வெள்ளக்கார துரை – விமர்சனம்

‘லாண்டரியில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாது’ என்பார்களே… அப்படியொரு படம்! எப்பவோ ஒரு சீன்ல சிரிச்சோம், எப்பவோ ஒரு சீன்ல கைதட்டுனோம்னு இல்லாம இஞ்ச் பை இஞ்சாக சிரிக்க வைத்து அனுப்புகிறார் எழில். அதில் பல அவர் படத்திலிருந்தே ரீ புரடக்ஷன் செய்யப்பட்டதுதான் என்றாலும், மனசு நிறைஞ்சு சிரிக்கிற நேரத்தில் பழைய பஞ்சாக்கத்தை புரட்டுவானேன்?

பேஸ்புக், ட்விட்டர், இங்கிலீசு போன்ற அத்தியாவசிய அலட்டல்கள் தெரிஞ்ச விக்ரம் பிரபுவை வேலைக்கு வைத்துக் கொள்கிற சூரிக்கு ரியல் எஸ்டேட்தான் தொழில். வட்டி வரதனிடம் பதினைஞ்சு லட்சம் கடன் வாங்கி இந்த தொழில் ஆரம்பித்தால், வாங்கிய இடம் சுடுகாடு என்கிற விஷயமே அப்புறம்தான் தெரியவருகிறது சூரிக்கு. அசலும் வட்டியும் வந்து சேரலேன்னா சம்பந்தப்பட்ட நபரை கூண்டோடு அடிமையாக்கிக் கொள்வது வரதனின் ஸ்டைல். அப்புறமென்ன? விக்ரம் பிரபு, சூரி அண் கோ வரதனிடம் சிக்குகிறார்கள். ஆரம்பம்தான் அப்படி. அதற்கப்புறம் வரதனின் டாவ்வை விக்ரம் பிரபு ரூட் விட்டு கொண்டு போய்விடுகிறார். நடக்கிற சேசில் யாருக்கு டாவ்? யாருக்கு டங்குவார்? என்பது க்ளைமாக்ஸ்.

விக்ரம் பிரபு, சூரி அண்கோ வரதனிடம் வந்து சேர்கிற வரைக்கும் ‘ட்ரை’ காமெடியாக போய் கொண்டிருக்கும் படம், வந்து சேர்ந்தபின் எடுக்கிறது பாருங்கள் வேகம்… சும்மா கதற கதற சிரிக்க வைக்கிறார்கள். எப்படியாவது இங்கிருந்து தப்பினால் போதும் என்று ஓட்டமெடுக்கும் சூரி, அதே வேகம் சற்றும் குறையாமல் திரும்பி வந்து அதே கூடாரத்தில் தஞ்சமடைகிற காட்சி நீ…ளம் என்றாலும், நீக்கமற சிரிக்க முடிகிறது. முதலில் அடிமையாக நுழைந்து அங்கேயே சூப்பர்வைசர் ஆக பிரமோஷன் ஆகிவிடும் விக்ரம்பிரபு, அதை சொல்லியே அலட்டுவது ஒரு பக்க சுவாரஸ்யம் என்றால், ஸ்ரீதிவ்யாவிடம் காதல் வயப்பட்டு அவரையே சுற்றி சுற்றி வருவது இன்னொரு பக்க சுவாரஸ்யம். அதுவரைக்கும் வரதனின் தங்கைதான் அவர் என்று ஆடியன்ஸ் நினைத்துக் கொண்டிருக்க, ‘ங்கொய்யால… அப்படியா நினைச்சீங்க?’ என்று பிளேட்டை திருப்பி போடுகிறார் எழில். செம ட்விஸ்ட் அது.

ஆக்ஷ்ன் ஹீரோவான விக்ரம் பிரபுவுக்கு காமெடியும் நன்றாகவே வருகிறது. இவரும் ஸ்ரீதிவ்யாவும் காதலிக்கிறார்களா, இல்லையா? என்பதை புரிந்து கொள்வதற்குள் பின் மண்டையிலிருந்து பிளாக் இங்க் வந்துவிடும் போலிருக்கிறது. ஒரு நேரம் சிரிக்கிற ஸ்ரீதிவ்யா அடுத்த நிமிடமே எரிந்து விழுகிறாரா? ஒரே குழப்பம்ஸ்.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் சென்ட்டிமென்ட் காரணமாக இருக்கலாம். ஸ்ரீதிவ்யாவுக்கு கொடுக்கப்பட்ட பாவாடை தாவணி கலர் கூட அப்படியே அச்சு அசலாக அதே படத்தில் வந்த மாதிரி!

படமெங்கிலும் நட்சத்திரக் கூட்டம். அத்தனை பேரும் தங்கள் கடமை உணர்ந்து சிரிக்க வைக்கிறார்கள். ஆர்க்கெஸ்ட்ராவில் பாட வரும் சிங்கம்புலி, மண்ணில் இந்த காதலன்றி…’ பாடலை தன் ரசிகனுக்காக ஒன்ஸ் மோர் பாடி ரத்த வாந்தி எடுக்கிற காட்சிக்கும், நான் கடவுள் ராஜேந்திரன் உண்மையை வரவழைக்கிறேன் என்று களம் இறங்கி, ‘நீ டிபார்ட்மென்ட் ஆளா?’ என்று சூரியிடம் வியந்து ஏமாறுகிற காட்சிக்கும், ‘முறை செய்யாம ஓய மாட்டேன்’ சாதி பாசம் காட்டும் சிங்கமுத்து சம்பந்தப்பட்ட காட்சிக்கும் சிரிக்காதவர்கள் இருந்தால், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நாடு கடத்தியே விடலாம் அவர்களை. அப்படியொரு கலகலகல… அவை.

வில்லனின் கூடாரத்தில் சும்மா அட்மாஸ்பியருக்கு வந்து போகும் துண்டு துக்கடாக்கள் கூட வயிறு வலிக்க விடுகிறார்கள். என் பேரு மோகன்லால் என்கிற ஒருவனிடம், ‘மோகன்லால் மம்முட்டிய வெட்றத இப்பதாண்டா பார்க்குறேன்’ என்பார் சூரி. வசனம் எழிச்சூர் அரவிந்தன் என்பவர். இவரது புண்ணியத்தில் படத்திற்கே ஒரு ஜுகல் பந்தி அந்தஸ்து கிடைக்கிறது.

வட்டி வரதனாக நடித்திருக்கிறார் ஜான் டேவிட். படிக்காத வில்லேஜ் தாதாவின் அத்தனை ரவுசும் பாடி லாங்குவேஜாக புகுந்து நாட்டியமாடுகிறது மனுஷனுக்குள்.

ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி. அதிக மெனக்கெடல் தேவைப்படாத படம் என்றாலும், பல இரவு காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் லைட்டுங்குகள் அம்சம். இசை டி.இமான். ஏற்கனவே கேட்ட சாயலில் எல்லா மெட்டுகளும் இருக்கிறது. ஆனால் அந்த காக்கா முட்டை பாடலும், வைக்கம் விஜய லட்சுமியின் குரலும் அப்படியொரு கிறக்கம். மற்றொரு கூதக்காத்து… லவ்வர்ஸ் ஸ்பெஷல்.

கலர் சர்பத்துக்கு ஆசைப்படுறவங்கதான் திருவிழாவுக்கு போகணும். இந்த படமும் அப்படிதான். மேலோட்ட காமெடி, மேம்பட்ட காமெடிக்கெல்லாம் ஆசைப்படுகிறவர்கள் வேண்டுமானால் வெள்ளக்கார துரையை வாயில் நுரை தள்ள விமர்சிக்கட்டும்… ஆனால் கொசுக் கடிச்சாலும் சிரிப்பேன். குளவி கொட்டுனாலும் சிரிப்பேன்னு வாழ்க்கையை லேசாக்கிக் கொள்ள நினைக்கும் அத்தனை ரசிகனுக்கும் இந்த வெள்ளைக்காரன்,

சந்தேகமேயில்லை… வெள்ளை சிரிப்புக்காரன்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
கயல் விமர்சனம்

ஆச்சர்யமானது இயற்கை! அதைவிட ஆச்சர்யமானது காதல்! இவ்விரண்டையும் வைத்துக் கொண்டு சித்து விளையாட முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். அதுதான் கயல்! ஆறு மாதம் கடுமையாக வேலை செய்துவிட்டு...

Close