பாலாதான் அப்படி படம் எடுக்கணுமா? மன்சூரலிகான் அழிச்சாட்டியம்

திடீரென்று கழைக் கூத்தாடிகள் மீதும், கரகாட்டக்காரர்கள் மீதும் கரிசனம் வந்திருக்கிறது தமிழ் பட இயக்குனர்களுக்கு. ஒரு புறம் பாலா கரகாட்ட நாதஸ்வர கலைஞர்களை பற்றி படம் எடுக்க முனைந்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று கிளம்பியிருக்கிறார் மன்சூரலிகான்.

பாலா- மன்சூர் இருவரும் ஒரே பின்னணியில் படம் எடுத்தாலும், அவ்விரு படங்களுக்கும் இடையே குறைந்தது 100 கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும் என்பது சத்தியம். இருந்தாலும் தனக்கேயுரிய ஆயிரம் அழிச்சாட்டியங்களுடன் இந்த படத்தை இயக்கி வருகிறார் மன்சூர். இந்த படத்தில் இடம்பெறும் 11 பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறாராம். பாடியவர்கள் அத்தனை பேரும் புதுசு. அதில் மன்சூரின் வாரிசுகள் மூன்று பேரும் பாடியிருக்கிறார்கள்.

ஒரு அரசியல்வாதிக்கும் கழைக் கூத்தாடிகளுக்குமான லடாய்தான் முழு படமுமாம். நல்லா டான்ஸ் ஆடுற ஒரு பையனைதான் தேடிகிட்டு இருக்கேன். அப்படி கிடைச்சான்னா அவன்தான் ஹீரோ என்கிறார் மன்சூர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி இருவரும் வந்திருக்க, செல்வமணியின் பேச்சு நல்ல பிளாஷ்பேக்.

மன்சூருக்கு ஒண்ணுமே தெரியாது. ஆனால் எல்லா தெரியும்னு சொல்லிடுவாரு. கேப்டன் பிரபாகரன் படத்துல அவரை அறிமுகப்படுத்தும்போது குதிரை ஓட்ட தெரியுமான்னு கேட்டேன். ப்ரமாதமா ஓட்டுவேண்ணே..ன்னு சொல்லிட்டாரு. நானும் லோ ஆங்கிள் ஷாட் வச்சுட்டு குதிரையோட மேலே வாய்யான்னு சொல்றேன். ஆளு வரவேயில்லை. ஏன்யான்னா குதிரை ஓட மாட்டேங்குதுன்னாரு. இப்படியே 1500 பிலிம் வேஸ்ட்டா போச்சு. அப்புறம்தான் தெரியுது, லகானை விட்டால்தானே குதிரை ஓடும்? அப்புறம் ஆக்ஷன்னு சொல்லும்போது லகானை விட்ருன்னு சொல்லிக் கொடுத்தோம்.

பார்த்தா… குதிரை மட்டும்தான் மேலே வருது. அது முதுகுல மன்சூரை காணும். எட்டி பார்த்தா ஒரு பள்ளத்துல விழுந்து கிடக்குறாரு. அப்படிப்பட்ட மன்சூர் இன்னைக்கு எல்லாத்தையும் கத்துகிட்டு எல்லா துறையிலும் பிரகாசிக்கிறார் என்று வியந்தார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த கவிஞர் கருணாநிதி, அதற்கப்புறம் மைக்கை பிடித்து சொன்னாரே ஒரு வார்த்தை?

‘குதிரையோடு ஒரு போதும் சிங்கம் வராது..’ கருணாநிதியின் ஜால்ரா தாங்க முடியாமல் கூட்டம் பிய்த்துக் கொண்டு ஓடியது, அந்த குதிரையை விட வேகமாக!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லைக்கா? டிஸ் லைக்கா? – துளைக்கும் பிரஸ் – நழுவும் விஜய்

இலங்கை பிரச்சனையை ஆயுதமாகவும் அதே சமயத்தில் கேடயமாகவும் பயன்படுத்தி வருவது இந்திய, தமிழக அரசியல்வாதிகள்தான் என்றால், அவர்களுக்கு போட்டியாக இப்போது இறங்கியிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள். உலகம் முழுக்க நடைபெறும்...

Close