மவுசு கூடியாச்சு மக்கள் ஜனாதிபதிக்கு! யாருகிட்ட…?
பன்னீர் சொம்புல குளிச்சவன், படமெடுக்க வந்தா பச்சத் தண்ணிக்கு கூட பாக்கு மரம் தாண்டனும். இதுதான் இன்றைய கலவர நிலவரம்! யாரோ ஒருவர் இருவர் மட்டும் தப்பிக்கிறார்கள். மற்றவர்களுக்கு? பிழைச்சுக்கிடந்தா புளியோதரைங்கிற மாதிரி ஆகிருச்சு நிலைமை. தியேட்டர் மாஃபியாக்களின் கையில் சிக்கிக் கொண்ட சினிமா, இனி என்னவெல்லாம் செய்து யாரையெல்லாம் கொல்லுமோ?
“சார்… நான் எடுத்த படம் தியேட்டர்ல ஓடுது. ஆனால் எந்த ஷோ என்பது எனக்கே தெரியல” என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிற அளவுக்கு நிலைமை படு மோசம். காலை ஷோ ஒரு படம். மதியம் மேட்னி ஷோ ஒரு படம். ஈவினிங் ஷோ ஒரு படம். இரவு ஷோ ஒரு படம் என்று தலைகுப்புற குழப்புவதில் தியேட்டர்காரர்களுக்கு இணை அவர்களேதான். இதில் அவர்கள் இஷ்டத்திற்கு ஷோ டைமை மாற்றி விடுவதால், இந்த படம்தான் பார்க்கணும் என்கிற வைராக்கியத்தோடு போகிற ரசிகர்களுக்கு, அதிர்ஷ்டம் இருந்தால்தான் அதை பார்க்கவே முடியும்.
இந்த ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்ட அற்புதமான படங்களில் ஒன்று ஜோக்கர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு ஒரு ஷோ என்கிற அளவே தியேட்டர் ஒதுக்கப்பட்டதாம். படம் வெளியாகி, நாடெங்கிலும் அப்படத்திற்கு ஏற்பட்ட ஆதரவுக்கு பின் அவ்வளவும் மாறியிருக்கிறது. நேற்றிலிருந்து பல தியேட்டர்களில் வாகா ஒரு ஷோ ஆக்கப்பட்டு, தினசரி மூன்று காட்சிகள் ஆகிவிட்டது ஜோக்கர். தியேட்டர்களும் ஃபுல்லாகி வருவதால், “அடச்சே… இந்த படத்தை ஒழிக்கப் பார்த்தோமே” என்று தியேட்டர்காரர்களும் வெட்கித் தலை குனிகிறார்களாம்.
மக்கள் ஜனாதிபதி உத்தரவு போட்டுட்டா அதை மறுப்பதற்கு எவண்டா இருக்கான்?