கத்தியை சுற்றும் கட்டுக்கதைகள்!
செப்டம்பர் 18 ந் தேதி சென்னையில் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக் குழுவினர். நடுவில் செப்டம்பர் 15 ந் தேதி வரைக்கும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இதற்கு நடுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிடுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம் விஜய்யும் இயக்குனர் ஏ.ஆர்.முருதாசும். முதல்வர் விஜய்யை சந்திப்பாரா? அல்லது கடந்த முறை போலவே நிராகரிக்கப்படுவாரா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்.
இதற்கிடையில் விஜய்யே சேம் சைட் கோல் போடுவதற்கும் நிறைய வாய்ப்பிருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் கிளம்புகிறது கோடம்பாக்கத்தில். என்னவாம்? நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்திக்காகதான். ஆனால் அவர் ‘லைக்கா’ என்ற நிறுவனத்தை உள்ளே கொண்டு வருவார் என்றோ, அந்த நிறுவனத்தின் பின்னணி பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறப் போகிறாராம். அதற்கப்புறம் அவர் வைக்கப் போகும் வேண்டுகோள்தான் கவனிக்க வேண்டிய கத்தி வீச்சு.
‘கருணாமூர்த்தி லைக்கா நிறுவனத்தை விட்டு விலகி வர வேண்டும். வெறும் ‘ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கும்’ என்றே கத்தி படத்தின் போஸ்டர்கள் மற்றும விளம்பரங்கள் அமைய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப் போகிறாராம். இதற்கெல்லாம் கருணாமூர்த்தி ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையேல் இதையே ஒரு பிரச்சனையாக முதல்வரிடம் கொண்டு செல்லவும் முடிவெடுத்திருக்கிறாராம் விஜய். (அவர் இவரை சந்திக்கிறாரா என்பதே பெரும்பாடு)
ஆனால் லண்டனில் மாமனார் குடும்பம் வசிப்பதால், அதே நகரத்தில் அவ்வளவு செல்வாக்குள்ள லைக்காவை விஜய் பகைத்துக் கொள்ள மாட்டார். அப்படி பகைத்துக் கொண்டால் அது மாமனாருக்கும் சிக்கல். அதனால் இதெல்லாம் கட்டுக்கதை என்றும் மறுக்கிறது இன்னொரு குரூப். கத்தி படத்தின் கைப்பிடி… கூர்களான அவர்களே வாயை திறந்து ஏதாவது பேசினால்தான் உண்டு. அதுவரைக்கும் இது போன்ற கட்டுக்கதைகளுக்கு பஞ்சமேயில்லை!