இது என்ன மாயம்- விமர்சனம்
கொஞ்சம் ஏடா கூடமான கதை. தப்பி தவறினாலும், துப்பி துவட்டியிருப்பார்கள். ஆனால் ஒன் சைட் லவ்வர்களை காதலிகளோடு இணைத்து வைப்பதற்காகவே ஒரு தொழிலை ஆரம்பிக்கிற ஹீரோ அண்ட் நண்பர்களை தப்பி தவறி கூட ‘மாமா’ யிசத்திற்குள் தள்ளாமல் டீசன்ட்டாக கதை சொல்லியிருக்கிறார் ஏ.எல்.விஜய். நுரை வழியும் காதல் கதை! அதில் பிய்த்துக் கொண்டு நிரம்பியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருக்காக இன்னும் எத்தனை டிக்கெட்டுகளை வேண்டுமானாலும் வாங்கி மொத்த பர்சையும் அர்ப்பணம் செய்யலாம் தியேட்டருக்கு!
படித்துவிட்டு வேலையில்லாமல் திரியும் நண்பர்கள் ஒரு ஓட்டலில் உட்கார்ந்திருக்கும் போதுதான் அந்த ஐடியா வருகிறது. ஒரு தயிர் சாதம், ஒரு டிப் டாப்பான பீட்சாவிடம் தன் லவ்வை சொல்ல, அவளோ… செருப்பு பிஞ்சுரும் ரேஞ்சுக்கு ரீயாக்ட் பண்ணுகிறாள். அதே தயிர் சாதத்தை பீட்சாவாக்குகிறார்கள் இவர்கள். லவ் ஒர்க் அவுட் ஆகிறது. இந்த ரெமோ, அம்பி ஆட்டம் சுவாரஸ்யமாக அடுத்த கட்டத்தை தாண்டுகிறது. அதையே ஒரு தொழிலாக செய்ய ஆரம்பிக்கிறார்கள். அங்குதான் ட்விஸ்ட். ஒரு பணக்கார தொழிலதிபன், நான் ஒன் சைட்டாக லவ் பண்ணுற பொண்ணை என்னோட சேர்த்து வைங்க என்று வந்து நிற்கிறான். பொண்ணு யாரு? ஷாக்… இந்த கனெக்ஷ்ன் பாயின்ட்டின் சிஇஓ விக்ரம் பிரபுவின் முன்னாள் காதலியான கீர்த்தி சுரேஷ்தான்.
இந்த காதலை சேர்த்து வச்சீங்கன்னா ஒரு கோடி வரைக்கும் செலவு பண்றேன் என்று அவன் சொல்ல, நண்பர்கள் கூட்டம் வற்புறுத்துகிறது. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார் விக்ரம் பிரபு. பிளாஷ்பேக் விரிகிறது. சீனியரான விக்ரம் பிரபு, ஜுனியரான கீர்த்தியை காதலிக்க, அவரும் இவரை பதிலுக்கு காதலிக்க, குறுக்கே வருகிற நண்பர்களால் அவரிடம் லவ்வை சொல்லாமலே பிரிகிறார் விக்ரம். பிளாஷ்பேக் கட். இப்போது விக்ரம் பிரபு தன் பழைய காதலியை இந்த தொழிலதிபனுக்கு தாரை வார்ப்பாரா? க்ளைமாக்ஸ்…
விக்ரம் பிரபுவுடன் நிற்கும் காம்பினேஷன் ஷாட்டிலெல்லாம் குழந்தையாக தெரிகிறார் கீர்த்தி. இவரது உதடும் கன்னமும் கண்களும் நீங்கயென்ன சிவாஜி வாரிசு? நானே அவரை வணங்குறவதான் என்கிறது. பார்க்கில் தன்னை மையப்படுத்தி ஒரு செட்டப் டிராமா நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு அவர் சிரிக்கும் அந்த சிரிப்பு, கோயம்பேட்டில் ஒரு வாரம் தாங்குகிற மல்லிக்கைப்பூ குவியல்.
விக்ரம் பிரபுவை ஸ்டூடண்ட் என்கிறார்கள். நம்பதான் முடியவில்லை. அவரது முகத்திற்கு அடத்தியான மீசையும், தாடியும் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனிந்த அரைகுறை மீசை? காதலால் தவிக்கிற காட்சிகளில் மார்க்குகளை அள்ளுகிறார். முரட்டு சீனியர், கீர்த்தியின் கடைக்கண் பார்வைக்கு பிறகு, முயல் குட்டியாய் பம்முவதும் பார்க்க அழகாக இருக்கிறது.
நவ்தீப் வெகுகாலம் கழித்து தமிழில் நடிக்க வந்திருக்கிறார். வெயிட்டான ரோல்தான். நல்லவேளை வில்லத்தனம் செய்யாமல் ஒதுங்கிவிடுவதால், ‘தம்பி… இங்கேயே தங்கிடுங்களேன்…’ என்று ரசிகர்கள் விரும்பினாலும் ஆச்சர்யமில்லை. எல்லாம் உனக்காகதான் என்று இவர் ட்விஸ்ட் அடிப்பதுதான் கடைந்து வைத்த நாடக பாணி.
படத்தில் வரும் அந்த மூன்றாவது ஃபிகரான காவ்யா ஷெட்டி, சற்றே முற்றியிருந்தாலும், தக்காளிக்கு பாலீஷ் போட்டது போல அப்படியொரு அழகு. அவருக்கும் விக்ரம் பிரபுவுக்குமான ஒன் சைட் லவ், அதற்கப்புறம் அவருக்கு திருமணம் ஆனபின் இருவரும் சந்திப்பதெல்லாம் ஸ்ருதி சுத்தமான ஸ்வரம்.
அதற்கப்புறம் ரேடியோ ஜாக்கிகள் மூன்று பேர். கொட்டி வச்சு அவிச்ச கோரைப்புல் மாதிரி ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லை அவர்களிடம். அவர்களின் வளவள பேச்சுக்கும் தியேட்டரில் ரீயாக்ஷன் இல்லை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் சில பாடல்கள் இனிமை. பின்னணி இசை சிறப்பு. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் கீர்த்தியும் இன்னபிற ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளும் கூட தேவதைகளாக தெரிகிறார்கள்.
மாயம் இருக்கிறது… ஜாலம்தான் இல்லை!
-ஆர்.எஸ்.அந்தணன்