தனது சம்பளத்திலிருந்து ஏழைகளுக்கு ஒரு கோடி நிதியுதவி! அதிர வைத்த லாரன்ஸ்!

இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, கையிலிருக்கிற ஒரு கோடி பணத்தை காற்றை விடவும் லேசாக எண்ணி தானமாக கொடுத்து விடுகிற ஒரு நடிகரை பார்ப்போமோ என்கிற அளவுக்கு ஏக்கத்தை வரவழைத்துவிட்டார் ராகவேந்திரா லாரன்ஸ். இடம்- க்ரீன் பார்க் ஓட்டல்! நிகழ்ச்சி- அவரது புதிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா!

லாரன்ஸ் நடித்து கடைசியாக வெளியான படம் காஞ்சனா 2. இந்த படத்தின் மொத்த வசூல் 100 கோடி என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம். அதற்கப்புறம் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் லாரன்சை கொத்திக் கொண்டு போக தயாராக இருக்கும் நேரத்தில், வேந்தர் மூவிஸ் நிறுவனம் படக்கென்று அள்ளிக் கொண்டது அவரை. இந்த நிறுவனத்திற்காக இரண்டு படங்களை இயக்கி நடித்துத்தரப் போகிறார் அவர். ஒன்று மொட்ட சிவா. கெட்ட சிவா. மற்றொன்று நாகா.

இந்த நிகழ்ச்சியில்தான் வந்திருந்த மீடியாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார் லாரன்ஸ். இவ்விரு படங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை தன்னை வாழ வைத்த ரசிகர்களின் குடும்பங்களுக்காக செலவழிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இதை முறையாக செய்வது எப்படி என்று ஐஎஎஸ் அதிகாரி இறையன்புவிடம் ஆலோசனை கேட்டாராம். அதன்படி தமிழகத்திலிருந்து 100 நல்ல இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் தலா ஒரு லட்சம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மூலமாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக அந்த தொகை செலவிடப்படும் என்றார் லாரன்ஸ்.

அதுமட்டுமல்ல, முதல் நபரராக விஜய் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை நியமித்து அவர் வசம் ஒரு லட்சம் ரூபாய் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தார். வெறும் அட்ராக்ஷன் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல இந்த அறிவிப்பு. டிடி இயல்பியேலேயே இரக்க குணம் படைத்தவராம். ஒவ்வொரு மாதமும் லாரன்ஸ் நடத்தி வரும் அநாதை குழந்தைகள் டிரஸ்ட்டுக்கு வந்து அங்கிருக்கும் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்கி தருவாராம். மூன்று குழந்தைகளை தத்தெடுத்து அவர் படிக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த மேடையில் கூறி எல்லாரையும் மீண்டும் அதிர வைத்தார் லாரன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலி ஆடியோ வெளியீட்டு விழா! பேசியே அசத்திய விஜய்!

இப்போதெல்லாம் நன்றாக பேசவும் கற்றுக் கொண்டார் விஜய். (அரசியல் ஆசை மனசுக்குள்ள வந்தாச்சு, அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி?) நேற்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர...

Close