கத்தி கதை திருட்டு வழக்கு வாபஸ்! வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி? வெளிவராத பின்னணி குமுறல்கள்!
நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து இதுவரை கோபிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அத்தனை நடுநிலையாளர்களும் ‘ஐயகோ’ ஆனார்கள். சிலர் ஆத்திரப்பட்டு ‘இனிமே எவனாச்சும் இப்படி வந்தீங்க, தொலைச்சுப்புடுவோம்’ என்கிற அளவுக்கு குமுறினார்கள். ஃபேஸ்புக் ட்விட்டரில் மீஞ்சூர் கோபிதான் நேற்று கோபி மஞ்சூரியன், பன்னீர் பட்டர் மசாலா எல்லாம்! ஒரு விஷயத்தின் பின்னணி அறிவதற்குள் அவசரப்பட்டு இந்த ‘வாழ்க… ஒழிக…’ கோஷம் தேவைதானா என்பதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய நேரமிது.
போகட்டும்… கத்தி விஷயத்தில் நடந்தது என்ன?
அடிப்படையில் மிக மிக பொருளாதார சிக்கலில் இருக்கும் மீஞ்சூர் கோபிக்கு கோர்ட் வழக்கு செலவு செய்வதற்கெல்லாம் சக்தியே இல்லை என்கிறார்கள். ஆனால் அவரது வாதத்திலிருக்கிற உண்மையை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று ‘உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம்’ என்று உள்ளே வந்திருக்கிறார்கள். முதலில் போடப்பட்ட வழக்கு தள்ளுபடியான பின், சேர்ந்த குழு இது. அப்பீலுக்கு போனார்கள். அதற்கப்புறம் மீஞ்சூர் கோபி கொடுத்த வலுவான ஆதாரங்களை கவனித்த வழக்கறிஞர் குழு, இந்த வழக்கையே வேற மாதிரி கொண்டு போகணும். அதனால் இப்போது சற்று வலுவில்லாமல் போடப்பட்டிருக்கும் இந்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டு முன்னிலும் பலமாக இறங்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக தெரிகிறது. அதன் முதல் கட்டமாகதான் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் மோப்பம் பிடித்த ஏ.ஆர்.முருகதாஸ், டெல்லியிலிருந்து புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒருவரை அழைத்துவரப்போகிறாராம். அதற்கான வியூகமும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கோபிக்கு ஆதரவான வழக்கறிஞர் குழு, ‘நாங்க சொல்லும்போது நீங்க கோர்ட்டுக்கு வந்தா போதும். அதுவரைக்கும் இதை எங்க பொறுப்புல விட்ருங்க. உங்களுக்கு நீதி கிடைக்கும்’ என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்களாம். காத்திருக்கிறார் கோபி.
ஆக, இப்போது மீஞ்சூர் கோபியால் வாபஸ் பெறப்பட்டிருக்கும் இந்த வழக்கு முன்னிலும் வேகமாக விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்பதுதான் இப்போதைய அனுமானம்!
கோபியின் ஆதரவு கோஷக்காரர்களே… அவசரப்பட்டு கலவரப்பட வேண்டாம்!