கை விடப்பட்டதா ‘கான் ’? கவலையில் சிம்பு!
சிமென்ட் தரையில் வெந்த நெல்லை விதைப்பதும் ஒன்று! செல்வராகவனும் சிம்புவும் சொன்ன நேரத்தில் ஷுட்டிங்குக்கு வருவதும் ஒன்று! வருஷக்கணக்கில் படத்தை எடுப்பதும், அப்படி எடுக்கிற படத்தை தான் மட்டுமே ரசித்தால் போதும் என்று நினைப்பதும் செல்வாவின் பிடிவாதங்களில் ஒன்று. கனவோடும் பணத்தோடும் வந்த பல தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டிய செல்வராகவனின் லேட்டஸ்ட் முயற்சிதான் கான்! (கானகம் என்பதன் சுருக்கம்தான் இந்த கான்)
சிம்புதான் இந்த படத்தின் ஹீரோ என்றதுமே, “வௌங்குச்சுடா வெங்காய ரசம்” என்று அலுத்துக் கொண்டார்கள் ரசிகர்கள். அவர்கள் என்ன நினைத்தார்களோ, அதையே பரிசாக கொடுத்திருக்கிறார்கள் இருவரும். யெஸ்… இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகளை கசிய விடுகிறது கோடம்பாக்கம். சுமார் பதினேழு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்ததாம். அதுவும் சுமார் ஒரு கோடியை விழுங்கிவிட்டு!
இந்த ஒரு கோடி ரூபாயையும் தன் சொந்த முயற்சியில் திரட்டிதான் படப்பிடிப்பையே நடத்தினாராம் செல்வா. அதற்கப்புறம் வேறு ஒரு தயாரிப்பாளர் இணைந்து கொள்வார். மிச்ச படத்தை அவர் தயவில் முடித்துவிடலாம் என்பது அவரது நம்பிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஐயனார் கோவில் பூசாரி அர்த்த ராத்திரியில் சிரிச்ச மாதிரி கடு கிலியாக அமைந்துவிட்டது அந்த நம்பிக்கை.
வெகு நாட்கள் காத்திருந்த செல்வா, இனி யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்பதால் தம்பி தனுஷ் தயாரிக்கும் படத்தை இயக்கக் கிளம்புகிறாராம். அப்ப சிம்பு? ‘ஐயா சாமீய்… வேற யாரையாவது நம்பு’தான்!