டைரக்டர்ங்கறவன் கொத்தனார் இல்ல! கரு.பழனியப்பன் கலகல…
நடிகர் நந்தாவை இதற்கு முன் இப்படி யாராவது பாராட்டியிருப்பார்களா தெரியாது. ஆனால் அந்த மேடையில் பிரபல திரைப்பட வசன எழுத்தாளர் ஈ.ராமதாஸ் பாராட்டிய விதம் அற்புதம். ஒவ்வொரு ஊர்லயும் விளக்கு கூட போடாத பழமையான கோவில் இருக்கும். யாரும் அதை கண்டுக்கக் கூட மாட்டாங்க. ஆனால் அது பாட்டுக்கு அது வேலையை செய்யும். அப்படிதான் நந்தாவும். அற்புதமான நடிகர். ஏன் ஜொலிக்கலன்னு தெரியல. அவருடைய ஈரம் படம் பார்த்து நான் அசந்து போனேன் என்றார். இந்த பாராட்டுகளுக்கு நந்தாவின் முகத்தில் ஒரு ரியாக்ஷன் வேண்டுமே? ம்ஹூம். (முகத்தில் சிரிப்பை கண்டுபிடிக்க ஸ்பெஷலாக ஒரு மைக்ராஸ்கோப் கண்டுபிடித்தால்தான் உண்டு. ஒருவேளை இப்படியெல்லாம் இறுக்கமாக இருந்தா விஜய் ஆகிடலாம்னு நினைச்சிருக்கலாம்)
கடந்த சில தினங்களுக்கு முன் பரதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் அதிதி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன், தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த வசனகர்த்தா. வீரம் படத்தில் அவர் எழுதியிருந்த வசனம் ஒன்று போதும், பரதனின் பத்துவிரல் புண்ணியத்தை சொல்ல. நமக்கு கீழே இருக்கிறவங்களை நம்ம நல்லா பார்த்துகிட்டா, நமக்கு மேலே இருக்கிறவன் நம்மளை நல்லா பார்த்துப்பான். இதுதான் அந்த வசனம். இதை அஜீத் சொல்லும்போது தியேட்டரில் கிழிபட்ட கைதட்டல்களுக்கு அளவேது?
கில்லி, தூள், மதுர, ஒஸ்தி, தில், வீரம் என்று ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பரதன், தற்போது இயக்கி வரும் அதிதி படத்தில் நந்தா, அனன்யா, நிகேஷ்ராம் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு ரக்ஷனா மவுரியா குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதிதி என்றால் விருந்தினன் என்று அர்த்தமாம். டைட்டிலுக்கு கீழே அன் எஸ்பெக்டட் கெஸ்ட் என்று ஒரு வாசகத்தை போட்டு மேலும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் பரதன்.
ஆமாம்… பரதன் எப்படி? அதை அந்த விழாவில் கலந்து கொண்ட கரு.பழனியப்பன் வாயால் கேட்க வேண்டும்.
எங்க எல்லாருக்கும் பரதுதான் ரொம்ப சீனியர். நான் பார்த்திபனிடம் அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்வதற்காக அவரை சந்திச்சேன். அப்போ, ஏதாவது ஒரு சீன் எழுதிட்டு வான்னு சொல்லிட்டார். பரதண்ணனிடம் இப்படி சொல்லிட்டாரு. என்ன செய்யறதுன்னு கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்துட்டு வரச் சொன்னார். அதை ரெண்டா மடிக்க சொன்னார். என்னடா இன்னும் எழுதவேயில்ல. அதுக்குள்ள மடிக்க சொல்றாரேன்னு நினைச்சேன். அப்புறம்தான் ஒரு பக்கம் வசனத்தையும் இன்னொரு அதற்குண்டான விளக்கங்களையும் எழுதணும்னு புரஞ்சிகிட்டேன்.
நான், பரதன், தரணி எல்லாரும் ஒரே ரூம்ல தங்கியிருந்தோம். காலையில் கிளம்பி கடைக்கு டீ சாப்பிட வரும்போது வரிசையா கொத்தனாருங்களும் மேஸ்திரிகளும் தொழிலுக்கு போறதுக்கு தயாரா ரோட்ல நின்னுகிட்டு இருப்பாங்க. அப்பவே நாங்க ஒரு முடிவு பண்ணினோம். சினிமாவில ஜெயிச்சாலும், வாழ்க்கை இப்படி தினந்தோறும் கொத்தனாரு வேலைக்கு போற மாதிரி இருக்கக் கூடாது. வதவதன்னு சினிமா எடுக்கக் கூடாதுங்கறதுதான் எங்களோட முதல் லட்சியமா இருந்திச்சு. அப்படிப்பட்டவங்களாதான் ஒண்ணா சேர்ந்திருக்கணும்னு முடிவு பண்ணினோம். அதே மாதிரி தில் படத்திற்கு பிறகு வெகு காலம் கழிச்சுதான் தூள் பண்ணினாரு தரணி. அது பெரிய ஹிட்டாச்சு. ஆனால் அதுக்கு பிறகு ஆறு மாசம் கழிச்சுதான் இன்னொரு படத்திற்கு போனார். சினிமாங்கறது கொத்து வேலையில்ல. அதை முதல்ல புரிஞ்சக்கணும் என்றார் கலகலப்பான கைதட்டல்களுக்கு நடுவில்.
இப்ப கூட இந்த படம் பெரிய ஹிட் ஆகி பரதன் பெரிய லெவலுக்கு வந்தாலும், தரணி படம் இயக்க கிளம்புனார்னா பரதனை வசனம் எழுத அழைச்சுப்பாரு என்று கரு.பழனியப்பன் சொன்னதுதான் அதி முக்கியமான செய்தி.
ஏனென்றால் ஒரு நல்ல எழுத்தாளனுக்கு மூன்று வேளை சாப்பாடும் எழுத்துதானே?