கயல் விமர்சனம்

ஆச்சர்யமானது இயற்கை! அதைவிட ஆச்சர்யமானது காதல்! இவ்விரண்டையும் வைத்துக் கொண்டு சித்து விளையாட முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். அதுதான் கயல்! ஆறு மாதம் கடுமையாக வேலை செய்துவிட்டு கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிற இரண்டு நண்பர்கள், போகிற வழியெங்கும் சந்திக்கிற அனுபவங்கள்தான் கதை. புதையலை தோண்டிய இடத்தில் சுற்றிலும் குவிந்துகிடக்கிற மண் போல, படமெங்கிலும் அழகான காட்சிகளை குவித்து வைக்கிறார் டைரக்டர் பிரபு சாலமன். எல்லாவற்றையும் தாண்டியிருக்கும் அந்த புதையலைப் போல காதலை தேடி நகர்கிறது கதை.

‘காதல் நினைச்சப்பல்லாம் வந்துடாது. அது தானா வரணும். அப்படியொருத்தியை நான் இன்னும் சந்திக்கல’ என்று நண்பனிடம் வியாக்கியானம் பேசும் ஹீரோ, ஒரு இக்கட்டான நேரத்தில் அவளை சந்திக்கிறான். சட்டென்று வருகிறது காதல். ‘எனக்குள்ள புகுந்து அப்படியே என் மனசை அறுத்து எடுத்துகிட்டு போயிட்டே. நீ என்னை கொளுத்தினாலும் இந்த உடல்தான் சாகுமே தவிர, என் காதல் உன்னையே சுத்தி சுத்தி வரும். கயல்… எனக்கு  உன்னை பிடிச்சிருக்கு’ – தன்னை தீக்குச்சியால் கொளுத்த வரும் அவளிடம் பார்த்தவுடனேயே அவன் பேசுகிற டயலாக் இது. நல்லவேளை… அவனை உயிரோடு கொளுத்த திட்டமிடும் அந்த கூட்டம், மன்னித்து விரட்டியடிக்கிறது. காதலும் அவள் நினைப்புமாகவே கன்னியாக்குமரிக்கு டிராவல் ஆகிறான் அவன்.

சும்மா கிடந்த மனசில் வெடிகுண்டு வீசிவிட்டு போனவன் நினைப்பாகவே இருக்கிற கயல், அதே கன்னியாக்குமரிக்கு அவனை தேடி ஓட, கடலும், பெரும் கூட்டமும், கிறிஸ்துமஸ் திருவிழாவுமாக நகர்கிறது நேரம். இருவரும் சந்தித்தார்களா? அந்த நேரத்தில் பொங்கி வந்த சுனாமி அலை அவர்களை என்ன செய்தது? இதுதான் அந்த பிரமாண்டமான, ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிளைமாக்ஸ்.

இதுபோன்ற டிராவல் படங்களில் கொழுத்த நகைச்சுவை நடிகர்களின் பங்கு இல்லையென்றால் நமது சீட் பகுதி பழுத்துவிடும். ஆனால் வின்சென்ட் என்ற அறிமுக இளைஞரையும், முகம் தெரியாத நாலைந்து குறு நடிகர்களையும் வைத்து சமாளித்திருக்கிறார் பிரபுசாலமன். நம்பிக்கை தொடர்க! அறிமுக நாயகன் சந்திரன் எப்படி?

அட்டக்கத்தி தினேஷ், ரெட்டச்சுழி ஆரி, சிறிதளவு விதார்த் மூவரையும் மிக்ஸ் பண்ணியது போலிருக்கிறார். நடிப்பு அட்சரம் பிசகாமல் வந்திருக்கிறது. ‘வாழ்க்கையையும் அது தரும் அவஸ்தைகளையும் கூட அணு அணுவாக ரசிக்க பழகு’ என்கிற கேரக்டர் அவருக்கு. அது போதாதா? புரட்டி புரட்டி அடிக்கும் போது கூட, அந்த நேரத்தில் மட்டும் அலறி, அடுத்த வினாடியில் சிரிக்கிறார். ‘என்னாங்கடா போங்கு ஆட்டம் இது’ என்று மனசு இவரை ‘அன் லைக்’ செய்ய வேண்டுமே! ம்ஹும். அங்குதான் நிற்கிறது சந்திரனின் முகம்! பாவம்… நல்லாயிருந்த புள்ளைய காதல் இப்படி கந்தலாக்குதே… என்கிற கவலையை கொடுத்துவிடுகிறது அந்த கன்னியாக்குமரி எபிசோட்!

படத்தின் நாயகி ஆனந்தியின் பெயர்தான் கயல். ரொம்பவே ஸ்பெஷலான கண்கள் அவருக்கு. ‘விரும்புகிறேன்’ படத்தில் சினேகாவை பார்த்த மாதிரி இருக்கிறது இவர் தோற்றம். வீட்டை தாண்டி உலகம் தெரியாத அந்த பெண், தன் காதலில் எப்படி உறுதியுடன் இருக்கிறாள்… என்பதற்கு அந்த போலீஸ் பெண்மணியிடம் பிடிவாதம் காட்டுகிற ஒரு இடம் போதும். கண்டெய்னர் லாரியில் டிராவல் ஆகிற நேரத்தில் மட்டும் கயலின் சிரிப்பை பார்க்க முடிகிறது. அப்புறம்…? ஒரே டென்ஷன்தான் அந்த கண்களில்!

ஹீரோவுக்கு நண்பனாக வரும் அந்த அறிமுகத்தின் பெயர் வின்செட்! இவரது நக்கல் போலீஸ்காரர்களை கூட விட்டு வைக்கவில்லை. என்னவோ மனம் ஒப்பி ரசிக்க முடிகிறது அந்த அலம்பல்களை.

படத்தில் நம்மை வியக்க வைக்கிற மேலும் இரண்டு கேரக்டர்களில் ஒன்று தினகரன் தேவராஜ். அண்ணன் மகள் காதலனுடன் ஓடிப் போய்விட, ஜோடியை தேடிக்கிளம்பும் கேரக்டர் இவருக்கு. சந்திரனையும் வின்சென்டையும் நைச்சியமாக பேசி வீட்டுக்கு கொண்டு வருகிற காட்சியில் துவங்கி, காதலனை தேடிக்கிளம்பும் கயலுக்கு ‘நாசமா போ’ என்று சாபம் கொடுக்கிற காட்சி வரைக்கும் அசரடிக்கிறார் மனுஷன். இதுவரை நடித்தது எப்படியோ போகட்டும்… இந்த படம் இனிய தொடக்கமாக அமையட்டும்!

மற்றொரு கேரக்டர், அந்த வயசானவர்! ‘டேய்… இந்த ராஜா டிரஸ்ல ஒண்ணு மிஸ்சாயிருக்கு. என்னன்னு கண்டுபிடி’ என்று டென்ஷன் நேரத்தில் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக் கொள்கையில் தியேட்டரே கைத்தட்டல்களால் அலறுகிறது.

குண்டு ஆர்த்தி, கலைஞர் டிவி பெரைரா, ஊமைக்கிழவி என்று இயல்பான கேரக்டர்கள் நம்மை கவர்ந்தாலும், ஒவ்வொரு காட்சியும் வழக்கமான அளவு தாண்டி நீளம் நீளமாக இருப்பது சற்றே ஆயாசத்தை தருகிறது. நிமிஷத்தில் கடந்துவிடுகிற விஷுவல் அழகுக்காக இந்தியாவின் வடக்கு பக்கம் மேய்கிற காமிராவும், அந்த உழைப்பும் பிரபுசாலமனின் நேர்த்தியை உரக்க சொல்கிறது. அதே நேரத்தில் வாழ்க்கை பற்றிய தத்துவம் பேசும் போதெல்லாம் மனுஷன் வேதாந்தியாக மாறி லெக்சர் எடுக்கிறார். அந்த நேரங்களில் மட்டும் ‘பிரபு சார்… ப்ளீஸ் விட்ருங்க’ ஆகிறது தியேட்டர்!

டி.இமானின் இசையில் எல்லா பாடல்களும் அருமை. இனிமை. ஒளிப்பதிவாளர் வி.மகேந்திரனின் உழைப்பில் உயிரெழுத்தாக மாறி நிற்கிறது அத்தனை பாடல்களும். இறுதியில் வரும் அந்த சுனாமி காட்சிக்காகவே இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிப்பீட் அடிக்கலாம். மீண்டும் ஒளிப்பதிவாளர் மகேந்திரனுக்கும், அதை நிஜமாக கண்முன் கொண்டு வந்த கிராபிக்ஸ் கலைஞர்களுக்கும், கலை இயக்குனர் வைரபாலனுக்கும் தனி பாராட்டுகள்.

கயல்- எல்லார் மனசுக்குள்ளும் வீசிவிட்டுப் போகும் காந்தப்‘புயல்’!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்! கோடம்பாக்கமே ஜில்ல்ல்ல்ல்ல்….ல்!

தாஜ்மகாலுக்கு தங்க முலாம் பூச நினைக்கிற மாதிரி சில விஷயங்கள் அபூர்வமாக நடக்கும் சினிமாவில். படத்திற்கு இன்னும்... இன்னும்... என்று வெயிட் ஏற்றிக் கொண்டே போவார்கள். அப்படிதான்...

Close