கத்தி வந்தால்தான் பூஜையும் வரும்! விஜய்க்கு ஆதரவாக விஷால் அதிரடி! தியேட்டர்களுக்கு நெருக்கடி?
இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது பஞ்சாயத்து.
மிக பிரபலமான ஒருவர், அதுவும் தியேட்டர் வட்டாரங்களில் முக்கியமான ஒருவர், ‘எனக்கென்ன கட்டிங் தருவீங்க?’ என்கிறாராம் தீடீரென மூக்கை நுழைத்து. கொடுத்தால்தான் தியேட்டர் பக்கம் வர முடியும் என்பது அவரது மிரட்டல்.
லைக்கா என்கிற பெயரை எடுத்தால்தான் கத்தியை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று விஜய் படத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அத்தனை பேருக்கும், அந்த தரப்பிலிருந்து வருகிற பதில் அவ்வளவு சிறப்பாக இல்லை. ‘கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் கத்தி வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வராவிட்டால் எனக்கு கவலையே இல்லை. லைக்கா என்ற பெயரை நீக்கவே முடியாது’ என்று கூறிவிட்டார்களாம் கத்தி தரப்பில்.
அப்படியென்றால் விஷாலின் பூஜை தனியாக திரைக்கு வரும். கலெக்ஷன் விஷயத்தில் கொல குத்துதான் என்று மற்றவர்கள் விஷாலுக்கு பூசணிக்காய் உடைக்கிற அளவுக்கு திருஷ்டி போட்டுக் கொண்டிருக்க, அவரது முடிவு திடீர் அதிர்ச்சி.
உலகத்தில் வேறு எந்த ஹீரோவும் சக ஹீரோவுக்காக அப்படியொரு முடிவை அறிவிப்பாரா தெரியாது. ஆனால் விஷால் எடுத்திருக்கிறார். தமிழ்சினிமா ரசிகர்களும், குறிப்பாக விஜய் ரசிகர்களும் விஷாலுக்கு கோடானு கோடி நன்றி தெரிவிக்கலாம்.
விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு போன் செய்த விஷால், ‘விஜய்யின் கத்தி படம் வரவில்லை என்றால் என்னுடைய பூஜை திரைப்படமும் தீபாவளியன்று திரைக்கு வராது. என் சக ஹீரோவுக்காக நான் இந்த முடிவை அறிவிப்பேன். இந்த தீபாவளியை மக்கள் புதுப்படம் இல்லாமல் கொண்டாடட்டும். கத்தி வராமல் என் படம் மட்டும் தியேட்டருக்கு வந்து கலெக்ஷனை அள்ளிக் கொண்டு போவது நான் இருக்கிற சினிமா தொழிலை அவமதிப்பது போன்ற செயலாகும் என்று கூறியிருக்கிறார்.
இந்த தகவல் காட்டு தீயாக பரவி விநியோகஸ்தர் வட்டாரம் பற்றிக் கொண்டு திரிகிறது. எங்கள் தொழிலை நாங்க செய்கிறோம். எங்களை தொழில் செய்ய விடுங்க. படத்தில் தமிழர்களுக்கு எதிரா ஒரு வசனம் இருந்தாலும், நானே வீதிக்கு வந்து போராடுறேன். அதுவரைக்கும் கத்திக்கு தடையாக எது வந்தாலும் அது ஏற்புடையதல்ல என்று விஷால் ஆக்ரோஷமாக தெரிவித்திருப்பதால், எந்த வருடத்திலும் இல்லாத பரபரப்பை இந்த தீபாவளி சந்திக்கிறது.
விஷாலின் அடுத்த படத்தின் தலைப்பு ஆம்பள…. விஷால் பேசுவதை கேட்டால், பொருத்தமான தலைப்புதான் அது.