பேசியே நேரத்தை சாப்டுட்டாங்க! இளையராஜா நிகழ்ச்சியை இம்சையாக்கிய தொணதொணப்பு?

“பொதுவாகவே விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறதென்றால் அது மொக்கை கான்சப்ட்டாக இருந்தாலும், சுவாரஸ்யமாக்கிவிடுவார்கள். ஆனால் உலகமே எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சியை இப்படியாக்கிட்டாங்களே…” என்ற முணுமுணுப்போடு கலைந்தது கூட்டம்! முணுமுணுப்புக்கு காரணம் மேடையில் பேசிப் பேசியே அறுத்துத் தள்ளியவர்களின் தொணதொணப்புதான்…!

ஆயிரம் படங்களை அசால்ட்டாக கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் இளையராஜாவின் கச்சேரியுடன்! போனால் நெஞ்சம் நிறைந்த பாடல்களை கேட்கலாம். மனசை இசையால் நனைய விடலாம் என்று நினைத்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி. டைரக்டர் பார்த்திபன், மற்றும் தொகுப்பாளினி டி.டி. இருவரது தொண தொண பேச்சே பாதி நேரத்தை விழுங்கிவிட்டது. இடம் பொருள் ஏவல் எதுவும் தெரியாமல் கூவிக் கூவிக் கொன்று கொண்டிருந்தார் பார்த்திபன். சும்மா பேசியது போதாது என்று பை நிறைய குறிப்புகளையும் எடுத்து எடுத்து பேசிக் கொண்டே போக, வந்திருந்த கூட்டம் ஆ வென்று வாயை பிளந்து ஆ…வ் என்ற சவுண்டுடன் கொட்டாவி விட ஆரம்பித்திருந்தது. அவர் நிறுத்தினால் டி.டியும், டி.டி. நிறுத்தினால் பார்த்திபனுமாக பிடித்து ‘ராவி’த் தள்ளியதில் பெரும் அதிருப்தியோடு கலைந்தது கூட்டம்.

இதில் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களும் அடக்கம்! இளையராஜாவோடு கலையுலகத்தில் நீண்ட தூரம் பயணித்த கமல் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தும், “நாங்கள்லாம் அவருடைய பாடல்களை கேட்கறதுக்காக ஆவலா காத்திருக்கோம். பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று நாசுக்காக சுட்டிக்காட்டினார். அதற்கப்புறமும், இந்த துக்கடாக்களின் தொணதொணப்பு நின்றபாடில்லை.

மாபெரும் சபைதனில் இவர்களைப் போன்ற மவுத் ஆர்கான் பார்ட்டிகள் ஏறினால் உஷார் மக்களே உஷார்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முப்பது லட்ச ஹீரோ! ஆளே வராமல் ஒரு ஷோ கேன்சேல்!

சுவாரஸ்யமான சுக்கு மிளகு பேச்சுக்கு ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் இருந்தாரென்றால், அதே இடத்தில் இப்போது மா.கா.பா.ஆனந்த்! இவரைப் போலவே அவர் என்றும், அவரைப்போலவே இவர் என்றும் மாற்றி...

Close