லட்சுமிமேனன் கிழவி? விமல் கிண்டல்!

இன்று சென்னையில் நடந்த ‘மஞ்சப்பை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஏன்? லட்சுமிமேனனை கிழவி என்றால் அதிர்ச்சி வராதா என்ன? படத்தின் ட்ரெய்லரில் ஒரு காட்சியில் ராஜ்கிரணிடம் லட்சுமிமேனனை காட்டி விமல் சொல்வதை போல ஒரு காட்சி.‘ தாத்தா… அப்படியே இது கிழவி மாதிரியில்ல?’ ராஜ்கிரணும் ‘ஆமாம்’ என்று கூற, இந்த பிரஸ்மீட்டுக்கு லட்சுமிமேனன் வரட்டும். இப்படியெல்லாம் டயலாக்கை கேட்டுக் கொண்டு நடிப்பதற்கு எப்படி ஒப்புக் கொண்டீங்க?’ என்று கேட்டே கேட்டுவிடுவது என்கிற மூடில் இருந்தது மொத்த பிரஸ்சும்.

ஆனால் இப்படியெல்லாம் கேள்வி வரும் என்பதை தெரிந்தே பொண்ணு எஸ்கேப். களவாணி சற்குணமும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும் இணைந்து தயாரிக்கிற படம்தான் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்க, விமலின் தாத்தா கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். ஒரு கிராமத்து தாத்தா, பேரன் வசிக்கும் சென்னைக்கு வந்து அவர் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டையே என்ன பாடு படுத்துகிறார் என்பதை பொல்லாத நகைச்சுவையோடும், புரட்டிப் போடும் சோகத்தோடும் சொல்லியிருக்கிறாராம் அறிமுக டைரக்டர் ராகவன். இவர் களவாணி காலத்திலிருந்தே சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறவர்.

ராகவனோடு என்னை சந்திக்க வந்திருந்தார் சற்குணம். இந்த கதையை கேட்கும் போதே என் கண்கள் கலங்கிருச்சு. சரி, இந்த படத்தை தயாரிக்கலாம்ங்கிற முடிவுக்கு அப்பவே வந்துட்டேன். அதே மாதிரி படம் தயாராகி பல மாதங்கள் கழித்தும் என்னால் பார்க்க முடியாதளவுக்கு வேலை. எப்படியோ ஒரு நாள் ஒதுக்கிட்டு என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தேன். நான்தான் கண் கலங்கினேன் என்று நினைத்தால் குழந்தைகளும் அழுதிருந்தார்கள். அதற்கப்புறம், இந்த படத்தின் பாடலாசிரியர் யுக பாரதி என் தம்பி போஸ்சுக்கு போன் பண்ணி, ‘இந்த படம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத குறிப்பிட்ட படமாக இருக்கும்’ என்று சொல்ல, அதற்கப்புறம்தான் அவரும் படத்தை பார்த்து கண் கலங்கி உடனடியாக மஞ்ச பையை வெளியிடும் வேலைகளில் இறங்கினோம் என்றார் டைரக்டருக்கும் தயாரிப்பாளருமான லிங்குசாமி.

மஞ்சப்பை பாடல்களுக்கு இசை ரகுநந்தன். மெலடிகளுக்கு பெயர் போனவராச்சே? நமக்கு காண்பிக்கப்பட்ட இரண்டு பாடல்களும் பளிசென்று மனசில் ஒட்டிக் கொண்டன. அதைவிட ஒட்டிக் கொண்டவர் ராஜ்கிரண்தான். உடம்பில் உரமேறிய ஒரு தாத்தா இன்னொசன்ட்டாக செய்யும் அலம்பல்கள் அத்தனையையும் அவர் செய்ய செய்ய, அதையெல்லாம் பார்த்து சிரிக்காதவர்களுக்கு ஸ்பெஷலாக கருவேல பல்பொடி கொடுத்து கைவலிக்க தேய்க்க விடலாம்.

பின்ன என்னவாம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினிமாவுக்குள் கட்சிப்பணம்? கண் ஜாடை காட்டும் பெரிய ஹீரோ!

கோடம்பாக்கத்தில் சாமியார்கள் பணம் நிறைய உலவுவதாக வெகு காலமாகவே ஒரு பேச்சிருக்கிறது. அதற்கேற்றார் போல, ஒரு காலத்தில் கோடி கோடியாக கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர் ஒருவர், அதே...

Close