அதாண்டா எங்க கலைஞானி!

நாளை காலை ஆறு மணிக்கெல்லாம் மாடம்பாக்கம் ஏரி பக்கமாக யார் போனாலும் கலைஞானி கமல்ஹாசனை பார்க்கலாம். தனது பிறந்த தினமான நவம்பர் 7 ந் தேதியான நாளைய தினத்தில்தான் அவரது முக்கியமான இந்த மாடம்பாக்கம் ஏரி விசிட். இது கிழக்கு தாம்பரம் பகுதியிலிருக்கும் முக்கியமான ஏரி.

இந்தியாவை சுத்தப்படுத்தும் நோக்கத்தோடு மோடி செய்த பிரமாண்ட குப்பை தொட்டி திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துவரும் சினிமாக்காரர்களில் முதலிடத்திலிருக்கிறார் கமல். இந்த ஏரி விசிட் கூட சுத்தம் தொடர்பானதுதான்! கமல் வருகிறார் என்றால் குளித்து முழுகிவிட்டு கமலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியது மாடம்பாக்கம் மக்கள்தானே? ஆனால் ஐய்ய்யோ… போச்சா? நாளைக்கு நம்ம நிலைமை அதோகதிதானா? என்று அலற ஆரம்பித்திருக்கிறார்கனாம் அந்த ஏரி காத்த சூரிகள். ஏன்?

அதை தெரிந்து கொள்வதற்கு முன் மாடம்பாக்கம் ஏரியின் முக்கியமான வேலைகளில் ஒன்றை பற்றியும் உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளூவனின் நாக்கு படி, இந்த மாடம்பாக்கம் ஏரியைதான் மனசார நம்பிக்கியிருக்கிறார்கள் அங்குள்ள சுற்று வட்டார கழிப்பிட வசதியில்லாத மக்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் அவர்களில் பலர், இந்த ஏரியையும் அதன் கரையையும் மட்டுமே நம்பி முதல் நாள் இரவு மூக்கு முட்ட சாப்பிட்டு வைக்கிறார்கள். எல்லாவற்றையும் கழுவி நிம்மதி பெருமூச்சு விடுவது இந்த ஏரிக்கரையோரத்தில்தான். இப்படிப்பட்ட நன்னாற்றப் பரணி பாடுமளவுக்கு பெருமை கொண்ட இந்த சுற்றுபுறத்தில்தான் தன்னுடைய துடைப்பு பணியை துவங்கப் போகிறார் கமலும். ‘ஏம்ப்பா யாராவது கும்பலா கிளம்பி முதல் நாளே கம்மாக்கரைக்கு போய் அந்த ஏரியாவை சுத்தமா வைங்க. இல்லேன்னா கமல் வந்து சுத்தப்படுத்துறதுக்கு கால் வைக்க முடியாது’ என்று கதறுகிறார்கள் அவரது மன்றத்தை சேர்ந்த கண்மணிகள்.

நடைபெறவிருக்கும் ஆபத்தை உணராத கமலும் வெட்ட வெளிச்சத்தில் போய், தனது முட்டும் மூச்சை கட்டுப்படுத்திக் கொண்டு சம்பவ இடங்களில் கால் வைப்பாரா? அல்லது முதல் நாள் இரவே அங்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி, ஒருவரையும் உட்காரா வண்ணம் செய்து தன் பணியை ஆரம்பிப்பாரா? அவருக்கே வெளிச்சம்!

ஆனால், ‘பா.ஜ.க பிரமுகர்களான தமிழிசை சவுந்தர்ராஜனும், எச்.ராஜாவும் கொண்டு வந்த குப்பையை பொது இடத்துல போட்டுட்டு கூட்டுற மாதிரி போஸ் கொடுத்துட்டு போறாங்க. நம்ம கமல் சாரு மட்டும் சுற்றுலா ஸ்பாட் மாதிரி, கக்கா போற வயிற்றுலா ஸ்பாட்டுக்கு குறிவைச்சு படையெடுக்கிறாரே… இதெல்லாம் யாருப்பா சொல்லிக் கொடுங்குறாங்க அவருக்கு?’ என்று மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சர்யப்படுகிறான் தமிழன்.

அதாண்டா எங்க கலைஞானி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தயாரிப்பாளர் கோபம் சமுத்திரக்கனிக்கும் கோபம்! காடு வளர்ந்தென்ன மச்சான்… நமக்கு கவுரவம்தானே மிச்சம்?

காடு வளர்க்கும் திட்டம் ஒருபுறம் தீவிரமாக இருந்தாலும், காடு ஒழிப்பு திட்டத்தை அதைவிட கவனமாக செய்து வருகிறார்கள் சமூக விரோதிகள். இந்த நேரத்தில்தான் காடும் அதன் அவசியமும்...

Close