சினிமாவுக்கு எந்த அரசாங்கமும் நல்லது செய்யல… கமல் பரபரப்பு பேச்சு!

கண்ணா லட்டு திங்க ஆசையா? படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே குரூப் (நடிகர் நடிகைகள் மட்டும்தான், தயாரிப்பாளர் வேறு, இயக்குனரும் வேறு) மீண்டும் அதன் செகன்ட் பார்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் அந்த ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது! ‘தேவி தியேட்டர் ரொம்ப ராசியான தியேட்டர் ’என்று வந்திருந்த விஐபி கள் பரவசப்பட, க.ல.ஆ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் இங்குதான் நடந்தது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் தயாரிப்பாளர் எச்.முரளி.

பாடல்களை கமல் வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். கமல் ஒரு சிறந்த தயாரிப்பாளரும் கூட என்பதற்கு கே.வி.ஆனந்த் சொன்ன ஒரு உதாரணம், மலரும் நினைவுகளில் ஒரு மகுடம். தேவர் மகன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் அது. ஒரு தேர் வெடிக்கிற மாதிரி காட்சி. சுமார் 3000 பேர் கிரவுட் வேணும்னு டைரக்டர் சொல்லிட்டார். ஆனால் ஆயிரம் பேரைதான் திரட்ட முடிஞ்சுது. கமல் சார் மேக்கப்போடு ஸ்பாட்டுக்கு வந்துட்டார். கூட்டத்தை பார்த்துட்டு ‘மூவாயிரம் பேர் இருக்காதே’ என்று கூற, ‘இல்ல… ஆயிரம் பேர்தான் கூட்ட முடிஞ்சுது’ என்றார்கள். உடனே அன்றைய ஷுட்டிங்கை கேன்சல் செய்ய சொல்லிவிட்டார் கமல். வந்திருந்த ஆயிரம் பேருக்கும் சம்பளம், சாப்பாடுன்னு ஏகப்பட்ட செலவு. ஆனாலும் மறுநாள் மூவாயிரம் பேரை திரட்டிதான் அந்த காட்சியை எடுத்தோம். ஒரு தயாரிப்பாளராக அவர் சமாதானம் ஆகவில்லை. அப்படியொரு மகத்தான கலைஞர்தான் அவர் என்றார்.

கமல் பேச்சு வழக்கம் போல என்கரேஜிங் டைப். இளைஞர்களை வாழ்த்தணும், உற்சாகப்படுத்தணும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் என்னோட வாத்தியார் கே.பி.சார்தான். அவர் எங்களையெல்லாம் வாழ்த்தியதால்தான் எங்களால் இங்க நிற்க முடியுது. சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான திறமைசாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நானெல்லாம் ஏதோ குலுக்கலில் விழுந்த மாதிரி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். அரங்கேற்றம் படத்தில் நான் நடித்து பல நாட்களுக்கு பிறகு ஒரு நாள் சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன். அப்போது காரில் போன கே.பி.சார் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘ஆபிசுக்கு வந்துரு’ என்றார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ஹீரோவாக நடிக்க ஸ்ரீகாந்த்தை கேட்டார்களாம். அவர் பிசியாக இருந்திருக்கிறார். ‘அதுக்காக ரோட்ல போறவனையா நடிக்க வைக்க முடியும்’ என்று பாலசந்தர் சார் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ரோட்டில் போய் கொண்டிருந்த என்னை பார்த்தாராம். அதனால்தான் அந்த சிரிப்பு. அன்று அந்த சாலையில் நான் நடந்து போகாவிட்டால், எனக்கு அப்படியொரு படம் கிடைத்திருக்குமா என்று தெரியாது. சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன். ஆனாலும் சினிமா இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கிறது என்று கமல் கூற, ‘ஆஹா… பத்த வைச்சுட்டாரே பரட்டை’ என்று லேசாக ஷாக் ஆனார்கள் படக்குழுவினர்.

பின்குறிப்பு- இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் சந்தானம், ரஜினியின் லிங்கா படப்பிடிப்பில் இருந்ததால் இங்கு வரவில்லை.

1 Comment
  1. kumar says

    This people are getting millions of money as there salary but condemns the government , if all the top level hero’s and heroin’s will reduce there salaries sure good thinks will happened to indian cinema.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thedal Short Film Trailer

http://youtu.be/5niWXCcIpzM

Close