நடிகர் ஜீவா தயாரிக்கும் படத்தில் நடிகர் லாரன்ஸ்!
லாரன்ஸ் பெரிய மாஸ்டராக இன்டஸ்ட்ரியில் வலம் வந்த நேரத்தில் சிறுவனாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்திருப்பார் ஜீவா. அதற்கப்புறம் அவரும் ஹீரோவாகி, லாரன்ஸ்சுக்கு டஃப் கொடுக்கும் நோக்கத்தில் படங்களில் வெறி கொண்டு நடித்து வருவதெல்லாம் ஊரறிந்த கதை. ஆனாலும் லாரன்ஸ்சின் மார்க்கெட் உயரம் இன்றைய தேதியில் ஜீவாவால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். அது ஒருபுறமிருக்க, லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஜீவாவின் அப்பா ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க, இணைத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் ஜீவா என்பதுதான் முக்கியமான விஷயம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்த ‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ படத்தை வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக்தான் இது.
ராகவா லாரன்ஸ்சுடன் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப், தம்பிராமைய்யா, சதீஷ், கும்கி அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், சாம்ஸ், வி.டி.வி.கணேஷ், காக்காமுட்டை ரமேஷ், சரண்தீப், வம்சி, பாவாலட்சுமணன், சரத், ஜி.வி.குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படமாகும்.