சுய நினைவோடு பேசுங்க சார்! சூர்யாவும் மலேசிய மல்லுகட்டும்!

கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறவிருக்கும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேசுவதற்காக சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக ஒரு செய்தி அந்த நாட்டில் பரவியிருக்கிறது. முன்னணி வெப்சைட்டுகளிலும் நாளிதழ்களிலும் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் “அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. என்னை பற்றி வரும் அவதூறு செய்திகளை யாரும் நம்ம வேண்டாம்” என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சூர்யா.

சூர்யாவின் வெள்ளை வெளேர் இமேஜில், இப்படி இங்க் அடித்த அந்த புண்ணியவான் யார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கிறது.

சூர்யாவையும் சிவகுமாரையும் அழைப்பதற்காக அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளரான அருண்துரைசாமி இங்கிருக்கும் ஒருவரிடம் பேசியிருக்கிறார். அவர் சூர்யாவின் மேனேஜர் என்றோ, பிஆஓ என்றோ சொல்லிக் கொண்டு இந்த பேச்சு வார்த்தையை நடத்தியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வருவதென்றால் 2 லட்சத்து 50 ஆயிரம் மலேசிய ரிங்கிட் சூர்யா சார்பில் கேட்கப்பட்டதாகவும் கூறுகிறார் அருண் துரைசாமி.

இதை நம்பி சூர்யா வருவதாக அங்கு விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில், தான் வரப்போவதில்லை என்று மறுத்துவிட்டாராம் சூர்யா. அங்கிருக்கும் சூர்யாவின் ரசிகர்கள் இதுபற்றி கேட்டபோதுதான், அவர் தரப்பில் பணம் கேட்ட தகவல் கசிந்திருக்கிறது.

“என்ன… சூர்யா பணம் கேட்கிறாரா?” என்று எல்லாரும் வாயை பிளக்கிறார்கள். வாயை பிளக்கிற எல்லாருக்கும் அடுக்கடுக்காக சில கேள்விகள்.

தன் வேலையையெல்லாம் விட்டுவிட்டு ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ யில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் ஏதும் சூர்யாவுக்கு இருக்கிறதா? அப்படி இருந்தாலும், அதை ஓசியில் செய்து தர வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இருக்கிறதா? நீங்கள் பேசியது போல பணத்தை செலுத்தியிருந்தால், வாக்குறுதி கொடுத்த சூர்யா வந்திருப்பாரே? அப்படியென்றால் பணம் தருவதாக சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் கையை விரித்தீர்களா? ஒருவேளை அவர் அகரம் அறக்கட்டளை குறித்துதான் பேச ஆசைப்பட்டார் என்று சொன்னாலும் நம்பும் படியாக இல்லையே? அகரத்தின் பணி எவ்வளவு சிறப்பானது என்பது இங்கிருக்கும் தமிழருக்கு தெரியும். அதற்கப்புறம் அவர் மலேசியாவில் வந்து அகரம் குறித்து பேசி எதை வாரிக்கட்டப் போகிறார்?

இந்த கேள்விகள் ஒருபுறம் அநாதையாய் தொங்கிக் கொண்டிருக்க, “சூர்யா என் மீது வழக்கு போடட்டும். நான் சட்டப்படி அதை எதிர்கொள்வேன்” என்று கூறியிருக்கிறார் அருண்துரைசாமி.

நிகழ்ச்சிக்கே வரலேன்னு சொல்ற ஒரு மனுஷன் வேலை மெனக்கெட்டு உங்களை கோர்ட்டுக்கா கூப்பிடப் போகிறார்? சுயநினைவோடு பேசுங்க சார்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்ப இதுதான் சென்னை தியேட்டரில்… (20/05/16)

Close