட்டருக்கு வந்த ஐ, பாஸா, பெயிலா?‘இது ஷங்கர் படம்டோய்… இப்படியெல்லாம் கேள்வி கேட்குறே? என்று சந்தேகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு அலட்சியமாக தியேட்டருக்கு போனால், பொருட் செலவும் பிரமாண்டமும் இருக்கு. பட் என்னவோ மிஸ்சிங்!

நூற்றம்பது கோடி செலவு, மூணு மணி நேரத்திற்கும் மேல் நீளம் என்கிற வகை தொகையில் வருகிற எல்லா தமிழ் படங்களுக்கும் நேர்கிற ஆபத்து ஐ- க்கும் வந்து சேர்ந்திருக்கிறது. கையடக்க போன்லேயே கம்ப்யூட்டர் வந்தாச்சு. இன்னும் நீள நீளமா கதை பேசி, நேரத்தை விலை பேசுனா ரசிகர்களின் முடிவு ஷங்கரா இருந்தாலும் ‘ஸாரி சார்’ தான்!

‘மிஸ்டர் இண்டியா’ ஆக வேண்டும் என்கிற லட்சியத்தோடு பாடியை ஷேப் பண்ணிக் கொண்டிருக்கிறார் விக்ரம். முதல் படியான ‘மிஸ்டர் தமிழ்நாடு’ ஆகிவிடும் அவருக்கு, சக போட்டியாளனே எதிரியாகிறான். விக்ரமின் ஆதர்ஷ அழகி எமி. பிரபல மாடல். அவர் மீது வெறிபிடித்து அலையும் ரசிகனான விக்ரம், எமி வரும் விளம்பரங்களையெல்லாம் கட் பண்ணி பாதுகாக்கிற அளவுக்கு பெரிய்ய்ய்ய விசிறி. காலம் இருவரையும் சேர்ந்து ‘போஸ்’ பண்ண வைக்கிறது. மாடல் உலகத்தின் ராஜாவாகிறார் விக்ரம். எமிக்கும் விக்ரமுக்கும் காதல் வருகிறது.

எமியை ஒருதலையாக காதலிக்கும் டாக்டர் சுரேஷ்கோபி, விக்ரமின் வரவால் தொழிலில் சரிவடைந்த முன்னாள் மாடல் உபேன் பட்டேல், விக்ரமை மாடலாக்கிய குளிர்பான கம்பெனி முதலாளி ராம்குமார், விக்ரமை ஒரு தலையாய் காதலிக்கும் அரவாணி ஓஜஸ் ராஜானி, ஆகிய நால்வரும் சேர்ந்து ஹீரோவை ஐ என்கிற வைரஸ் ஊசி போட்டு கோரமாக்குகிறார்கள். விக்ரம் அவர்களை எப்படி பழிவாங்கினார்? எமி அவருக்கு கிடைத்தாரா? இதுதான் மூன்று மணி நேர ஒன்பது நிமிட – ஐ.

பொதுவாகவே தன் படங்களில் எல்லாம், மக்களுக்கு இடையூறு செய்யும் ஏதோ ஒரு எலிமென்ட்டை பிடித்துக் கொண்டு புலி வேட்டையாடுவார் ஷங்கர். பொதுநல பார்வையோடு அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைக்கும். ஆனால் ஐ யில் அப்படியெதுவும் இல்லாததே பெரும் குறை. வெகு ஜன ரசிகர்களுக்கு பிடிபடாத மாடலிங் உலகத்தின் அரசியல் நமக்கெதுக்குப்பா என்கிற அலுப்பே வருகிறது.

பாயாசம் எப்படியிருந்தா என்ன? அந்த கண்ணாடி டம்ளர் அழகு என்று சந்தோஷப்படுகிற அளவுக்கு படத்தின் விஷுவல் மிரள வைக்கிறது. எல்லா புகழும் பி.சி.ஸ்ரீராமுக்கே. அதிலும் சீனாவில் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அழகோ அழகு.

வெறும் சினிமாதானே என்கிற மிதப்பான அணுகுமுறை இல்லாமல் ஒவ்வொரு காட்சிக்காகவும் தன்னையே ஒப்புக் கொடுக்கிற விக்ரம், இந்த படத்திலும் அந்த வேலையை உயிரை கொடுத்து செய்திருக்கிறார். படத்தில் வரும் ஒரே ஒரு காட்சிக்காக நைந்து துவண்டு உடல் துரும்பாகி… கண்ணீரே வருகிறது. பட்… எல்லாம் விழலுக்கு இறைத்த வெயிட்! சென்னை பாஷையில் மட்டும் பயங்கரமாக சறுக்குகிறார். (அதுக்கெல்லாம் கமல் சாரிடம் ட்யூஷன் எடுக்கணும் சீயானே…) உடம்பெல்லாம் கொப்புளம் வந்து முதுகு வளைந்து முக்கால் கிழவனான பின்பு அவரை பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவ்வளவு மேக்கப்புகளுக்கு நடுவில் கிடைக்கிற கொஞ்ச இடைவெளியில் கூட முகத்தில் உணர்ச்சியை வெளிப்படுத்துவது எவ்வளவு பெரிய சவால். அதையும் அசால்ட்டாக கிராஸ் செய்கிறார் விக்ரம்.

இங்கிலாந்து அழகி எமியை, இந்திய பவுடருக்குள் மேட்ச் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. பி.சி யின் கேமிரா உபயத்தால் எமி நம் இதயத்திற்கு பக்கத்தில் வந்து ‘ஏலேய் சுகமா?’ என்கிறார். இருந்தாலும் ஒரு பாடல் காட்சியில் அவரை வில்லேஜ் கேர்ள் ஆக பார்ப்பது என்னவொரு சோதனை? மாடல் உலகத்தின் அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது எமியின் கவலை தோய்ந்த ஃபேஸ்கட்டு. மெல்ல மெல்ல விக்ரமிடம் காதலில் விழுந்து, பின் அவருக்காகவே அந்த கோர முகத்தோடு வாழத் தயாராகும் போதெல்லாம் ரசிகர்களின் ஏரியாவில் எமிக்கென்றே ஏழெட்டு ஏக்கர் பட்டா லேன்ட் ரெடி.

படத்தில் ஆங்காங்கே காமெடி இருக்கிறது. உபயம் சந்தானமும், பவர் ஸ்டார் சீனிவாசனும். ‘நான் நாலு பேரை போட்ருக்கேன்’ என்று அடியாள் பெருமைப்பட, ‘போய் எய்ட்ஸ் டெஸ்ட் பண்ணிப் பாருடா’ என்று சந்தானம் மடக்கினால் புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள். அப்படியே பாத்ரூமிலிருந்து ஓடி வரும் விக்ரமிடம், ‘மொதல்ல யூ ட்யூப்பை மூடு’ என்கிற அளவுக்கு மனுஷன் வாயிலிருந்து கத்தரி போட வேண்டிய கசமுசா பேச்சுகள்! மூன்றே சீன் வந்தாலும், சந்தானத்தின் வாயில் விழுந்து, வசனங்களில் அவமானப்பட்டு, குதூகலப்படுத்துகிறார் பவர். ‘என்னை எவ்வளவு தூரம் அவமானப்படுத்துறீங்களோ, அவ்ளோ தூரத்திற்கு வளருவேன்’ என்கிற அவரது தன்னம்பிக்கைக்கு தனி அப்ளாஸ். இனி கொலை பண்ண வரும் கூலிப்படை ஆசாமிகள், சந்தானத்தின் ஐஸ் வண்டி ஸ்டைலை பாலோ பண்ணக்கூடும். எச்சரிக்கை.

விக்ரமை வலியப்போய் காதலிக்கும் அந்த அரவாணி ஓஜஸ் ராஜானியின் போர்ஷன் ஐயய்யே! அசருகிற நேரத்தில் விக்ரமுக்கு லிப் கிஸ் அடிப்பதெல்லாம் அண் சகிக்கபுள் ஏரியா. பிராணிகள் நல வாரியம் போல ‘அரவாணிகள் நல வாரியம்’ அமைக்கப்பட்டாலொழிய சினிமாவில் அவர்களுக்கான மரியாதை குண்டூசி அளவுக்கு கூட கிடைக்காது.

ஷங்கர் படத்தின் பட்ஜெட்டுகளில் கணிசமாக காலி பண்ணிவிடும் ஃபைட் பகுதி, இந்த படத்தில் அட்சர சுத்தம்! உரிச்ச கோழிகள் மாதிரியான பாடி பில்டர்ஸ் கட்டி உருள்வதெல்லாம் கண் விழி பிதுங்கி கலவரப்படுத்துகிற காட்சிகள். அந்த ரயில் ஃபைட்டுக்காக ரிப்பீட் அடிப்பார்கள் ரசிகர்கள். சீனாவில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த ஃபைட், அப்படியே சீனப்பட ஸ்டைலில்! ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் மிங், ரோப் போடாமலே உயர்ந்து நிற்கிறார்.

ஒருவனை கொலை பண்ணுகிற விஷயத்தில் எடுத்தோம் உதைத்தோம் என்றில்லாமல் கருடபுராணத்தை தேடிக் கண்டு பிடிக்கிற அளவுக்கு மெனக்கெடும் ஷங்கர், இந்த படத்தில் ஒவ்வொரு தண்டனையையும் ‘அதுக்கும் மேல அதுக்கும் மேல…’ என்று யோசித்து யோசித்து கலவரப்படுத்தியிருக்கிறார். எல்லா தண்டனையும் ரசிகனின் தொண்டைக்குழிக்குள் விரலை விட்டு ஆட்டுகிறது. வார்த்தைகள் ஜாம் ஆகி, கலவரமாகிறது தியேட்டர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் எல்லாமே துள்ளல், மனசை அள்ளல்! கபிலனின் ‘நான் மெர்சலாயிட்டேன்’ பாடலில் ஷங்கரின் கற்பனை அற்புதம். வரிகளுக்கேற்ப அமைந்த விஷுவல் வித்தை அது. ‘ஐய்ல ஐய்ல’ பாடல் இதுவரை தமிழில் வராத பாடல் நடை!

கோடான கோடிகளை விழுங்கி குரோட்டன்சாக வளர்ந்து நிற்கிறது ஐ.

நிழல் இருக்கு. பட்… பழம் இருக்குமோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Jessy says

    நானும் படம் பார்த்தேன். ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிகிறது. சிவாஜி, எந்திரனுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் அவர்கள் கதை, திரைக்கதையை நம்புவதை விட்டு விட்டார்.

    கெட்அப், கிராபிக்ஸ், லொக்கேஷன் மாதிரி விசயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அவருக்கு அவருடைய படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் மிக மிக அதிகமாக தெரிய வேண்டும். அவ்வளவே…!!!!

    ஜென்டில்மேன், முதல்வன் – கால ஷங்கர் திரும்ப வர பிரார்த்திக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஸ்டார் நைட்! அவமானப்படுத்தப்பட்ட கமல், சூர்யா?

நட்சத்திர கலை விழா என்றாலே நடிகர் நடிகைகள் அலர்ஜியாகி ஓடி ஒளியும் நாள் சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இதில்...

Close