மிஷ்கின் வேணாம்… பவர் ஸ்டார் பரவால்ல… இளையராஜாவின் முடிவால் இன்டஸ்ட்ரி குழப்பம்!
யூத்துகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா, எபவ் யூத்துகளுக்கு இளையராஜா, வசதியானவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், மாடி வீட்டு ஏழைகளுக்கு இமான், குண்டான் உருட்டு இசைக்கு தேவி ஸ்ரீ பிரசாத் என்று கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி மியூசிக் உலகம் காட்டுகிற ஷோ வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. இதில் இளையராஜாவின் உலகம் விந்தையிலும் விந்தையாக இருப்பதுதான் பலரது புருவத்தையும் உயர வைக்கிறது. எப்படி?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை மட்டுமே இயக்கி வரும் மிஷ்கின் வந்தால் மட்டும் விரட்டியடிக்கும் இளையராஜா, யார் யாரோ பெயர் தெரியாதவர்கள் முகம் தெரியாதவர்களுக்கெல்லாம் மியூசிக் போட சம்மதித்தால்? அதுவே பெரிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது கடைகளிலும் காபி ஷாப்புகளிலும். ‘இளைஞர்களே… என்னிடம் வாருங்கள். உங்களுக்கு நான் இருக்கிறேன்’ என்று சொன்னாலும் சொன்னார். பலாப்பழ யாவாரிகள் முதல், பாட்டு தலையாரிகள் வரை, இளையராஜாவின் இசை கூடத்தை மொய்த்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் அவர் போட்ட மியூசிக்கில் ராமராஜன்கள் வளர்ந்த மாதிரி, ராஜ்கிரண்கள் வளர்ந்த மாதிரி, இப்போதும் ஒருவர் வளர்ந்துவிட்டால் என்னாவது என்கிற அச்சம் வராமலில்லை. ஏனென்றால் இளையராஜா மிக சமீபத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம், பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம். படத்துல யாரு நடிச்சா எனக்கென்ன? கதை நல்லாயிருந்தா போதும் என்று இளையராஜா முடிவெடுத்திருந்தால், அது அவர் இஷ்டம். ஆனால் பவர் ஸ்டார் படத்திற்கு இளையராஜா இசை என்பது, ஜெயராகிணியின் ‘கரகாட்டக்காரி’ படத்திற்கு இளையராஜா மெட்டு போட்டதற்கு சற்றும் குறையாத சறுக்கல்.
‘சறுக்கல் பெருக்கல் எல்லாம் தெரிந்தவர்தான் எங்க ராசா. பொத்திகிட்டு இரு’ என்று பொங்கி வெடிக்கும் அவரது ரசிகமஹா சிகாமணிகள் அடுத்து ‘வின் ஸ்டார்’ வந்து இசையமைக்கக் கேட்டால் என்னாவார்களோ? அதுதான் அச்சமாக இருக்கிறது.