கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12 ஆர்.எஸ்.அந்தணன் ஒரு கையில் விஜய் கால்ஷீட் மறு கையில் பிரியாணி பொட்டலம் இரண்டில் எது வேணும் அவருக்கு?

படப்பிடிப்புக்கு முன் உதவி இயக்குனர்களின் பணி- (இதை படிப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம்…)

ஒரு ஆர்வமுள்ள இளைஞர் உதவி இயக்குனராகிவிட்டாலே அவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் இது. கலைஞானி கமல்ஹாசன் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார். அவர் வேறொருவர் தயாரிப்பில் படம் இயக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கான அன்றாட ‘பேட்டா’ பணத்தை அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்க அனுமதிக்க மாட்டார். தனது ஆபிசில் பெற்றுக் கொள்ள சொல்லிவிடுவார். ஏன் தெரியுமா?

படப்பிடிப்புக்கு தேவையான ஏதாவது ஒன்றை தயாரிப்பு நிர்வாகியிடம் இந்த உதவி இயக்குனர்கள் கேட்டு, அது தரப்படவில்லை என்றால் இவர்கள் அந்த தயாரிப்பு நிர்வாகியை கடிந்து கொள்ள நேரிடும். அதற்கப்புறம் அவர் இந்த உதவி இயக்குனர்களை நடத்துகிற விதம் நல்லபடியாக இருக்காது. படப்பிடிப்பு முடிந்ததும் கூலி வாங்க நிற்கும் படப்பிடிப்பு தொழிலாளியோடு தொழிலாளியாய் இவர்களையும் வரிசையில் நிற்க வைத்து பேட்டா கொடுத்தால்? அந்த அவமானத்தை தன்னிடம் பணியாற்றுகிற யாரும் அனுபவிக்க கூடாது என்ற அக்கறைதான் அவருக்கு. அதில் கொஞ்சம் சுயநலமும் உண்டு. க்யூவில் நிற்க வைக்க மாட்டார் என்பதற்காகவே அந்த தயாரிப்பு நிர்வாகியிடம் பணிந்து போக ஆரம்பிப்பார்கள். அதற்கப்புறம் படப்பிடிப்புக்கு தேவையான விஷயங்கள் முறையாக வந்து சேராதல்லவா?

அப்படியே கமல் தன் உதவி இயக்குனர்களுக்கு அடிக்கடி சொல்லும் வாசகம் இதுதான் என்கிறார்கள் திரையுலகத்தில். ‘காலையில் ஷுட்டிங் நடக்கும் ஏரியாவுக்குள் வரும் எந்த இணை இயக்குனரோ, அல்லது உதவி இயக்குனரோ, தயாரிப்பு நிர்வாகியிடம் ‘மதியம் சாப்பாட்டு மெனு என்ன?’ விசாரித்தால் போதும், அந்த நபரால் ஜென்மத்திற்கும் படம் இயக்கவே முடியாது’ என்பதுதான் அது. எண்ணம் முழுவதும் ஷுட்டிங்கில் இருக்க வேண்டுமே தவிர, மதிய சாப்பாட்டில் இருக்கக் கூடாது என்பாராம்.

இன்னொரு சம்பவம். இதை சொன்னால் உதவி இயக்குனர்களில் சிலருக்கு கோபம் கூட வரலாம். ஆனால் லட்சிய வெறியோடு பட்டினி கிடப்பவர்களும் இங்கே உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு இந்த விஷயத்தை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு முறை என் நண்பரும் பத்திரிகையாளருமான ஜெ.பிஸ்மி, ஒரு இணை இயக்குனரை காண்பித்து ‘இவரை நல்லா பார்த்துக்கங்க. ஒரு சேதி சொல்றேன்’ என்றார். அதற்கப்புறம் அவர் நகைச்சுவையாக சொன்ன விஷயம் இது.

அந்தாளுகிட்ட போய், இடது கையில் ஒரு பிரியாணி பொட்டலத்தையும், வலது கையில் விஜய் கால்ஷீட்டையும் வைத்துக் கொண்டு எது வேணும் என்று கேட்டால், அவர் கூச்சப்படாமல் பிரியாணி பொட்டலத்தைதான் வாங்குவார். வேணும்னா பாருங்க. இன்னும் பத்து வருஷம் ஆனாலும் அவரால் படம் பண்ண முடியாது. யாருகிட்டயாவது அசிஸ்டென்ட்டாதான் இருப்பார்‘ என்றார். என்ன ஆச்சர்யம்? நான் இப்போதும் அவரை பல இடங்களில் பார்க்கிறேன். அசிஸ்டென்ட்டாகவே… அதுவும் பத்து வருடங்களுக்கும் மேலாக!

உண்டி சிறுத்தல் பெண்டிற்கு மட்டுமல்ல, உதவி இயக்குனர்களுக்கும் அழகுதான்!

———————————————————————————————————————————————————————————-

சரி… மெயின் விஷயத்திற்கு வருவோம். ஒரு படம் கதை விவாதத்தில் துவங்கும் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். அந்த விவாதத்தில் உதவி இயக்குனர்களின் பணி என்ன என்பதையும் அலசிவிட்டோம். படப்பிடிப்புக்கு முன்பு இன்னும் பல முக்கியமான வேலைகள் இருக்கிறது. ‘இன்று பாடல் பதிவுடன் இனிதே துவங்குகிறோம்…’ என்ற வாசகத்தை அடிக்கடி தினத்தந்தி, தினகரன்களில் பார்த்திருப்பீர்கள்.

டைரக்டர் தனது கோ டைரக்டர் மற்றும் இரண்டு உதவி டைரக்டர்களுடன் இங்கு வந்து அமர்ந்து விடுவார். ஏற்கனவே இசையமைப்பாளரிடம் கதை சொல்லப்பட்டிருக்கும். பாடல்கள் படத்தில் எந்தெந்த இடங்களில் வரவேண்டும் என்பதை இயக்குனரும் இசையமைப்பாளரும் தீர்மானிப்பார்கள். இசைஞானி இளையராஜா போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் அந்த இடத்தையும் அவர்களே தீர்மானித்துவிடுவார்கள். நாம் சொல்வது அடுத்தகட்ட இசையமைப்பாளர்களை பற்றியும் அல்லது அறிமுகமாகிற இசையமைப்பாளர்களின் கம்போசிங் பற்றியும்தான்.

சுச்சுவேஷனுக்கு ஏற்றார் போல இசையமைப்பாளர் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பார். அந்த ட்யூனை கேட்டுவிட்டு டைரக்டரின் காதில் ரகசியமாக தனது அபிப்ராயத்தை சொல்வார்கள் இந்த உதவி இயக்குனர்கள். ‘சார். இந்த ட்யூனை விட இன்னும் பெட்டரா இருக்கலாம்’ என்று சொல்வதுண்டு. பல ட்யூன்கள் இந்த உதவி இயக்குனர்களால் பாழாய் போகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை அந்த இசையமைப்பாளர் இயக்குனரை விட்டுவிட்டு காதில் கிசுகிசுக்கும் இந்த உதவி இயக்குனர்களை பிடித்துக் கொள்வார். ‘தம்பி. எப்பிடியிருக்கு?’ என்று அவர் நேரடியாக அந்த போட்டுக்கொடுக்கும் உதவி இயக்குனரிடமே கேட்டுவிடுவதால் பலர் ‘சூப்பர்’ என்று கூறி பின்பு டைரக்டரிடம் வாங்கியும் கட்டிக் கொள்வார்கள். இந்த நேரத்தில் கதையும், அதற்கு இந்த ட்யூன் பொருந்துகிறதா என்பது மட்டுமே உதவி இயக்குனர்களின் பார்வையாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் ட்யூனுக்கு டம்மி வரிகள் போடக் கூடிய வாய்ப்பும் இந்த உதவி இயக்குனர்களுக்கு கிடைக்கும். ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும். கேட்கும் போதெல்லாம் அந்த ஞாபகம் தாலாட்டும்…’ என்றொரு பாடல் சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே தாலாட்டியது நினைவிருக்கலாம். அதை எழுதிய கலைக்குமார் என்பவர் டைரக்டர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தார். கம்போசிங்கின் போது அவர் போட்ட டம்மி வரிகள்தான் பின்பு பாடலாக வந்து அவரை பாடலாசிரியராகவும் மாற்றியது. அதன்பின் சுமார் 100 பாடல்களாவது வெவ்வேறு படங்களில் எழுதிவிட்டார் அவர்.

பாடல் பதிவு முடிந்ததும் உதவி இயக்குனர்களின் அடுத்த வேலை போட்டோ ஷுட்டிங்குக்காக உதவுவது. முன்பு இந்த கலாச்சாரம் இல்லை. ஆனால் இப்போது 90 சதவீத படங்களுக்கு தனியாக போட்டோ செஷன் எடுக்கப்படுகிறது. இதற்காகவே ஸ்பெஷல் போட்டோகிராபர்கள் இருக்கிறார்கள். கைமல், மணிகண்டன், வெங்கட்ராமன் போன்ற இந்த ஸ்பெஷலிஸ்டுகள் மும்பையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். பில்…? லட்சங்களில்! இதில் இன்னொரு எக்ஸ்பர்ட்டும் இருக்கிறார். தேனி ஈஸ்வர். இவர் விகடனின் வளர்ப்பு. இவரைப்போலவே ஏராளமானவர்கள் இப்போது கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இப்படி எடுக்கப்படுகிற புகைப்படங்கள் பத்திரிகை விளம்பரங்களுக்கும், போஸ்டர் அடிக்கவும் பயன்படுகின்றன. பெரும்பாலும் இவை கதையை ஒட்டியே இருக்கும். இப்போது சில இயக்குனர்கள் அதையும் செய்வதில்லை. எங்காவது நல்ல புகைப்படத்தை பார்த்தால் ‘அதே மாதிரி நம்ம ஆர்ட்டிஸ்ட்டை வச்சு எடுத்துக் கொடுத்திடுங்க’ என்று கூறிவிடுகிறார்கள்.

இந்த மாதிரி அசத்தல் புகைப்படங்களை தேடிப்பிடிக்கிற வேலையும் உதவி இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்படும். லேண்ட் மார்க், ஹிக்கிம் பாதம்ஸ் என்று புத்தகக்கடைகளில் அலைந்து திரிந்து நல்ல புகைப்படங்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கி வருவதும் இவர்களின் வேலைகளில் ஒன்று. இன்டர்நெட்டில் தேடுவதும் இவர்களின் பணி.

இன்றைய வளர்ச்சியில் டெஸ்ட் ஷுட் என்று சொல்லப்படுகிற ஆடிஷனும் எடுக்கப்படுகிறது. மிகப்பெரிய வெற்றியடைந்த சுப்ரமணியபுரம், நாடோடிகள், படங்களுக்கு இந்த முறையை கடை பிடித்திருக்கிறார்கள். தற்போது வருகிற அநேக படங்களுக்கு இந்த ஸ்டைல் பின்பற்றப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து படம் எடுப்பதுதான் இந்த ஆடிஷன். சாதாரண வீடியோ ஷுட்டிங்தான் இது என்றாலும் நடிப்பே வராத, அல்லது அந்த கேரக்டருக்கு பொருந்தாத நடிகர் நடிகைகளை அங்கேயே கழற்றிவிட இந்த முறை பெரிதும் உதவுகிறது. இந்த ஆடிஷன் ஒரு மினி ஷுட்டிங் போலவே நடப்பதால் நிச்சயம் உதவி இயக்குனர்களின் பங்கு நிறையவே இருக்கும்.

ஓடிய படமோ, ஒரு நாள் கூட ஓடாத படமோ? பாராட்ட வேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த சண்முகராஜ் ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்தை இயக்கினார். தமிழ்சினிமாவில் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்தார் இவர். தான் எடுக்க நினைத்த படத்தை சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்து பீட்டா கேமிரா உதவியுடன் படமாகவே எடுத்துவிட்டார். இதில் பாடல் காட்சிகளும் கூட அடக்கம். எடுக்கப்பட்ட காட்சிகளை முறையாக எடிட் செய்து இரண்டரை மணி நேர படமாகவே உருவாக்கிவிட்டார் இவர்.

படப்பிடிப்புக்கு தேவையான பெப்சி தொழிலாளர்கள்தான் பங்கு பெறவில்லையே தவிர, உதவி இயக்குனர்கள் அத்தனை பேரின் உதவியுடன் இந்த படம் உருவானது. அதற்கப்புறம்தான் யூனிட், மற்றும் ஒளிப்பதிவாளர் துணையுடன் இந்த படத்தை திருவண்ணாமலை அருகே படமாக்கினார் அவர். இப்படி ஒரு முயற்சியை இதற்கு முன்பு யாரும் செய்யவில்லை. ஆனால் படத்தின் வெற்றிக்கு இது துணை கொடுக்கவில்லை என்றாலும், பட்ஜெட்டுக்கு உதவியது. தேவையில்லாத காட்சிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருமே ஒரே டேக்கில் ஓ.கே வாக நடித்ததால், பிலிமும் இழுக்கவில்லை.

பூஜையின் போதே இது எந்த மாதிரி படம்? என்று மக்களுக்கு சொல்லவும், விநியோகஸ்தர்களின் பார்வையை தம் பக்கம் திருப்பவும் செய்யப்படும் மிகப்பெரிய செலவுதான் இந்த படத்துவக்க விழா. அழைப்பிதழ் விநியோகத்தில் துவங்கி, துவக்க விழா நடைபெறுகிற இடத்தில் வாழை மரமோ, கலர் கொடியோ கட்டுகிற வரைக்கும் இந்த வேலைகள் உதவி இயக்குனர்களின் தலையில்தான்! இந்த துவக்க விழாக்களில் பிரஸ் மீட் இருந்தால் அதற்கு தேவையான பிரஸ் கிட், மற்றும் போட்டோ சிடிகளை தயாரிக்கிற பணியை பிஆர்ஓ வுடன் சேர்ந்து செய்வதும் இந்த உதவி இயக்குனர்கள்தான். பின்பு பத்திரிகைகளில் வரும் அந்த செய்திகளை வெட்டி தனியாக ஒட்டி ஒரு ஆல்பமாக்கி தருகிற வேலை¬யும் இவர்களுக்குதான்.

இந்த துவக்க விழாவின் போதே படத்தின் கதாநாயகனுக்கு சோப்பு போட்டு வைத்துக் கொள்கிற உதவி இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர், ‘நான் தொழில் கத்துகிட்டு வருவேன். அந்த நேரத்தில் கதை கேளுங்க சார். மறந்துராதீங்க’ என்று அந்த ஸ்பாட்டிலேயே துண்டு போடுகிற வேலையும் செய்வார்கள். ஒரு புறம் பார்த்தால், இது சரியான அப்ரோச் இல்லை என்றாலும், மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார் என்பது எவ்வளவு சுவாரஸ்யமான செய்தி?

அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்…

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

 

1 Comment
  1. வாசகன் says

    அடடே, பன்னெண்டு பகுதி வந்திருச்சா? பரவால்லையே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹீரோயின் தர்றேன்… அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க! டைரக்டர் பேச்சால் பரபரப்பு

‘யய்யா... தயவு செஞ்சு என்னை சாக்லெட் பாய்ன்னு சொல்லிடாதீங்க...’ இப்படிதான் கெஞ்சுகிறார்கள் தற்போதைய ஹீரோக்கள் பலரும். ஏனென்றால் இப்போதெல்லாம் சாக்லெட் பாய்களை சாக்லெட் பேப்பர் அளவுக்கு கூட...

Close