மசாலா படம் – விமர்சனம்

ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் குடல் வரைக்கும் கையை விட்டு வயிறு மொத்தமும் சேதப்படுத்துகிற கும்பல் குறித்த அச்சம் தற்போதைய தயாரிப்பாளர்களுக்கு நிறைய உண்டு. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ‘வலைதள’ வன்முறைதான் இப்படத்தின் பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும்! வெளியான முதல் காட்சியிலேயே RIP போட்டு ஆரம்பித்து வைக்கிற இந்த கும்பலில் ஒருவனை பிடித்து, ‘வேணும்னா நீ ஒரு படத்தை எடுத்துக் காட்டேன்’ என்று ஒரு தயாரிப்பாளர் சவால் விட, யதார்த்தத்தின் அருகில் நின்று ஒரு படம் எடுக்க கிளம்புகிறான் அவன்.

அவன் சந்திக்கும் சவால்கள் என்ன? உருப்படியாக ஒரு படம் எடுக்க முடிந்ததா? அதுதான் இந்த மசாலா படம்! தக்காளி, பீன்ஸ், பீட்ருட்டையெல்லாம் சமையல் குறிப்பை பார்த்தே நறுக்குகிற சமையல்காரனிடம் என்ன வருமோ? அதுதான் இந்த படத்தின் முதல் பாதியில் (வெ)வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் நம்மை நிமிர வைக்கிற திரைக்கதை, என்ட் கார்டு போடும்போது, ஓஹோ… இப்படிதான் படம் எடுக்கணும் போல… அப்படி எடுத்தால்தான் ஓடும் போல… என்றெல்லாம் எண்ண வைத்து அனுப்புகிறது. ஆக மொத்தம் உரைப்பும் இனிப்புமான ‘ஒரு மாதிரி’ மசாலா!

மேல் பாக்கெட்டில் கையை விட்டதும் தெரியாது, அதற்குள் ஒரு வெடியை செருகி பற்ற வைத்ததும் தெரியாது அப்படியொரு ஸ்டைல்தான் மிர்ச்சி சிவாவுக்கு. இந்த படத்தில் அதை ஆங்காங்கே செய்கிறார் அவர். ஒரு மிடில் கிளாஸ் பையனுக்கு வருகிற ஹை கிளாஸ் பிகருடனான காதலும், அதை அவர் அனுபவிக்கிற அழகும் பிரமாதம். “அவ்ளோ சூப்பர் பிகர் நம்ம கையில” என்று சொல்வதற்காகவே லிப்ட் கேட்டு வரும் லட்சுமிதேவியை நண்பர்களின் ஸ்பாட் வரைக்கும் கொண்டு போய் திரும்ப திரும்ப ரவுண்டடிக்கும் போது தியேட்டர் பணால் ஆகிறது.

சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கே வந்துவிடும் லட்சுமியை, குடும்பத்தினரின் கொள்ளிக்கட்டை சந்தேகத்தை தாண்டி உபசரிக்கிற காட்சியெல்லாம் மிர்ச்சிக்கு மட்டுமே கைவந்த சொஜ்ஜி! (ஆமா… ஏன் தலைவா படத்துக்கு படம் இவ்ளோ கேப்?)

பாபி சிம்ஹா கடலோர ரவுடியாம். நம்ம அயோத்திக்குப்பம் வீரமணியை நினைச்சுக்கோங்க! அரையிருட்டு கேமிரா வெளிச்சத்தில் ஆள் மிரட்டுகிறார். கல்லுக்குள் ஈரம் மாதிரி, லட்சுமி கேட்டுவிட்டார் என்பதற்காக இருட்டில் அவரை அழைத்துக் கொண்டு கடலுக்குள் கிளம்புகிறார். திரும்பி வந்தால், உயிர் நண்பனை போட்டுத்தள்ளியிருக்கிறது எதிர் கோஷ்டி. அதற்கப்புறம் செம டென்ஷன் ஆகும் அவர் லட்சுமியை தள்ளி வைத்து, கொலைகாரர்களை போட்டு தள்ள தள்ள… அந்த கதையை அப்படியே சினிமாவாக்க உதவுகிறார் லட்சுமி. பாபிசிம்ஹாவின் என்ட் கார்டு, நிஜமாகவே சோகம். அத்தனை கோரத்திலும் அவர் சிரித்தபடியே கிடக்கிறாரே… அதுதான் ‘போர்க்களத்தில் ஒரு பூ!’

லட்சுமி பின் தொடரும் மூவரில் முதல் இருவரது போர்ஷனில் இருக்கிற விறுவிறுவும் செம செமவும், அந்த மூன்றாவது நபரான பணக்கார பையன் விஷயத்தில் இல்லையே நைனா! “இவ்வளவும் என் சொத்து. எங்க அப்பா அம்மா எனக்கு விட்டுட்டு போனது” என்று திமிரோடு திரியும் அவனுக்கு, பொட்டில் அடித்த மாதிரி அட்வைஸ் பண்ணும் லட்சுமியும், அந்த ஸ்பாட்டில் அவனும் (மட்டும்) ஆஹா! ‘நீ சந்தோஷமா இருக்கணும் சரி. அதுக்காக மத்தவங்க மனசை கஷ்டப்படுத்துறது எப்படி சரியாகும்?’ வசனங்களில் பளிச் இது!

தயாரிப்பாளராக நடித்திருக்கும் தாடி வெங்கட், கடைசியில் ஒரு படம் ஏன் இப்படி இருக்க வேண்டும்? ஒரு ஹீரோ ஏன் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கொடுக்கிற விளக்கம், தென்னிந்திய சினிமா ஹீரோக்களின் பொக்கிஷ பார்முலா! அதை அவர் வாயால் கேட்பது இன்னும் பொருத்தம்!

கார்த்திக் ஆச்சார்யாவின் இசையில் அந்த சென்னை பாடல் தூள்! பின்னணி இசைக்கு நிறையவே மெனக்கட்டிருக்கிறார். காதுகளை சேதப்படுத்தவில்லை என்பதே முதல் சந்தோஷம். படத்தின் இயக்குனரான லட்சுமண் குமாரே இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இருந்திருப்பதால், தேவைக்கு மிகாத லைட்ஸ். சூப்பர்ப்!

பாக்கெட் மசாலா கொஞ்சமும், ஆச்சி கையால் அரைச்சது கொஞ்சமுமாக ருசித்திருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. su.ganeshkumar, kumudam says

    Superp

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மனோரமா உடலுக்கு இறுதி அஞ்சலி! மனைவி ஷாலினியுடன் நேரில் வந்தார் அஜீத்!

தமிழ்சினிமா பிரமுகர்களின் மரணம் எப்போது நிகழ்ந்தாலும், அங்கு அஜீத் வந்தாரா? விஜய் வந்தாரா? என்ற கேள்விகள் எழாமலிருக்காது. இயக்குனர் சிகரம் பாலசந்தர் மறைவுக்கோ, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி...

Close