‘ எழுதிட்டு போகட்டுமே எடுபட்ட பயலுவ… ’
மணிரத்னம், பாரதிராஜா போன்ற டாப் இயக்குனர்கள் (இப்போதல்ல) படங்களில் நடிப்பதற்கு ஹீரோக்களும் ஹீரோயின்களும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியதெல்லாம் ஆறி அவிந்த கதையாகிவிட்டது. என்னதான் ரங்கநாதன் தெருவுக்கு ‘நெரிசல் தெரு’ என்கிற கெட்ட பெயர் இருந்தாலும், சென்னையிலிருந்து கொண்டு ஒரு முறையாவது உள்ளே போய் வராவிட்டால், ‘என்ன மனுஷன்யா நீ’ என்கிற விமர்சனம் வருமல்லவா? அப்படிதான் இவர்களது படங்களில் நடிக்காமல் விட்டாலும்….
‘லெஜன்ட்’ என்று எக்காலத்திலும் விமர்சிக்கப்படுகிற இவர்களின் படங்களில் சகித்துக் கொண்டு நடிக்க வந்தாலும், சொந்த வாயாலேயே அவர்களுக்கு சோதனை கொடுக்கிற வழக்கம் இருக்கிறது இவ்விருவருக்கும். ஒரு ஹீரோ பொதுவாக ஐம்பது லட்சம் வாங்குகிறார் என்றால், இவர்கள் தன் படங்களில் நடிக்க ஐந்து லட்சத்திலிருந்து சம்பள பேச்சு வார்த்தைய ஆரம்பிப்பார்கள். இவர்கள் சார்பாக பேச வரும் உயர்மட்டக்குழு புரோக்கர்கள், ‘வேற படத்துக்கு நீங்க வாங்குறது அவ்வளவு… பட் எங்க சார் படத்துக்கு எவ்வளவு கேட்கிறீங்க?’ என்று ஒரேயடியாக மட்டப் பலகை வைத்து அளக்க ஆரம்பிப்பார்கள்.
‘ராவணன் ’ படத்தில் நடித்த விஷயத்தில் மட்டும் பெருமளவு சம்பளத்தை விட்டுக் கொடுத்து நடித்தார் விக்ரம். அதிலும் கடைசியில் பாக்கி. அதையும் கேட்காமலே விட்டுவிட்டாராம் விக்ரம். இப்படிதான் தமிழ்சினிமாவில் கிரீடம் முளைத்த இயக்குனர்கள் ஹீரோக்களை படுத்தி வருகிறார்கள். அதுவே ‘உங்க சம்பளத்தை குறைச்சுக்க முடியுமா?’ என்று கேட்டுப் பாருங்களேன். அயர்ன் பாக்சை ஐஸ்பாக்சில் போட்ட மாதிரி ஒஸ்இஸ்உஸ்…. என்று கதறிவிடுவார்கள் இதே இயக்குனர்கள். இப்போது இந்த இருட்டு சித்தாந்தத்தால் மகேஷ் பாபு, நார்ஜுனா இருவரையும் இணைத்து, தான் இயக்கவிருந்த படத்தை தானே கெடுத்துக் கொண்டாராம் மணிரத்னம். அந்த படம் டிராப் என்று பத்திரிகைகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கிறது.
இதற்கெல்லாம் பதில் சொல்லவா போகிறார் அவர்? ‘எழுதிட்டு போகட்டுமே எடுபட்ட பயலுவ…’ என்றுதான் எடுத்துக் கொள்வார். சில பில்லர்கள் எதற்கும் அசைந்து கொடுப்பதில்லை. மணிரத்னம் உட்பட!