மீண்டும் கெட்டவன்? சிம்புவை நெருக்கும் பழைய கோஷ்டி!
சொம்புக்குள் தலையை விடுவதும் ஒன்று. சிம்புவை வைத்து படம் எடுப்பதும் ஒன்று என்கிற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக பொய்யாக்கி வருகிறார் சிம்பு. அதிசயம்… ஆனால் உண்மை! செல்வராகவன் சிம்பு இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘கானகம்’ படம், நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வப்போது ஷுட்டிங்குக்கு லேட்டாக வந்தாலும், குறித்த நாட்களுக்குள் எடுக்க வேண்டிய காட்சியை எடுத்து முடிக்கிற அளவுக்கு இருவருமே உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு புதிய முயற்சி. (நிஜத்தில் இது ரொம்ப பழைய முயற்சி) சில வருடங்களுக்கு முன் சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை தயாரித்தது திருச்சி பரதன் பிலிம்ஸ். நந்து என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வந்தார். வழக்கம் போல சிம்பு இவர்களையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார். சதாரணமாகவே பரதன் பிலிம்ஸ் நிறுவனம் கண்ணில் ஜலம் தேக்கி கவலைப்படுகிற கோஷ்டியல்ல. மற்றவர் கண்ணில் ஜலம் தேக்கி ‘அடிக்கிற’ அளவுக்கு ‘முரட்டு செல்வாக்கு’ படைத்தவர்கள். சிம்புவை இழுத்து வைத்து எழுதி வாங்கிவிட்டார்கள். செலவு பண்ணிய மொத்த தொகையையும் திரும்ப கொடுத்தார் டி.ஆர். இது ஒருபுறமிருக்க தனக்கு சிம்பு கொடுத்த டார்ச்சர் தாங்காமல், ‘போய்யா…. இந்த உலகத்துல உன்னைய விட்டா வேற நடிகனே இல்லையா? என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்’ என்று சிம்புவின் முகத்திற்கு நேராகவே விரலை நீட்டிவிட்டு கிளம்பிவிட்டார் நந்து.
அது நடந்து பல வருஷமாச்சு. இப்போது எல்லாருமே பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள். சிம்புவின் செல்போனில் சிவபெருமான் படமே ஸ்கிரீன் சேவராக இருக்கிற அளவுக்கு அவர் கடவுளின் சேவகர் ஆகிவிட்டார். சமீபத்தில் பரதன் பிலிம்ஸ்சை சந்தித்த நந்து, ‘நாம கெட்டவனை திரும்ப ஆரம்பிக்கலாம் சார்’ என்றாராம். அவர்களும், ‘சிம்புகிட்ட பேசுங்க. அவர் ஓ.கேன்னா நாங்களும் ஓ.கே’ என்றார்களாம். அதே ஸ்பீடில் சிம்புவை சந்தித்தாராம் நந்து. பழைய பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல், ‘என்னய்யா… எப்படியிருக்க?’ என்று அன்பொழுகினாராம் சிம்பு.
‘இதுவரைக்கும் நாம எடுத்த ஃபுட்டேஜ், எடிட்டிங் பண்ணி முடிச்ச பிறகும் 33 நிமிஷத்துக்கு இருக்கு. இன்னும் பதினைஞ்சு நாள் கால்ஷீட் கொடுங்க. படத்தையே முடிச்சுர்றேன்’ என்றாராம் நந்து. அரைகுறையாக தலையாட்டியிருக்கிறாராம் சிம்பு.
தான் நிரந்தர கெட்டவன் இல்லை என்பதை சிம்பு நிரூபிக்கிற நேரம் இது. என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?