ஆறாது சினம்- விமர்சனம்

‘பாக்குறீயா… பாக்குறீயா…?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா… அடங்குறீயா…?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும்! இதுவும் போலீஸ் கதைதான். ஆனால் வேற மாதிரி! பாபநாசம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக்தான் இது. இந்த மலையாள ரீமேக்குகள் இருக்கிறதே… சமயங்களில் நம்மை யோசிக்க நேரமில்லாமல் கடத்திக் கொண்டு போகும். இல்லையென்றால், நாம் அதன் மேலேறி குதித்தாலும் ‘சிவனே’ என்று கிடக்கும்! ‘ஆறாது சினம்’ இரண்டும் இல்லாத ரகம். சமயங்களில் திகைத்து, சமயங்களில் சலித்து, சமயங்களில் ரசித்து, ஒரு மிக்ஸ்டு மனோநிலைக்கு தள்ளப்படுகிறோம். இருந்தாலும் ஹரி டைப் கதைகளுக்கு ஆசைப்படாமல், இந்த போலீஸ் கதைக்குள் புகுந்து கொண்ட ஹீரோ அருள்நிதிக்கு மிடுக்கை விட தைரியம் ஜாஸ்தி!

தைரியமான என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியான அருள்நிதியை அடுத்தடுத்த ரீல்களில் சோகம் அப்பிக் கொள்கிறது. அவரது மனைவியையும் குழந்தையையும் தீர்த்துக்கட்டுகிறது வில்லன் கோஷ்டி. அதற்கப்புறம் ‘காக்கி சட்டையும் வேணாம், கம்பீரமும் வேணாம்’ என்று ஒதுங்கிக் கொள்ளும் அருள்நிதி எந்நேரமும் சரக்கும், போதையுமாக கிடக்கிறார். அப்படியே நாட்கள் நகர, நகர, ஒரு நல்ல ஆபிசர் இப்படி கிடக்கலாமா என்று கவலைப்படும் உயரதிகாரி, மீண்டும் அவருக்கு ஒரு பொறுப்பு தருகிறார். அதை ஹீரோ எப்படி டீல் பண்ணினார்? குற்றவாளிகளை புலனாய்வு செய்து கண்டு பிடித்தது எப்படி? இதுதான் ஆறாது சினம்.

தொடர் கொலைகள், எல்லா கொலைகளுக்கும் இடையே இருக்கிற தொடர்பு, அந்த கொலைகாரன் ஒரு கிறிஸ்துவன், அந்த கொலையே ஒரு சிலுவை ஷேப்பில் நகர்கிறது என்பதையெல்லாம் இஞ்ச் பை இஞ்ச் கண்டு பிடித்து நமக்கு சொல்கிற விதத்தில் ஒரு ‘அட’ போட வைக்கிறது திரைக்கதை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு வாத்தியாரை மெல்ல மெல்ல மிருகமாக்கும் அந்த பெண்களும், அவர்களின் தவறுகளும் இந்த சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சங்கதி. கடைசியில் கொலைகாரனை அருள்நிதி நெருங்கிய நேரத்திலும் கூட, அவன் மீது நமக்கு பரிதாபம் வருகிறதே… அங்கு நிற்கிறது இந்த கதையின் நீதி!

வாய்விட்டு சிரிக்கவோ, வலியால் துடிக்கவோ கூட அதிகம் சிரத்தையெடுத்துக் கொள்ளவில்லை அருள்நிதி. அதிகம் நடிக்கத் தேவையில்லாத ரோல் என்பதால் கண்களை ஒருவித போதை நிலையில் வைத்திருந்தால் போதும் என்று அவரே நினைத்துவிட்டாரோ என்னவோ? ஆனாலும் துடிதுடிப்பான அந்த முதல் காட்சியும், அந்த என்கவுன்ட்டரும் செம!

மனைவியின் ஞாபகங்கள்தான் முதல் பாதி என்பதால், நறுக்கி நறுக்கி காட்டுகிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் பகுதிகளை. அவர் இறக்கிற சோகம் நம்மை தாக்கினால்தானே, நாம் அருள்நிதியின் சோகத்தை புரிந்து கொள்ள முடியும்? இரண்டுக்கும் வேலை வைக்கவில்லை இயக்குனர் அறிவழகன்.

காமெடிக்கு ரோபோ சங்கரும், சார்லியும். ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர் அவ்வளவு முட்டாளாகவா இருப்பார் என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. டிபார்ட்மென்ட் பாலிடிக்ஸ்களில் இதெல்லாம் சகஜம்தானே? (எத்தனை படங்கள் பார்த்திருக்கோம்)

ஒரு போலீஸ் அதிகாரியை பற்றி தவறாக எழுதிட்டோமே என்று ஒரு ரிப்போர்ட்டர் கண்கலங்கி அழுவதெல்லாம் கேட்கவே புதுசாக்கீதுப்பா… அந்த கேரக்டரில் வரும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு, நல்லவேளை டூயட்டெல்லாம் பாட விட்டு அதிர்ச்சி தரவில்லை. நல்லாயிருப்பீங்க அறிவழகன்.

வில்லனாக நடித்திருப்பவர் இயக்குனர் கவுரவ்! தமிழ்சினிமாவுக்கு மேலும் ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார். வெல்கம்! அட… பைட் காட்சிகளில் கூட ஒரு தேர்ந்த நடிகரின் சாயல் இருக்கிறதே… தொடரட்டும் உங்கள் நடிப்புப் பணி. அந்த க்ளைமாக்ஸ் பைட்டுக்கு சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். ஒரு மாற்றுத்திறனாளி சண்டையில் இருக்கிற நுணுக்கங்களை அப்படியே சொல்லிக் கொடுத்திருக்கிறார் கவுரவுக்கு. எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் சுகம்.

ஈரம் படத்தில் ஒரு சொட்டு தண்ணீரை கூட, ஆபத்தின் குறியீடாக காட்டி பிரமிக்க வைத்தவராச்சே, அறிவழகன்? இந்த படத்தில் அந்தளவுக்கு ஒளிப்பதிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக தண்ணீர் காட்சிகளில் அறிவழகனின் பழைய ஞாபகத்திற்கு மீண்டும் உயிரூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங்!

ஆறாது சினம் – ‘அடிக்காத’ காக்கி!

– ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேசியே நேரத்தை சாப்டுட்டாங்க! இளையராஜா நிகழ்ச்சியை இம்சையாக்கிய தொணதொணப்பு?

“பொதுவாகவே விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறதென்றால் அது மொக்கை கான்சப்ட்டாக இருந்தாலும், சுவாரஸ்யமாக்கிவிடுவார்கள். ஆனால் உலகமே எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சியை இப்படியாக்கிட்டாங்களே...” என்ற முணுமுணுப்போடு கலைந்தது...

Close