இஷிதாவை பார்த்தேன்…. பாடல் வந்திச்சு! மேடையில் கதைவிட்ட லிரிக் ரைட்டர்!
‘உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்… ’ என்றொரு எம்ஜிஆர் பாடல் உண்டு. ஒருவரை பார்த்தா பாட்டு வருமாம்ல, அதெப்பிடி? என்று சில லியோனியிஸ்டுகள் கூட அந்த வரிகளை கேலி செய்திருக்க கூடும். ஆனால் நிஜத்தில் அப்படி நடந்து அதையும் மேடையில் பகிர்ந்து கொண்டார் ஒரு சினிமா பாடலாசிரியர். சரத்குமார் கதை நாயகனாக நடிக்கும் ‘நீ நான் நிழல்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. மலேசியாவில் பாதியும் இந்தியாவில் மீதியுமாக எடுக்கப்பட்ட படம்தான் அது.
இப்படத்தின் நாயகி இஷிதா. இந்த விழாவுக்கு அவரும் வந்திருந்தார். இஷிதா பற்றி பேசும்போதுதான் பாடலாசிரியர் கண்மணி ராஜா முகமது பின்வருமாறு குறிப்பிட்டார். ‘மியூசிக் டைரக்டர் ஜெசின் ராஜ் என்கிட்ட சுச்சுவேஷன் சொல்லிட்டார். ஆனால் எழுத வேண்டிய நான் வார்த்தைகள் வராம சிக்கிட்டேன். என்னோட தடுமாற்றத்தை பார்த்தவர், இஷிதாவை கொஞ்ச நேரம் பார்த்துகிட்டேயிருங்கன்னு சொன்னார். எனக்கு புரியல. ஏன்னு கேட்டேன். நான் சொல்றேன். நீங்க கேளுங்க. பாத்துக்கிட்டேயிருங்கன்னாரு மறுபடியும். அப்புறம்தான் எனக்கு வரிகளே மனசுல தோணுச்சு. அந்த பாடல் அற்புதமா வந்திருக்கு’ என்றார். கவிஞர் கதை விடுகிறார் என்று புரிந்தாலும் இஷிதாவின் அழகு அவரது பொய்யை நிஜமாக்கியது. (இப்படியே எல்லா பாடலாசிரியர்களும் ஹீரோயினை பார்த்துகிட்டே பாட்டெழுதுறேன்னு கிளம்பினா நிலைமை என்னாகும்?)
பேஸ்புக் மூலம் வர்ற தீமைகளை பற்றி அலசுகிற படம்தானாம் இது. மலேசியாவில் வரிசையாக கொலைகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. அதை கண்டு பிடிக்கும் ஸ்பெஷல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சரத். சென்னையிலிருந்து ஒரு இளைஞனை பேஸ்புக் மூலம் மலேசியாவுக்கு அழைக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ். கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ராபின்சன்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். 12 வருஷ போராட்டத்திற்கப்புறம் அவர் இயக்குகிற முதல் படமாம் இது.
இந்த படத்தின் நான் பாடல் எழுதல. ஆனாலும் வந்திருக்கேன் என்றார் கவிஞர் சினேகன். இவருக்கும் மலேசியாவுக்கும் இருக்கும் உறவுதான் உலகமே அறிந்ததாச்சே? ஆங்… சினேகனை உலக பேமஸ் ஆக்கிய அந்த கட்டிப்பிடி வைத்தியம் கிளம்புனதே அங்கிருந்துதானே!